இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய மசோதாவில் என்ன உள்ளது? ஏன் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன?
தேர்தல் ஆணையர் நியமனமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்
இந்தியாவில் மிக உயரிய சுயாட்சியான அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளது. பிரதமரை தேர்வு செய்யும் பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்யும் சட்டசபை தேர்தல்கள், குடியரசு தலைவர் தேர்தல், துணை குடியரசு தலைவர் தேர்தல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் ஆகியவற்றை தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. இந்த தேர்தல்களை அறிவிப்பது தொடங்கி, முடிவுகளை அறிவித்து, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது வரை அனைத்தையும் தேர்தல் ஆணையமே செய்கிறது.
இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி ஜனவரி 25, 1950 அன்று தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. நாட்டில் நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திட அரசியலமைப்பால் நேரடியாக உருவாக்கப்பட்ட நிரந்தரமான, சுயாட்சியான அமைப்பு தேர்தல் ஆணையம்.
ஆனால், தேர்தல் ஆணையர் நியமனத்தில் முடிவுகளை இத்தனை காலம் மத்திய அரசுதான் எடுத்து வந்தது. மத்திய அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதனால், தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு சார்பாக நடந்துகொள்வதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதை மாற்றக் கோரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் அருண் கோயலின் நியமனமும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, அருண் கோயல் நியமனத்தை எதிர்த்தும் ஏடிஆர் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ‘‘மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே மின்னல் வேகத்தில் அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. பின்னர் அந்த மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேநேரம், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான முந்தைய வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ்வரம் ராஜ், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரம் மத்திய அரசின் வசம் உள்ளதை மாற்ற வேண்டும். சிபிஐ இயக்குநரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வு செய்கிறார்கள். இதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும்” என கோரியிருந்தனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது அரசின் நிர்வாகச் செயல்பாட்டின் ஓர் அங்கம். தேர்தல் ஆணையராக சுதந்திரமாக செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.என். சேஷன். அவரை நியமித்தது அரசுதான்” என்று கூறியது.
மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ”தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனி செயலகம் இருக்க வேண்டும். நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட, கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 2 மார்ச் 23 அன்று அளித்த தீர்ப்பில், ”பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். இதற்கேற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தின் செலவினங்களை கையாள்வதற்கு தனியான சுதந்திரமான செயலகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றமும் மத்திய அரசும் எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில்தான், தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு ஏற்ப மத்திய அரசு மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. Chief Election Commissioner and other Election Commissioners (Appointment Conditions of Service and Term of Office) Bill, 2023 என்ற பெயரிலான இந்த சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஏற்ப பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிய மசோதா என்ன சொல்கிறது?
இந்த மசோதா படி, தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியோ அல்லது வேறு நீதிபதியோ இடம்பெற மாட்டார்கள். மாறாக, தேர்வுக் குழு தலைவராக பிரதமர், தேர்வுகுழ உறுப்பினர்களாக எதிர்க்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சர் ஒருவரும் இடம்பெறுவார்கள். இவர்கள் அடங்கிய குழுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும். இவர்களின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்பார்.
தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். அதையடுத்து, தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், புதிய தேர்வுக் குழுவே புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். தேர்வுக் குழுவில் எதிர்கட்சி தலைவர் இடம்பெற்றிருந்தாலும் பிரதமர், கேபினட் அமைச்சர் இருவர் ஓட்டுகளால், 2-1 என்ற கணக்கில், ஆளுங்கட்சி விரும்புபவரே தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக மாற்றும் அப்பட்டமான முயற்சி இது. பாரபட்சமற்ற குழு தேவை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இனி என்னாகும்? ஒரு சார்புடைய தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ஏன் நினைக்கிறார்? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற மசோதா. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் இதை நாங்கள் எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “மோடியும் அமித் ஷாவும் இப்போது செய்வது போல் தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக்கு ஆபத்தா?
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் கார்த்திக் வேலு, “பாரபட்சம் இல்லாத ஒருவரை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் பொருட்டுதான் அரசியல் சாசன அமர்வு நீதிபதியையும் தேர்வுக் குழுவில் சேர்த்திருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மசோதாவில் இந்த குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியிருக்கிறார்கள்.
நியாயமான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது அரசு இது போல செய்யுமா? இந்த குழுவில் இருந்து நீதிபதியை நீக்க வேண்டிய அவசியம் என்ன? பரீட்சை எழுதுபவரே மார்க் ஷீட் திருத்துபவரை நியமிப்பது போலல்லவா இது?
இந்த மசோதா எமர்ஜென்சி காலகட்டத்தில் (1975 ) இந்திரா காந்தி கொண்டு வந்த ஜனநாயக எதிர்ப்பு சட்ட திருத்தங்களுக்கு ஒப்பானது. இந்திரா காந்தி தேர்தலில் வென்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தை முடக்கும் வண்ணம், பிரதமரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அரசியலமைப்பையே இந்திரா திருத்தினார். அதன் பிறகு இன்னுமே எதேச்சதிகாரமான பிற திருத்தங்களையும் கொண்டு வந்தார். அது கிண்டலாக ‘இந்திராவின் அரசியலமைப்பு’ என்றே அழைக்கப்பட்டது .
இந்திரா கொண்டு வந்த பல மாற்றங்கள் இந்திய அரசியமைப்பின் அடிப்படை கட்டுமானத்துக்கு எதிராக உள்ளதால் அந்த திருத்தங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு மட்டும் நம்மிடம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா எமர்ஜென்சியில் இருந்து வெளியே வந்திருக்க முடியாது என்பதே உண்மை.
ஒரு வேளை தற்போது புதிய மசோதா சட்டமானால் கண்டிப்பாக யாராவது வழக்கு போட்டு இந்த சட்டம் அரசியல் சாசன அமர்வு மதிப்பீட்டுக்கு உச்ச நீதிமன்றம் போகும். அப்போது, “அடிப்படை கட்டுமானம் என்பதே ஒரு போங்காட்டம். மெஜாரிட்டி உள்ள அரசுக்கு எந்த சட்டத்தையும் கொண்டு வர அதிகாரம் உள்ளது” என்றுதான் மத்திய அரசு தரப்பில் வாதிடுவார்கள்.
இந்திய ஜனநாயகத்தின் இறுதி பாதுகாப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானம். அது உடைக்கப்பட்டால் அப்புறம் நாம் எழுந்திருக்கவே முடியாது. ‘சே சே இப்படியெல்லாம் நடக்காது’ என்று நினைத்திருந்த பல விஷயங்கள் ஒவ்வொன்றாக சர்வ சாதாரணமாக நடக்கும் போது, இந்த அச்சம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த மசோதாவை உச்சநீதி மன்றத்திற்கு நேரடியாக சவால் விடும் அரசின் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த மசோதாவுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கை மத்திய அரசு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் மசோதா, ஆளுங்கட்சியின் பெரும்பான்மை காரணமாக லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் சிக்கலின்றி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதான் புதிய மசோதாவுக்கும் நேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது நாட்டுக்கு நல்லதா?