போர் தொழில் (தமிழ்) – சோனி லைவ்
திரையரங்குகளில் 2 மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற போர்தொழில் திரைப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் அடுத்தடுத்து இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எல்லா கொலையும் ஒரே மாதிரி நடக்கிறது. அந்த கொலைகளைச் செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறை அதிகாரியான சரத்குமாரும், அவருடன் பயிற்சி பெற வந்திருக்கும் இளம் அதிகாரியான அசோக் செல்வனும் ஈடுபடுகிறார்கள். கொலைகாரனை அவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
காதல், காமெடி, அதிரடி சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இளம் இயக்குநரான விக்னேஷ் ராஜா.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை விரும்புபவர்களுக்கான வீக் எண்ட் ட்ரீட்டாக இந்தப் படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொள்ள ( Kolla – மலையாளம்) – மனோரமா மேக்ஸ்
கேரளாவில் உள்ள ஒரு சிறு நகரில் வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பியூட்டி பார்லர் அமைக்கும் முயற்சியில் 2 பெண்கள் ஈடுபடுகிறார்கள். பியூட்டி பார்லரைத் திறப்பதைவிட வங்கியை கொள்ளை அடிப்பதுதான் அவர்களின் லட்சியம். இதற்காக ஒருநாள் வங்கிக்கு சென்று லாக்கரில் பொருட்களை வைப்பதுபோல் அதை நோட்டமிடுகிறார்கள்.
பின்னர், அதற்கு நேர் கீழே உள்ள தங்கள் பியூட்டி பார்லரின் மேல்தளத்தில் ஓட்டை போட்டு, ஒரு கொள்ளையனின் உதவியுடன் லாக்கரை கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் போலீஸாரிடம் சிக்கினார்களா? நகை மற்றும் பணத்துடன் தப்பினார்களா என்பதுதான் படத்தின் கதை.
கர்ணன் படத்தில் தனுஷின் காதலியாக நடித்த ரஜிஷா விஜயனும், ஒரு மலையாளப் படத்தில் கண்ணடித்த்தன் மூலம் புகழ்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரும்தான் படத்தின் நாயகிகள். இந்த 2 நாயகிகளை வைத்து ஒரு அருமையான ’bank robbery’ பட்த்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சூரஜ் வர்மா.
மாவீரன் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், சரிதா, அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடித்த மாவீரன் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
பயந்த சுபாவம் கொண்ட இளைஞர் சிவகார்த்திகேயன், ஓவியரான அவர், அம்மா மற்றும் தங்கையுடன் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக கூறி அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார் அமைச்சர் மிஷ்கின். ஆனால் அவர் கட்டிக்கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு, ஊழல் காரணமாக இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. ஒருநாள் அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சிவகார்த்திகேயன், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று பின்னர் உயிர் பிழைக்கிறார்.
உயிர் பிழைத்த பின்னர், சிவகார்த்திகேயன் நாளிதழில் படக்கதையாக வரையும் மாவீரன் கதாபாத்திரத்தின் குரல் அவருக்கு கேட்கத் தொடங்குகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஊழல் செய்த அமைச்சரை எதிர்த்து நிற்க சிவகார்த்திகேயனை அந்த குரல் தூண்டுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
காமெடியும் ஆக்ஷனும் கலந்த கதை என்பதால் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கலாம்.
கிங்டம் ( Kingdom – ஆங்கிலம்) – நெட்பிளிக்ஸ்
உள்ளூர் விவசாயிடம் அடிமைகளாக விற்கப்படும் 2 சிறுவர்கள், ஒரு பெரிய ராணுவ தளபதியாகும் கனவுடன் வளர்கிறார்கள். இருவரும் வளர்ந்த நிலையில், ஒருநாள் நாட்டின் ராணுவ தளபதி அவர்களை பார்க்கிறார்.
இருவரில் ஒருவர் அந்நாட்டு அரசரைப் போல் இருப்பதால், அவருக்கு டூப்பாக பயன்படுத்த அழைத்துச் செல்கிறார். அந்த நேரம் பார்த்து அரசருக்கு எதிராக புரட்சி செய்யும் அவரது சகோதரர், அரசர் என்று நினைத்து அடிமையைக் கொல்கிறார். கிராமத்தில் இருக்கும் மற்றொரு அடிமை இளைஞர், தன் நண்பனுக்காக பழிவாங்க புறப்படுகிறான். அவனால் அரசரைக் காப்பாற்றி தன் நண்பனுக்காக பழிவாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஆங்கிலப் படத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.