தமிழ்நாடு அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து, ‘மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்னும் தலைப்பில் சேலம், ஈரோடு பதிப்புகளில் தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் தினமலர் நாளிதழுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களும் தினமலரின் இந்த செயலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்கள். அவர்கள் கருத்துகள் என்ன? பார்ப்போம்…
மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப் புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
கி. ராமசுப்பு
தினமலர் சென்னை பதிப்பு ஆசிரியர்
அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு- சேலம் ‘தினமலர்’ பதிப்பில் இன்று (ஆக.,31) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க, வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும் கி. ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது, திரு. சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த, 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு – சேலம் தினமலர் பதிப்பினையும் அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். வழக்கு நிலுவையில் இருப்பதால் தினமலர் நாளிதழ் பெயர் ஒன்றாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
லட்சோப லட்சம் வாசகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையினைப் பெற்றிருக்கும் ‘தினமலர்’ பெயரிலேயே இப்படியொரு தரம்தாழ்ந்த செய்தியினை வெளியிட்டு, தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு- சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
ராஜேஷ்குமார்
எழுத்தாளர்
அச்சுக்குப் போகும் முன்பு, அரை நொடியாவது யோசிக்க, வேண்டாமா?
உணவு என்பது உன்னதமானது.
டாய்லெட் என்ற வார்த்தையைக் கூட ரெஸ்ட் ரூம் என்று சொல்லிப் பழகிவிட்ட காலத்தில் கக்கூஸ் போன்ற கழிசடை வார்த்தைகள் எதற்காக? ஏன் இவ்வளவு வன்மம்?
சில காயங்களுக்கு மருந்து இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் உணர்த்தும்.
பட்டுக்கோட்டை பிரபாகர்
எழுத்தாளர்
தினமலர் தலைப்பு!
அருவருப்பின் உச்சம்!
அநாகரிகத்தின் உச்சம்!
வக்கிரத்தின் உச்சம்!
ருத்ரன்
மனநல மருத்துவர்
ஆத்திரம் வருகிறது.
இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு செய்தியை ஒருவன் எழுத, அதை ஆமோதித்து அந்தப் பத்திரிகை ஆசிரியன் வெளியிட வேண்டுமென்றால் உள்ளே எவ்வளவு வன்மமும் கேவலமான கொடுமனமும் இருக்கிறது என்பது தெரிகிறது.
குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் பற்றிய அவர்களது கண்ணோட்டம் கொழுப்பும் கொடூரமும் மிகுந்த பார்வையோடு இருக்கிறது என்றால் அந்தக் கூட்டம் எவ்வளவு அற்ப, ஆபத்தான உயிரினங்கள் என்றே தெளிவாகிறது.
வெறும் நிராகரிப்பு போதாது. கண்டனம் செயல்களிலும் சட்டவழியாகவும் இருக்க வேண்டும்.
எஸ்.கே.பி. கருணா
எழுத்தாளர், திமுக பேச்சாளர்
தினமலர் இதைவிடவும் அதிக வன்மங்களையும் கொடூரமான விஷத்தையும் எளிய மக்களின் மீதும் அவர்களுக்கான அரசுத் திட்டங்களின் மீதும் தினமும் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்!
என்ன! அவைகளை உள் பக்கங்களிலும் இணைப்பு இதழ்களிலும் அவர்களின் கும்பலுக்கு மட்டுமே புரியும்படியாக ஒளித்து வைப்பார்கள். இன்று முதல் பக்கம் தலைப்புச் செய்தியில் வெளியிட்டதால் அந்த முகமுடி கழண்டு விழுந்திருச்சு!
இப்பகூட பாருங்க! நித்தமும் தளராமல் அவர்களின் அட்டூழியங்களை வெளிப்படுத்தியவர்களின் கண்டனங்களை விட, இத்தனை நாள் புன்முறுவலுடன் அவைகளை ரசித்துக் கொண்டிருந்த நடுநிலையார்கள் வந்து இடும் ‘சம்பிரதாய வருகைப்பதிவு’ கண்டனங்களே அதிக கவனம் பெறும்.
டைப்பான், மாம்பா பாம்புகளின் விஷத்தை விட கொடூரமானது இவர்களின் விஷம்.
அராத்து
எழுத்தாளர்
தினமலர் நாளிதழில் எழுதியதை யாரேனும் ஆன்லைனில் எழுதி இருந்தால் இன்னேரம் கைது செய்யப்பட்டு இருப்பார்கள். கோர்ட்டில் கேஸ் நிற்கும் நிற்காது என்பதெல்லாம் வேறு விஷயம். ஆன்லைனில் எழுதும் ஊர் பேர் தெரியாதவர்களை கைது செய்வதை விட இதைப்போன்ற விஷயங்களில் கைது செய்வதுதான் ஒரு அரசு தெளிவாக விடுக்கும் செய்தியாக இருக்கும். ஒரு கார்டூன் ஜோக் போட்டதற்கெல்லாம் ஆனந்த விகடன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது இங்கே. ஆன்லைனில் சிலர் படிக்க எழுதுவதை விட ஒரு நாளிதழில் வருவது எவ்வளவு ஆபத்தானது ? சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
நாளிதழ் சர்குலேஷன் குறைந்து விட்டாலும், அதற்கென ஒரு அதிகாரமும் மரியாதையும் உள்ளது. அதனால்தான் முதல்வரே கண்டன அறிக்கை வெளிவிடும் அளவுக்கு இருக்கிறது. இதே மதிப்பை வைத்துதான் இதைப்போன்ற செயல்களே முதலில் கைது செய்ய வேண்டியவை என்கிறேன்.
இது 1% கூட கருத்து சுதந்திரம் அல்ல. மிக மிக அசூயையான ஒரு செயல். மனம் முழுக்க பழமையும் திமிரும் தெனாவட்டும் மண்டிக் கிடக்கும் ஆசாமிகளுக்குத்தான் இப்படி எழுதவே தோன்றும். மனம் முழுக்க சீழ் பிடித்துக் கிடப்பது அவரவர் உரிமை. தனிப்பேச்சில் என்ன வேண்டுமானாலும் உளறிக்கொள்ளலாம். பொது வெளி, நாழிதழ் என வரும்போது அதீத நாகரிகம் தேவை. இந்த விஷயத்தில் அதீத அநாகரிகம் மட்டுமே உள்ளது.