நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Hunt for Veerappan’ சீரியஸைத் தொடர்ந்து வீரப்பன் வேட்டை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்காக விஜயகுமார் ஐபிஎஸ்ஸை சந்தித்தோம்.
நீங்கள் தலைமையேற்று நடத்திய ஆபரேசன்களில் முக்கியமானது ‘வீரப்பன் வேட்டை’. அது தொடர்பாக நெட்ஃப்ளிக்சில் வெளி வந்திருக்கும் ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ டாக்குமெண்டரி பார்த்தீர்களா?
நான் பார்த்தேன். என்னைப் பற்றியும் சிறப்பு அதிரடிப் படை பற்றியும் அதில் நல்லபடியாகத்தான் சொல்லியுள்ளார்கள். சந்தோஷம். அந்த சீரியஸ் இயக்குநர்கள் அபூர்வ பஷி, செல்வமணி செல்வராஜ் இருவருக்கும் வாழ்த்துகள்.
அதில், பல போலீஸ் அதிகாரிகள் வீரப்பன் வேட்டை பற்றி பேசியிருக்கிறார்கள்; நீங்கள் ஏன் பேசவில்லை?
வீரப்பன் வேட்டை தொடர்பாக நான் எழுதிய புத்தகத்தின் உரிமையை இன்னொருவருக்கு கொடுத்துள்ளேன். இதனால், என்னால் நெட்பிளிக்ஸுக்கு பேச முடியவில்லை.
அந்த டாக்குமெண்டரி சரியாக எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? என்ன மிஸ்ஸிங் அதில்?
என்னால் பேட்டி கொடுக்க முடியாததால் சில குறைகள் அதில் நான் பார்த்தேன். குறிப்பாக, அந்த ஆபரேஷனை நான் முடித்து வைத்தாலும், அதற்குக் காரணம் எனக்கு முன்னால் இருந்தவர்கள் போட்டுவைத்திருந்த அஸ்திவாரம்தான். அந்த அஸ்திவாரத்தை நான் டெவலப் செய்தேன். குறிப்பாக வால்டர் தேவாரம், சங்கர் பிதாரி போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் பணிகளை மறக்க முடியாது.
தற்போது டில்லி கமிஷனராக இருக்கும் சஞ்சய் அரோரா அப்போது இளம் அதிகாரி. வீரப்பன் வேட்டைக்கு யார், யார் செல்லத் தயார் என்று கேட்ட போது, ‘நான் போகிறேன்’ என்று முதலில் முன்வந்தவர் சஞ்சய் அரோரா. இந்தியளவில் இதுபோன்ற ஒரு கடினமான ஆபரேசனில் மிக இளம்வயதில் கலந்துகொண்டவர் சஞ்சய் அரோராதான்.
அப்போது எஸ்பிஆக இருந்த தமிழ்செல்வன் என்பவர் வீரப்பன் வேட்டையில் நடந்த ஒரு என்கவுண்டரில் மூன்று விரல்களை இழந்தார். அந்தநிலையில்கூட அவரும் மோகன் நவாஸ் என்ற அதிகாரியும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடத்தி, வீரப்பனிடம் இருந்து காவல்துறை ஜீப்பில் இருந்து துப்பாக்கிகளை காப்பாற்றினார்கள்.
அசோக் குமார் என்றொரு அதிகாரி. அவர் காலில் காட்டுப் பூச்சி கடியால் குண்டு குண்டாக கொப்புளங்கள் இருந்தன. காட்டில் அதற்கு சரியாக சிகிச்சையும் கிடைக்காது. இருந்தாலும் காட்டை விட்டு அவர் வெளியேறவில்லை.
மோகன் நவாஸ் என்ற சப் இன்ஸ்பெக்டர் சொந்தப் பணத்தில் இருந்து எடுத்து இன்பார்மர்களுக்கு கொடுப்பார். 38 கிராமங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களுக்கும் அவர் நல்லது செய்துள்ளதால் அந்த எல்லா கிராமங்களிலும் அவருக்கு கண்ட்ரோல் இருந்தது.
இவர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த உறுதியான நடவடிக்கைகளால்தான், 200 பேர்கள் வரை இருந்த வீரப்பன் குழு 5 -10 பேர் கொண்ட குழுவாக குறைந்தது. ஆனால், இவர்களைப் பற்றியெல்லாம் இந்த டாக்குமெண்டரியில் பதிவுகள் இல்லை. மேலும், சங்கர் பிதாரி பற்றி நல்லவிதமாக எதுவும் இல்லாத நிலையில் குறையாக ஒருவர் பேட்டி கொடுத்துள்ளது இடம்பெற்றுள்ளது.
கெத்தேசால் என்றொரு கிராமம். அந்த கிராமத்தில் ஜடையன் என்ற கோவில் இருந்தது. கோவில் என்றால் நான்கைந்து ஈட்டிகளை குத்தி, அதில் எலுமிச்சை பழத்தை சொருகி வைத்திருப்பார்கள். பல கிராமங்களில் இதுதான் கோயில். கெத்தேசாலில் அப்பா ஜடையன், மாமா ஜடையன், தாத்தா ஜடையன் என்று நிறைய பேர் பெயர் ஜடையன் என்று இருக்கும். அந்த கிராமத்தின் தலைவர் பெயரும் ஜடையன். அவர் போலீஸூக்கு தகவல் கொடுத்துவிட்டார் என்று சந்தேகப்பட்டு, ஒருநாள் மாலை வீரப்பன் ஆட்கள் அவரைத் தேடி வந்துள்ளார்கள். ஜடையன் அதிர்ஷ்டம் அன்று அவர் மலையில் இருந்து கீழே இறங்கி சத்தியமங்கலம் வந்துவிட்டார். அவர் கிடைக்காத கோபத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஜடையன் கோயில் முன்னாலேயே கொன்று போட்டுவிட்டார்கள். அதில் ஒருவரை அவர் மனைவி முன்னாலேயே கொன்றுள்ளார்கள். அந்த சம்பவத்துக்குப் பின்னர் கொத்தேசால் கிராம மக்கள் கொதித்து எழுந்து, அவர்களுக்கு ரொம்ப பிரியமான ஜடையன் கோயிலை மூடிவிட்டார்கள். மீண்டும் அந்த கோயிலை வீரப்பன் ஆபரேசன் முடிந்தபின்னர்தான் திறந்தார்கள்.
இதுபோல் சம்பவங்கள் எல்லாம் இருந்தும் வீரப்பனை மகிமைப்படுத்தி சொல்லியவர்கள், அதுபோல் போலீஸ் பக்கம் உள்ள நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கலாம். அது எனக்கு ஒரு ஆதங்கம்.
வீரப்பன் குற்றவாளியாக இருந்தாலும் மிக புத்திசாலி என்று பலர் சொல்கிறார்கள். நீங்களே ஒரு பேட்டியில் வீரப்பன் ஒரு படைக்கு தலைமை தாங்கினால் மிக சிறப்பாக செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறீர்கள். வீரப்பனிடம் நீங்கள் வியந்த விஷயம் என்ன?
இது பற்றி நான் என்னுடைய புத்தகத்திலேயே எழுதியிருக்கிறேன். வீரப்பன் சாதாரணமான ஆள் கிடையாது. அசதாரணமான ஒரு மனிதன். அவரை வெல்வது சுலபமான காரியம் இல்லை.
வீரப்பன் வேட்டையில் காட்டில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
காட்டில் ஒரு சிறு பூச்சி இருந்தது. அந்த பூச்சி கடித்தவர்களுக்கு, குறிப்பாக B+ பிளட் குரூப் இருப்பவர்களுக்கு உடலில் கொப்புளங்கள் வந்துவிடும். உடலில் வேர்வை இருக்கும் இடங்களில் எல்லாம், அதாவது அக்குள், தொடை இடுக்குகளில் கொப்புளங்கள் அதிகமாக வரும். இந்த அலர்ஜி எனக்கும் ஏற்பட்டது.