வட இந்திய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மலை மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி வருகிறது. இமாச்சல்பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தின் மண்டி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டியதில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அதை தொடர்ந்து 2-வது கொட்டமாக தொடர்மழை கொட்டி வருகிறது. தொடர் கனமழை காரணமாக இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதி சந்தை இணைய வழி விற்பனை தளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை ஆகிய நான்கு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு செய்கிறோம். இந்த ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி சந்தை’ என்ற இணைய வழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ‘மதி அங்காடிகள்’ நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்படவுள்ளன” என்று கூறினார்.
டெல்லி நேரு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்
டெல்லியில் தீன்மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனில் தங்கியிருந்தார். அவர் மறைந்த பிறகு அவர் நினைவாக இந்த நூலகமும், விடுதலை போராட்டத்திலும் இந்தியாவின் வளர்ச்சியிலும் நேருவின் பங்களிப்பு குறித்து அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து, பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில், ‘நேருவையும் அவரது பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்ற ஒற்றை புள்ளி நிகழ்ச்சி நிரலை மோடி கொண்டிருக்கிறார். இது உண்மையில் அற்பத்தனம்; கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் நேருவின் பாரம்பரியம், உலகம் காணும் வகையில் வாழும். அவர் வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கமளிப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழிசைக்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட தூத்துக்குடி சோபியா மீதான வழக்கு ரத்து
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் 2018-ல் தமிழக பாஜக தலைவராக இருந்தார். அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி லூயிஸ் சோபியா என்பவர் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் விமான நிலையத்தில் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா மீது தூத்துக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சோபியா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சோபியா மீது தூத்துக்குடி போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாத ஆத்திரம்: காதலனின் மகனை கொன்ற பெண்
புதுடெல்லியில் உள்ள ரன்ஹோலா பகுதியில் வசித்து வந்தவர் பூஜா குமாரி (வயது 24). இவர் ஜிதேந்திரா என்பவருடன் லிவ்-இன் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார். ஜிதேந்திரா ஏற்கனவே திருமணமானவர். ஜிதேந்திராவின் முதல் மனைவி, மகன் திவ்யான்ஷுடன் (வயது 11) தனியே வசித்து வந்தார். பூஜா குமாரியை ஜிதேந்திரா, ஆர்ய சமாஜ் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால், ஜிதேந்திரா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால், பூஜா குமாரி உடனான திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பூஜா குமாரிக்கு மனைவி என்கிற அந்தஸ்துடன் வாழ முடியவில்லை எனும் ஏக்கம் இருந்து வந்தது. இது சம்பந்தமாக பூஜாவிற்கும், ஜிதேந்திராவிற்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இதன் விளைவாக ஜிதேந்திரா, பூஜாவிடமிருந்து விலகி தனது முதல் மனைவி வீட்டிற்கே சென்று விட்டார். முதல் மனைவியின் மூலம் பெற்ற மகனின் காரணமாகத்தான் ஜிதேந்திரா விவாகரத்து செய்ய மறுக்கிறார் எனும் முடிவிற்கு வந்த பூஜா குமாரி, ஜிதேந்திராவின் வீட்டுக்கு சென்றார். அவர் சென்ற போது அந்த வீடு திறந்திருந்தது. கட்டிலில் திவ்யான்ஷ் தூங்கி கொண்டிருந்தான். வீட்டில் வேறு யாரும் இல்லை. திவ்யான்ஷ் மீது பெரும் ஆத்திரத்தில் இருந்த பூஜா, திவ்யான்ஷ் தூங்கி கொண்டிருக்கும் போதே அவன் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பிறகு அவன் உடலை அந்த “பெட் பாக்ஸ்” (bed box) கட்டிலின் அடியில் உள்ள அலமாரியில் இருந்த துணிகளை வெளியே வீசி, அந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு, யாருக்கும் தெரியாமல் தப்பி சென்று விட்டார்.
தகவலறிந்து வந்து சடலத்தை கைப்பற்றிய புதுடெல்லி காவல்துறையினர், குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளின் உதவியுடன் கடைசியாக பூஜா குமாரிதான் அங்கு வந்து சென்றார் என உறுதி செய்தார். தேடுதலில் சிக்கிய பூஜாவை காவலில் எடுத்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.