No menu items!

புத்தகம் படிப்போம்:  ‘பனிவிழும் பனைவனம்’

புத்தகம் படிப்போம்:  ‘பனிவிழும் பனைவனம்’

நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் தனது ஃபேஸ்புக் – இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் படித்ததில் பிடித்த புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரை செய்து வந்தார். அதில் 7ஆவதாக அவர் பரிந்துரை செய்த புத்தகம், செல்வம் அருளானந்தம் எழுதிய ‘எழுதித் தீரா பக்கங்கள்’.

அந்நூல் குறித்து கமல்ஹாசன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘இவ்வுலகையும் வாழ்வையும் சமூகத்தையும் அரசியலையும் சக மனிதனையும் வெறுக்க அரசியல் அகதிக்கு எல்லா நியாயமும் உண்டு. ஆனால், எந்த ஒரு சூழலிலும் எவர் மீதும் வெறுப்பே இல்லாத அனுபவ மொழிதல் கொண்டது இந்நூல். ’

கமல்ஹாசனின் இந்த வார்த்தைகள் ‘பனிவிழும் பனைவனம்’ என்ற இந்நூலுக்கும் பொருந்தும். ‘எழுதித் தீரா பக்கங்கள்’ நூலின் மூன்றாவது பாகம் இது.

கூர்மையான சமுதாயப் பார்வையும் நிறைந்த இலக்கிய தாகமும் கொண்ட செல்வம் அருளானந்தத்தின் மூன்றாவது அனுபவப் புனைவு இது.

பனைமரக் காடுகளும், பரந்த மணற்பரப்பும், கடற்காற்றும் இயற்கையுடன் இணைந்த சூழலும், கடும் உழைப்பும் சிக்கனமும், கல்வியில் மேலாண்மையும் கொண்ட இலங்கை வடபகுதி தமிழர்களின் சமூக வாழ்க்கைப் பற்றிய குறுக்கு முகத்தை இந்நூல் காட்ட முயல்கிறது. அவர்களின் அரசியல் நெறிமுறைத் தடம் மாறத் தொடங்கிய – அரசியல் தலைமைத் தொடர்பான புதிய செல் நெறிகளின் மூலக்கூறுகளின் ஆரம்பம் பற்றி பேச முனைகின்றது.

தனிமனித இருப்பு, புதிய சமூக அமைதி, பாதுகாப்பு, மகிழ்ச்சி என்பன புதிய அரசியல் தளமாற்ற செயல்முறைகளால் எவ்வாறு சிதைகின்றன, சின்னாபின்னப்படுகின்றன? தனிமனித, குடும்ப, சமூக உறவுகள் எவ்வாறு உடைகின்றன? இவை இளைஞர்களின் புலம்பெயர்தலை எவ்வாறு தூண்டுகின்றன? என்பது பற்றியதாக அமைகின்றது இந்த நூல்.

நாகரிக இளைஞர்கள், யுவதிகளின் மையமாக கருதப்பட்ட யாழ்ப்பாண கச்சேரி பகுதியில் வளர்கின்ற கட்டிளமைப் பருவ இளைஞர்களின் இயல்பான துடுக்குத்தனத்துடன் தொடங்குகின்றது கதை. மாறுகின்ற பல்வேறு நிலைமைகள், அவற்றைத் தூண்டுகின்ற விசைகளினால் உந்தித்தள்ளப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளின் பல நகரங்களிலும் துன்பப்படுகின்ற இளைஞர்களின் அவலமாகவும் விரக்தியாகவும் கோபமாகவும் கதை விரிகின்றது. முடிவுறாத அவநம்பிக்கை, கோபம், கிறிஸ்தவ வேதாகமம் தந்த நம்பிக்கையுணர்வு நிறைந்த கதாநாயகனின் மனவெழுச்சிகளுடன் நிறைவு பெறுகின்றது.

இயலாமையும் எதிர்மறை நம்பிக்கையும் வெளிப்படுகின்றது. துன்பியல் உணர்வின் உறைநிலை அது. இவற்றுக்கிடையில்தான் எத்தனை நிகழ்வுகள், உணர்வுகள், முரண்பாடுகள், பாசாங்குகள், துரோகங்கள்…. இவற்றூடாக பயணிக்கிறான், வாழ்கிறான் கதாநாயகன்.

கதை நிகழ்கின்ற சூழலும் மக்களும் சம்பவங்களும் எனக்கு நன்கு பரிட்சயமானவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய உணர்வுகளும் நினைவுகளும் ஏக்கம் தருகின்றன. சில பகுதிகளை நிறுத்தி வாசித்தேன்; சில பகுதிகளை மீளவும் பல தடவைகள் வாசித்தேன். மனதை நெருங்கி விட்டன.

அக்கால இளைஞர்களின் நட்பு முறைகளும் அதில் இழையோடியிருந்த பாச உணர்வுகளும் நெகிழ்ச்சி தருகின்றன. உரையாடல் மொழியும் குறியீட்டு சொற்களும் ரசிக்கத்தக்கவை. வீட்டுக்கும் சமூகத்துக்கும் தெரியாமல் அவர்களாக உருவாக்கிய நட்பு உலகிலான வாழ்க்கை தனித்தன்மையானது. நூலாசிரியர் செல்வம் அழகாக தருகின்ற அழியாத கோலங்கள் இவை.

செல்வம் அருளானந்தம் நான்கு தசாப்த காலத்தில் நிறைய நாடுகளையும் நகரங்களையும் பல்வகை பண்பாடுகளையும் பார்த்தவர், உணர்ந்தவர். நிறைந்த படிப்பாளி; இதன் வழியாக பட்டறிவு (Tacit knowledge) நிலையில் உன்னதமான உயரத்தில் உள்ளவர். இதனை இந்நூலின் எல்லாப் பக்கங்களிலும் உரத்துச் சொல்கின்றன.

ஆழமான சமுதாய நேசிப்பும் உட்புதைந்த மனிதாபிமானமும் கொண்டிருப்பதால் எல்லா நிகழ்வுகளையும் உள்ளூடுருவி பார்க்கிறார். இதன்வழியாக அசிங்கமான சமூக வலையமைப்பு மீது ஒரு பேரலையின் வலுக்கொண்ட தார்மீக கோபம் ஏற்படுகின்றது. அவர் காட்டுகின்ற எளிய மக்களது வார்த்தைகளின் வழியாக அது வெடித்து விழுகின்றது. அவரது மொழி வீரியம் பெறுவது அதனால்தான். சில இடங்களில் எழுத்துலக நாகரீகம் பார்க்காமல் தெறித்து விடுகின்ற மொழியின் பிரயோகமும் இத்தகையதுதான்.

எளிய குடிமகன் ஒருவன், தனது வாழிட ஒழுங்கையில் தன்னைக் குலைத்து வரும் நாய்க்கு பேசுகின்ற தூஷண வார்த்தைகள், உண்மையில் நாய்க்கல்ல; நாய் வளர்க்கப்படுகின்ற சமுதாயத்தின் சாதிப் பாகுபாட்டின் மீதான கோபத்தின் வெளிபாடுதான் அது.

இந்த அனுபவம் புனைவின் இயங்குதளங்களில் முக்கியமான ஒன்று, இலங்கை வடபகுதி தமிழர்களின் சாதிப் பாகுபாட்டுணர்வும் அது சார்ந்த சமூக உறவுகளின் அநீதியும்தான். தொழில், கல்வி, வாழிடம், காதல், திருமணம், சமூக ஊடாட்டம் போன்ற எல்லாவற்றிலும் இந்த சமுதாய படிமுறையின் அநீதி கோலோச்சுகின்றது. தனிமனிதன், குடும்பம், நிறுவனம், சமுதாயம் என்ற எல்லா நிலைகளிலும் அது இயங்குகின்றது இம்சைப்படுத்துகின்றது. சமுதாய வலையமைப்பின் எல்லா முடிச்சுகளையும் இது அசிங்கப்படுத்துகின்றது.

‘ஓமடா, ஓமடா உங்களுக்கும் ஒரு தமிழ் ஈழம்… இன்னும் சொந்த இனத்திலை ஒரு பகுதியை கோவிலுக்குள்ள விடுறியள் இல்லை; தேத்தண்ணி கடை வழியே சரிசமமாய் இருக்க ஏலாது; உங்களுக்கு நாடு தேவையோ? போடா போ.’ (பக்கம் 212)

‘யாழ்பாணத்திலை சாதி ஒரு பெரிய பிரச்சினைதான். ஆனா ஒரே சாதி எண்டு சொல்லுறியள் அதிலையும் சிக்கலோ…. என்னால் ஒரே சாதிக்குள்ள இருக்கிற மேலோங்கிகள் என்கிற வர்க்க வேறுபாட்டை அவருக்கு விளங்கப்படுத்த முடியவில்லை.’ (பக்கம் 79)

‘அந்த ஆயுர்வேத டொக்டர், “அப்ப நீ டொக்டராகி இங்க வந்து ஆஸ்பத்திரி போட, எங்கட ஆட்களெல்லாம் நீ எம்.பி.பி.எஸ் டொக்டர் எண்டு உங்கட படியேறி வைத்தியம் பார்க்கப்போகினம். அதை ஒருக்கால் பார்ப்பம்’ என்று குரலை உயர்த்தினார்.’ (பக்கம், 108).

இதில் ‘உங்கட படியேறி’, ‘அதை ஒருக்கால் பார்ப்பம்’ என்று குரலை உயர்த்தி என்ற வசனத் தொடர்கள் எல்லாம் எதைச் சொல்கின்றன? இவை சார்ந்த கோபாவேசம், மெளனம் காக்கும் எரிமலையின் குழம்பு மோல செல்வத்தின் உள்ளே கொதித்துக் கொண்டிருப்பதை பல இடங்களில் கண்ணகியின் சீற்றத்துடன் பதிவு செய்கிறார் செல்வம்.

போதுமான பலமான கல்வியோ பொறுப்பு மிக்க குடும்ப வழிகாட்டல்களோ பயன்மிகு சமுதாய உதவிகளோ இல்லாமல் உணர்வின் வழியில் அலைக்கழிக்கப்படும் விடலைப் பருவத்து இளைஞர்களின் வாழ்க்கை, துன்பம், குரோதம் என்பவற்றால் எவ்வாறு பாதிக்கப்பட்டது; பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ச்சிகரமாக பதிவு செய்கிறது இப்புனைவு.

பிறந்த நாட்டில் சமூகமும் அரசும் அரசியல் தலைவர்களும் இளைஞர்களை எப்படி வஞ்சிக்கின்றனர்? புகலிடம் தேடி ஓடிய நவீன நகரங்களில், துணைகளின்றி, மொழி தெரியாது, நியாயம் ஏதுமின்றி – அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றனர்? இவற்றை எல்லாம் துயர் சுமந்த சொற்கள், உரையாடல்கள் மூலம் செல்வம் வெளிப்படுத்துகிறார்.

நாதியற்ற நாய்கள் போல அவர்கள் துரத்தப்படுகின்றனர். துன்பத்தின் மேல் துன்பம்; வலிகளைச் சுமக்க முடியாமல், ஆழ்மனவலிகளைப் பகிரமுடியாமல் அவர்கள் படுகின்ற வேதனைகள் செல்வத்தின் வார்த்தைகளாக பல இடங்களில் கசிகின்றன.

‘இப்படி மாட்டுப்படுவேன் என்று யார் கண்டது? பெயர் மறந்து போன ஒரு பட்டணத்தில், மறியலில் இருந்ததையும் (காரணமின்றி) அடிவாங்கியதையும் நினைத்தால் மனம் விசும்பும்.’(பக்கம் 206)

லண்டன் போய் சேர்ந்து விடுவான், தாய்களுக்கு உதவி செய்வான் என்று நம்பி எல்லா நண்பர்களும் கையில் இருந்த பணத்தைப் போட்டு துருக்கிக்காரனுடன் அனுப்பி வைத்த நண்பன், ‘நாலு மாதம் கழித்தபின் நாங்கள் இருந்த ரூம் வாசலில் பிச்சைக்காரன் கோலத்தில், கடும் பசியோடு நின்றிருந்தான். அவனைப் பார்த்து நாம் திடுக்கிட்டுப் போறோம்.’ (பக்கம் 207)

தன்பிள்ளை பாதுகாப்பாக, வசதியாக, மேலை நாட்டு நகரத்தில் இருக்கிறான் என பெற்றோர் நம்பும் நிலையில் அவர்களது பிள்ளைகள் மொழியறியாத, உறவுகள் ஏதுமில்லாத நகரங்களில் அடி, உதை, பசி, பட்டினி, தனிமை, அவநம்பிக்கை, ஏக்கம், விரக்தி நிரம்பிய வாழ்க்கை வாழ்கிறார்கள்; வாழ்ந்தார்கள். இதனை செல்வம் எழுத்தில் காட்டும் விதம் மனதைப் பிழிந்து எடுக்கிறது.

கதை நாயகர் சந்திக்கின்ற – காட்டுகின்ற மனிதர்கள் பலவகையினர்; சிலர் யாழ்பாண சமூகம் மறக்க முடியாதவர்கள்; மறக்கக் கூடாதவர்கள்.

யாழ்பாணத்திலிருந்து முதன்முதலில் நோர்வேக்கு மோட்டார் சைக்கிளில் போக திட்டமிட்ட, இந்த மக்களுக்கு நிறைய உதவிகள் செய்த குட்டியண்ணா என்று அழைக்கப்படும் அன்ரனி ராசேந்திரம் பற்றிய செல்வத்தின் நினைவுகள் உணர்வுகள் உன்னதமானவை. \

எமது மண்ணின் அக்கால அரசியலில் களமாடிய பல மாந்தர்கள் பற்றியும் கவனமாக பதிவு செய்கிறார், செல்வம். சிலர் ஒளியாகவும் சிலர் இருளாகவும் தெரிகிறார்கள்.

சிவ சிதம்பரம், அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, தங்கத்துரை, குட்டிமணி பிரபாகரன், சிவகுமாரன், செல்வம், இன்பம், விஜயவீரா, ஜே.ஆர், தாடித்தங்கராசா என பட்டியல் நீள்கிறது. எங்கள் அரசியல் வரலாறு தனியாக எழுதப்படும் போது கனதியான உள்ளீடுகளாக இவை பயன்படும் என செல்வம் நம்புகிறார்.

‘போரும் காதலும் என்னை மாற்றி விடுமோ என்று பயந்தேன்.’ (பக்கம் 59) என்கிறார் ஆசிரியர்.

இளைஞர்கள் போர்க்குணத்துடனும் பெண்கள் காதல் உணர்வுகளுடனும் உலாவுகின்றனர். இவை பற்றிய நிகழ்வுகள் பலவற்றின் மின்னலாக நகர்கின்றது இப்புனைவு.

பருவ வயதுக்காதலி குருநகர் பத்மினியும், பருவம் தப்புமுன் திருமணம் செய்ய முனையும் மன்னார் மறிய கொற்றியும், கவனக்குறைவால் கார்ப்பமாகும் யோகம் அக்காவும், திருமண வாழ்வின் துயர்களில் திளைக்கும் ரதி மாமியும், நியமங்களுக்கு உட்படாத சில்லறை வணிக காதலியாக வரும் சலீம் முதலாளியின் தோழியும் இவரது கதையின் மாதர்கள்.

நாயகனின் பருவகால காதல் பூவை கிள்ளி எறிவதற்கு சாதி நகத்தை பயன்படுத்தும் பத்மினியின் அக்கா இயல்பான யாழ்ப்பாண சமூகத்து பெண்ணுக்கு ஒரு மாதிரி.

திருமணம், குழந்தைகள் என்பன ஆண்களை பாதிப்பதை விட பெண்களைத்தான் பல முனைகளில் நியாயமின்றி பாதிக்கின்றது. செல்வத்தின் பெண் பாத்திரங்கள் சொல்லும் துயரச் செய்திகள் பல இப்புனைவில் பரவிக் கிடக்கின்றன.

இதே காலப்பகுதிகளில் அமெரிக்காவிலும், திருமணமும் அவர்களது குழந்தைகளும் பெண்களின் தொழிலுக்கும் குடும்ப வாழ்வுக்கும் சுதந்திரத்துக்கும் பல்வேறு நெருக்கீடுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க பெண்ணிய ஆய்வாளர் காற்பலீன் (katbleen shortridge: 1975) குறிப்பிட்டிருப்பது ஒப்பிடத்தக்கது.

உலகம் முழுவதுமே காதலும் திருமணமும் கர்ப்பம் தரித்தலும் ஆண்களை பாதுகாக்கின்றன; பெண்களை தண்டிக்கின்றன. துன்புறுத்துகின்றன. சுதந்திரத்தைச் சுரண்டுகின்றன. செல்வம் இதை மிக யதார்த்தமாக பதிவு செய்கிறார். வாசகர் சிந்தனையையும் உள்ளத்தையும் கிள்ளி விடுகிறார்.

1980களுக்கு முந்திய அப்புக்காத்து அரசியலும் அது அடைகாக்கும் மோலித்தனங்களும் கள்ளத்தனங்களும் பருவகால வீராவேச மேடைப் பேச்சுக்களும் எரிச்சலூட்டுவதாக பல நிகழ்வுகள் மூலம் காட்டுகிறார் ஆசிரியர். சந்தர்ப்பவாத அரசியல், அதில் ஊறிக்கிடக்கும் துரோகங்கள், வாக்கு வேட்டைக்கான அன்புரிமைகள் பற்றி நிறையவே பேசுகிறார் செல்வம்.

‘யாழ்பாணத்தான் படிச்சானோ உழைச்சானோ காசை மிச்சம் பிடிச்சானோ என்று தானே வாழ்ந்தான். சுதந்திரம் கிடைச்சவுடனேயே 5 இலட்சம் தமிழர்களை அதுவும் இந்த நாட்டை வளமாக்கிய அந்த மனுசரைத் தமிழர்கள் என்ற ஒரு காரணத்துக்காகவே நாட்டை விட்டுத்து துரத்தினங்கள்.’ (பக்கம், 212)

பிறிதோரிடத்தில், ‘zப்படியே கொம்மினிசம் வந்தாலும் சிங்கள கொம்மினிசம் தமிழ் கொமினிசம் என்றுதான் வரும். அப்பவும் சொறிஞ்சு கொண்டு ஏதாவது சொல்லிக்கொண்டுதான்’ (பக்கம் 212)என்று அவநம்பிக்கைகளில் வெளிப்படுத்துகிறார்.

யாழ்ப்பாண சமூகம் பற்றிய ஒட்டுமொத்த தன் கருத்தை பின்வருமாறு பதிவு செய்கிறார் செல்வம்,

‘நான் சொன்னேன். யாழ்பாணத்தாரும் மோசமானவர்கள்தான். தனிநாடு கேட்கிறது சரிதான். ஆனா தங்கட சனத்தையே சாதி சொல்லிப் பிரிச்சு வச்சுக் கொடுமைகளும் செய்து கொண்டு தங்கட படிபாலையும் வசதிகளாகளையும் இலங்கை முழுவதும் போய் மற்றவர்களையும் சுரண்டுகிறது சரியோ என்று சொன்னேன்.’ (பக்கம், 122)

செல்வத்தின் ஆழ்மன நம்பிக்கை தமிழ் இலக்கியம், கிறிஸ்தவ வேதாகம் என்ற இரட்டைத் தண்டவாளங்களில் பயணிக்கின்றது. இதனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் சொல்கிறார். ஆத்மாவும் அறிவும் நம்பிக்கையும் ரசனையும் ஒன்றித்துச் செல்வது இதன் தனித்துவம்.

‘எங்களுக்கும் எங்கட மதம் தெரியும்; யேசுவையும் தெரியும்.’ (பக்கம் 70)

‘அன்டைக்கு எனக்குள்ள ஒரு சிறுல மாற்றம் வந்தது உண்மைதான். தமிழிலக்கியம் வாசிக்கிறதோட வேதாக புத்தகத்தையும் வாசிக்கத் தொடங்கினன்.’ (பக்கம், 71)

‘தமிழும் கடவுளும் எண்ட கோணத்தில் லூக்காஸ் சம்மாட்டி கதைக்கத் தொடங்கி விட்டார்.’ (பக்கம் 71)

சங்கப்புலவர்கள், ஓசோ, கண்ணதாசன், பாரதியார், வள்ளுவர் சார்ந்த வாசிப்புகளும் ஜானகிராமன், வரதராசன் மீதான அதிக நேசிப்பும் பல இடங்களில் வாசகர்க்கு வசந்தமாகிறது. புனைவுக்குள்ளே புதுமல்லிகையாய் மணக்கிறது.

இதேபோல் பாரதிராஜவுக்கு முந்திய சினிமா உலகு மற்றும் பாடல்களில் செல்வத்துக்கு உள்ள மயக்கம் பல இடங்களில் அழகாக வெளிக்கிளம்புகிறது.

செல்வத்தின் தனித்துவமான பிரதேச பேச்சுமொழி அலாதியானது; மிக மிக இயல்பானது; நகைச்சுவையும் எள்ளும் இளமைத் துடிப்பு மிக்கன.

லூக்காஸ் சம்மாட்டியுடன் உரையாடும் போது சம்மாட்டி நான் கறுப்பாயிருந்தேன் என்று கூற ‘இதைவிட எப்படி கறுப்பாய் இருக்கிறது?’ என்கிறார்.

பிறிதோர் இடத்தில் வாடகைக்கார் ஓட்டுபவர், ‘பொழுதுபோகாமல் தான் வாசித்த வீரகேசரியை இரண்டாவது தடவையும் வாசித்து (கவனமாக) இரண்டாய் மடித்து வைத்தார்’ என்கிறார்.

புனர்ஜென்மம் என்ற அக்கால தமிழ்படம் பற்றி உரையாடும்போது, ‘பத்மினி நல்ல வடிவுதானே! அவ சொல்லேக்க சிவாஜி குடிக்காமல் விடலாம் தானே!’ என்கிறார். என்ன தத்துவம்? நக்கல்தான்; ஏளனம் தான்.

இன்னும் கால் நூற்றாண்டு கடந்து 2050களில் இந்த நூலை வாசிப்பவர்கள் எம்மவர்களாயிருந்தாலும் கூட நம்ப மாட்டார்கள். இலங்கைத் தமிழர்களது சமூக, அரசியல் வரலாறு இலக்கியவாதிகளால் எழுதப்படுமாயின் இந்த அனுபவப் புனைவு ஒரு தனி அத்தியாயமாக அங்கீகாரம் பெறும் என்பது சர்வ நிச்சயம்.

மா. சின்னத்தம்பி

ஓய்வு நிலை பேராசிரியர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை

பனிவிழும் பனைவனம்
ஆசிரியர்: செல்வம் அருளானந்தம்
வெளியீடு; காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ, 290

ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...