தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக, துர்கா ஸ்டாலின் சகோதரரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான மருத்தவர் ராஜமூர்த்தி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
‘சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற அமைச்சர் உதயநிதி பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக இந்து மதத்துக்கு எதிராகவும் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்பதாகவும் அவர் பேசியதாக வட இந்தியாவில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஒரு ஆன்மிக சொற்பொழிவாளாராக இந்த சர்ச்சை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
உதயநிதி ஸ்டாலின் பேச்சை முழுமையாக நான் கேட்டேன். அவர் இந்து மதத்துக்கு உள்ளே சென்றோ அந்த மதத்தை தாக்கியோ பேசவில்லை. சனாதனத்தைத்தான் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதனம் என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு. அதை மறைத்துவிட்டு, இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்பதாக உதயநிதி பேசிவிட்டார் என திரிக்கிறார்கள். இதன்மூலம் இந்துக்கள் அனைவரும் உதயநிதிக்கு எதிராக, திராவிட இயக்கத்துக்கு எதிராக மாறிவிடுவார்கள். இதனை வரும் அடுத்த தேர்தலில் பயன்படுத்தி, வாக்கு வங்கியாக அறுவடை செய்யலாம் என அவர்கள் தவறாக கணக்கிடுகிறார்கள்.
சனாதன தர்மம் வேறு இந்து மதம் வேறு என்றால், இரண்டும் எந்த வகையில் வேறுபட்டது? சனாதன தர்மம் என்றால் என்ன?
நீங்கள் சொல்லும் சனாதன தர்மம் என்பதில் உள்ள சனாதனம், தர்மம் என்ற இந்த இரண்டு சொல்களுமே தமிழ் சொல்கள் அல்ல. இரண்டும் முழுக்க முழுக்க வடமொழி சொல். சனாதனம் என்பதற்கு நிலையானது, என்றும் இருப்பது, மாற்ற முடியாதது, வகுக்கப்பட்டது என்றெல்லாம் பலவிதமாக பொருள் சொல்கிறார்கள். தர்மம் என்பதற்கு நேரான தமிழ் சொல் அறம். ’அறம் பாடிற்றே’ என்று சங்க கால புலவர்கள் பாடியுள்ளார்கள். நீதி, நேர்மை, தானம், எல்லோருக்கும் நல்லது செய்வது, கருணை, அன்பு எல்லாமே அறம் என்பதில் அடங்கிவிடும்.
இந்த சனாதனம் வருவதற்கு முன்பு இங்கே பல்வேறு வழிபாட்டு முறைகள் இருந்துள்ளது. இன்றுள்ள இந்து மதம் என்பதை ஒரு கதம்பம் என்று சொல்லலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு இல்லாமல், பழங்காலத்தில் இங்கே நிலவிய பல வழிபாட்டு முறைகளின் தொகுப்பு. சிவனை வழிபடும் சைவம், சிவன் மனைவி பார்வதியை வழிபடும் சக்தி வழிபாடு, கொற்றவை வழிபாடு, திருமாலை வழிபடும் வைணவம், முருகனை வழிபடக் கூடியவர்கள், விநாயகரை வழிபடக்கூடியவர்கள். சூரியனை வழிபடக் கூடியவர்கள் என ஆறு வகை வழிப்பாட்டு முறைகள் இங்கே இருந்துள்ளது. ‘அறு வகை சமயத்தார்’ என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகரே பாடுகிறார்.
இன்னொரு பக்கம் நாட்டார் வழிபாடும் இருந்துள்ளது. கொங்கு நாடு பக்கம் அண்ணன் சாமி, அதாவது பொன்னர் சங்கரை வழிபட்டார்கள். சைவ செட்டியார்கள் குல தெய்வம் காஞ்சி காமாட்சி. கிராம தேவதைகள், முனீஸ்வரன், கருப்பண்ண சாமி என பல நாட்டார் வழிபாட்டு முறைகளும் இங்கே இருந்துள்ளது. கருவாடு, கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை, கள்ளு என்று அவன் என்ன சாப்பிடுவானோ அதையே கடவுளுக்கு படையலாக வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.
இந்த நாட்டார் வழிபாட்டு முறைகளுக்கும் முதலில் சொன்ன அறு வகை வழிபாட்டு முறைகளுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கிடையாது. அவர்கள் வழிபட்டது இந்திரன், வருணன், வாயு பகவானை.
இந்நிலையில், ஆரியர்கள் வழிபாட்டு முறைகளையும் ஏற்கெனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளையும் ஒன்றாக்கி இந்து என்ற மதப் பெயரை ஆங்கிலேயர்கள்தான் வைத்தார்கள். இது தங்கள் குல வளர்ச்சிக்கு உதவியாக இருந்ததால் அதையே பிடித்துக்கொண்டு பேசுகிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். அதனால்தான், ஆரியர்களின் ஏமாற்றுகள் இங்கே சாத்தியமில்லாமல் உள்ளது. இந்த சனாதன சர்ச்சையிலும் அதுதான் நடக்கும்.
தொடரும்