ரஹ்மான் இசை நிகழ்ச்சி பிரச்சினை தீவிரமாகிறது.
ரசிகர்கள் அலைகழிக்கப்பட்டார்கள், இருக்கை கிடைக்காமல் அலைந்தார்கள், பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள்…இப்படி ஏகப்பட்ட பிரச்சினகளுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மானை மதவாதியாக அடையாளப்படுத்துகிறது பாஜக.
தமிழ்நாட்டு பாஜகவின் மாநிலப் பொருளாளராக இருக்கும் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் ஒரு பதிவை பதிந்திருக்கிறார்.
’ரகுமான் முழுக்க முழுக்க மதவாதி. அவருக்குள் இருக்கும் இசை பொதுவானது. அவர் செயல் சிந்தனை மதமானது. பொதுவானதை கேட்க செல்லும்போது மதவாதியின் மனம் செயல்படுகிறது. விளைவு பொதுவான இந்துக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இப்போதாவது அதை புரிந்து கொள்கிறீர்களா?
யாரை எங்கே எப்படி வைக்க வேண்டும் என இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்’
என்று சொல்கிறது அந்தப் பதிவு. பத்மவிபூஷன் விருது பெற்றவர். இரண்டு ஆஸ்கர் வாங்கியவர். பல தேசிய விருதுகளை வாங்கியவர். தனது இசையால் தமிழர்களை மட்டுமில்லாமல் இந்திய மக்கள் அனைவரையும் வசீகரித்தவர். அவரை மதவாதி என்று ஒற்றை வார்த்தையில் அடக்குகிறார் எஸ்.ஆர்.சேகர்.
எஸ்.ஆர்.சேகர் மட்டுமல்ல, பாஜகவின் தொழிற் பிரிவு பொறுப்பாளர் செல்வகுமார், தனது ட்விட்டர் பதிவில் ‘பட வாய்ப்புக்கள் குறைந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி ₹25 கோடிகள் வரை சம்பாதித்துள்ளார் @arrahman. இதற்கு தமிழக அரசும் முழு ஆதரவு’ என்று ஏ.ஆர்.ரஹ்மானை ஏமாற்றுக்காரர் என்று வசை பாடுகிறார்.
சமீப காலமாக வெளிப்படையாக ஏ.ஆர்.ரஹ்மான் அரசியல் பேசவில்லையென்றாலும் அவரது கருத்துக்கள் பாஜகவுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தி தெரியாது என்கிறார். தமிழணங்கே என்று ஓவியத்தை பதிவிடுகிறார். உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு இசையமைக்கிறார்…. இப்படி பல விஷயங்கள் பாஜகவுக்கு ஏற்புடையதாக இல்லை.
இவை மட்டுமில்லாமல் ரஹ்மானுக்கு நேர் எதிரில் இருக்கும் இளையராஜாவை தனது வளையத்துக்குள் பாஜக வைத்திருக்கிறது. இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர்கள் சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள். ஆனால் ரஹ்மானுக்கு அப்படியல்ல இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் இசையமைப்பாளர். அவர் பாஜகக்கு மறைமுகமாக எதிர் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பது பாஜகவினரை எரிச்சலடைய செய்திருக்கிறது.
தற்போது பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கரத்தை நீட்டியிருக்கிறார். எனது மகளும் அவரது நண்பர்களும் டைமண்ட் பாஸ் வைத்திருந்தார்கள் ஆனாலும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பிரச்சினை. நாம் அனைவரும் இந்த கடினமான சமயத்தில் ரகுமானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரையுலகத்திலிருந்து ரஹ்மானுக்கு ஆதரவு கரங்கள் நீண்டுக் கொண்டிருக்கின்றன. நான் ரஹ்மானுடன் நிற்கிறேன் என்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். யுவனின் ஆதரவையும் ‘அவர் பெரிய பாய் இவர் சின்ன பாய்’ கிண்டலடித்து வெறுப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் தீவிர பாஜக, வலதுசாரி ஆதரவாளர்கள்.
நடிகர் கார்த்தி, நமக்கு அன்பைக் கொடுத்தவர் ரஹ்மான் அவருக்கு நாம் வெறுப்பைக் கொடுக்கக் கூடாது அன்பைத் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
சரி, ரஹ்மான் என்ன சொல்கிறார்?
”என் மகனிடம் சொன்னேன். நாம் மற்றவர்களுடன் கூட்டாக இணைந்து செயல்படும்போது அவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். நம்மைதான் பார்ப்பார்கள். நம்முடன் கூட்டு சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நாம் நிலைத்திருப்போம். இனி இசையைத் தாண்டியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” ஆங்கில நாளேடான இந்துவுக்கு ரஹ்மான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மைதான். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரஹ்மானுக்குதான் கெட்டப் பெயர், அவருடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு லேசான பாதிப்புதான். இன்னும் சொல்லப் போனால் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யார் என்பது கூட யாருக்கும் தெரியாது. இது ரஹ்மான் நிகழ்ச்சி. ரஹ்மான் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதுதான் ரசிகர்களின் கருத்து.
ரஹ்மானின் சென்னை நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிகழ்ச்சி ஆனால் அப்போது மழை இருந்ததால் நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. சென்னைக்கு வெளியே ஆதித்யாராம் நிலப் பரப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தியது ACTC Events என்ற நிறுவனம். நிகழ்ச்சி ஏற்பாடுகள் சொதப்பியதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது இந்த நிறுவனம்.
டிக்கெட்டை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இது முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடி என்பது எல்லோருக்கும் தெரிகிறது. புரிகிறது. ஆனால், ரஹ்மான் இதை கவனித்திருக்க வேண்டாமா என்பதுதான் அவர்கள் ஆதங்கம். அதிர்ச்சி.
இன்று ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜார் ஒரு ட்விட்டர் பதிவிட்டிருக்கிறார்.
நேற்றிரவிலிருந்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை ஏமாற்றுக்காரர் என்கின்றன. சிலர் மட்டமான அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நடந்ததற்கு 100 சதவீத காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். ஆனால் அவற்றுக்கு ரஹ்மானும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2016ல் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சியை சென்னை, கோவை, மதுரையில் நடத்தினார்.
2018ல் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மேற்கத்திய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
2020ல் கொரோனாவில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல மாதங்களுக்கு உணவு வழங்கினார்.
2022ல் திரைப்பட லைட்மேன் சங்க உறுப்பினர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களுக்காகவும் இலவசமாய் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தார் ரஹ்மான்.
எதையும் பேசுவதற்கு முன்பு யோசித்துவிட்டு பேசுங்கள்.