அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கடந்த 2020-ம் ஆண்டில் அகமதாபாத் வந்தபோது அங்குள்ள குடிசைப் பகுதிகளை சின்ன சுவர் கட்டி மறைத்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல் இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் குஜராத்துக்கு வந்தபோதும் குடிசைப் பகுதிகள் வெள்ளை நிற ஷீட்களால் மறைக்கப்பட்டன. இப்போது ஜி20 மாநாடு டெல்லியில் நடக்கவுள்ள நிலையில் அதேபோன்ற சில காமெடிகளைப் பார்க்க முடியும் என்று அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் மாநாட்டுக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் நகரின் பல பகுதிகளில் குரங்குகளுக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருக்கின்றன.
மாநாடு என்றால் தலைவர்களின் கட் அவுட்டைத்தானே வைப்பார்கள். எதற்காக குரங்கின் கட் அவுட்டை வைக்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழுகிறதா?
டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு குரங்குகளால் ஆபத்து வராமல் இருப்பதற்காகத்தான் இந்த கட் அவுட்களை வைக்கிறார்கள். டெல்லியில் குரங்குகளின் தொல்லை அதிகம். வட இந்தியர்களுக்கு ஆஞ்சநேயர் மீது பக்தி அதிகம் என்பதால் குரங்குகளை அதிகமாக தொல்லை செய்வதில்லை. ஒருசிலர் அவற்றுக்கு உணவுகளையும் அளிக்க, சென்னையில் தெரு நாய்கள் பரவி இருப்பதைப் போல் டெல்லியில் பல இடங்களில் குரங்குகள் தொல்லை தந்து வருகின்றன.
இந்த குரங்குகளால், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்பட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அங்குள்ள சிறிய குரங்குகளை அச்சுறுத்த பெரிய அளவிலான langur குரங்குகளின் கட் அவுட்டை அங்குள்ள முக்கிய சாலைகளில் டெல்லி நகர நிர்வாகம் வைத்து வருகிறது.
இப்படி குரங்குகளின் கட் அவுட்டை வைப்பதுடன் குரங்குகளைப் போல் மிமிக்ரி செய்யும் 40 பலகுரல் மன்னர்களையும் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். ஜி 20 மாநாட்டுக்கு வருபவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் இந்த மிமிக்ரி கலைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர். ஓட்டல்களுக்குள் சிறிய வகை குரங்குகள் நுழைய முயன்றால், langur வகை குரங்குகளைப் போல் சத்தம் எழுப்பி சிறிய குரங்குகளை ஓடவைப்பதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி.
இதைத்தவிர சிறிய வகைக் குரங்குகளை சில நாட்களுக்கு ஓரிடத்தில் பிடித்து வைத்துக்கொண்டு அவற்றுக்கு உணவளிக்கவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.