ஜெயிலர் பட விழாவில் மேடையில் ரஜினி சொன்ன காகம் – பருந்து கதைக்குப் பிறகு யார் பருந்து யார் காகம் என்ற சர்ச்சைகளுக்கிடையே வெளியாகி இருக்கிறது ‘ஜெயிலர்’.
ரஜினி இன்றும் பருந்துதானா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
அப்பா ஒய்வுப் பெற்ற உளவு காவல்துறை அதிகாரி. மகனும் காவல்துறையில் நேர்மையான அதிகாரி. இவரது நேர்மையைப் பிடிக்காமல் வில்லன் ஆட்கள் மகனை கொன்றுவிடுகிறார்கள். அதற்கு பழிவாங்க அப்பா பழைய கூட்டாளிகளுடன் கைக்கோர்க்கிறார். அப்படியே அதிரடி ஆக்ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார். அப்புறம் என்னவாகிறது என்பது மீதிக்கதை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து ஹிட்டடித்த ‘விக்ரம்’ படத்தின் கரு இது என்பது ரசிக மகாஜனங்களுக்குப் புரியும்.
ஜெயிலர் விமர்சனத்தில் இந்த மேற்படி ’விக்ரம்’ எங்கே வந்தார் என்று கேட்பவர்களுக்கு நெல்சன் தன்னுடைய பாணியில் ‘வேற மாதிரி வேற மாதிரி’ என்று ஜெயிலரை கொடுத்திருக்கிறார்.
இங்கே ரஜினி ஓய்வுப் பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன். வேலையில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டால், யாரும் மதிப்பது இல்லை என்று கமெண்ட் அடித்தபடியே பேரனின் யூட்யூப் சேனலுக்கு கேமராமேனாகவும், வீட்டு வேலைகளை செய்யும் ஒரு சாதாரண குடும்பஸ்தனாகவும் இருக்கிறார்.
மகன் வசந்த் ரவி. இவரும் காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றுகிறார். அப்பாவைப் போலவே நேர்மை நேர்மை என்று ஊரில் தப்பு செய்யும் ஒருத்தரை விடாமல் எஃப்.ஐ.ஆர் போட்டுத் தாக்குகிறார். சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். இதனால் அவருடன் வேலைப்பார்ப்பவர்களே அரண்டுப் போகிறார்கள்.
மனைவி ரம்யா கிருஷ்ணன். மருமகள் மிர்ணா. அதிகம் பேசாத வழக்கமான மருமகள். பேரன் ரித்து. சுட்டி.
பேரன் ரித்து அடித்த கமெண்ட்டுக்காக தாத்தா ரஜினியை லந்து செய்யும் கால்டாக்ஸி டிரைவர் யோகிபாபு.
இப்படியொரு சூழலில், சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் வசந்த் ரவியை, தூக்குகிறது அந்த கடத்தல் கும்பல். அதுவரை பூனைப் போல் நடித்து கொண்டிருக்கும் முத்துவேல் ’டைகர்’ ஆக பாய்ச்சல் எடுப்பவர்தான் இந்த ஜெயிலர்.
இத்தனை கதாபாத்திரங்கள் போதாது என்று கர்நாடகாவுக்கு சிவராஜ்குமார், கிஷோர், கேரளாவிற்கு மோகன்லால் விநாயகன், ஆந்திராவுக்கு சுனில், பாலிவுட்டுக்கு ஜாக்கி ஷெராப் என ரஜினியின் கூட்டாளிகளாக நடித்திருப்பவர்கள் பட்டியல் நீள்கிறது. இதனால் படமும் சுமார் 168 நிமிடங்கள் ஓஓஓடுகிறது.
வழக்கமாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என சூப்பர் ஹீரோக்கள் படங்களைப் பார்க்கும் போது, ஜிவ்வுன்னு ஒரு ஆக்ஷன் உணர்வு இருக்கும். அதேமாதிரி இங்கே நம்மூரில் ரஜினி நடந்தால் இடதுப்பக்கம் பத்து பேர், வலப்பக்கம் பத்துபேர் அவர் கண் படாத பின்பக்கம் 50 பேர் அலறிக்கொண்டு தெறித்துவிழுவார்கள். இதை நம்முடைய ஆழ்மனதில் பதியும் வகையில் ரஜினிக்கான சூப்பர் இமேஜை உருவாக்கிவிட்டிருந்தது இங்கிருந்து இயக்குநர்கள் வட்டாரம்.
ரஜினிகாந்தின் இந்த 40 ஆண்டுகால சூப்பர் ஸ்டார் இமேஜ்ஜை ஜெயிலரில் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் நெல்சன். 40 ஆண்டுகாலம் அதிரடி காட்டியது போதும். ’தலைவா நீ கண்ணைக் காட்டு., மத்ததை நாங்க பார்த்துக்குறோம்’ என்று இடைவேளைக்குப் பிறகு ரஜினியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கெத்தாக நடக்கவிட்டுவிட்டு, அவருடன் இருக்கும் டீம் அதிரடி காட்டுகிறது. ரஜினிக்கான இந்த புதிய ஆக்ஷன் ஃபார்மூலாவை நன்றாகவே கையாண்டு இருக்கிறார் நெல்சன்.
இனி ரஜினி மிக தைரியமாக அமிதாப் பச்சனைப் போல் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கலாம். இதற்காகவே நெல்சனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, கிஷோர் என எல்லோரையும் காஸ்ட்லியான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன், மிர்ணா இவர்கள் இருவருக்கும் அவர்களது முகத்தில் தெறிக்கும் ரத்தத்தை டிஷ்யூ பேப்பரால் துடைப்பதை தவிர பெரிதாக வேறெந்த வேலையும் இல்லை.
சமீபகாலமாக வைரல் ஆகிக்கொண்டிருக்கும் மாரிமுத்து இதில் சாரி முத்து என சொல்ல வைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் யோகிபாபு சிரிக்க வைக்க முயற்சித்தாலும், கைக்கொடுத்து தூக்கிவிட்டிருக்கிறார் சுனில். இவர் வரும் காட்சிகளில் கலாட்டாவாக இருக்கிறது காமெடி.
வசந்த் ரவிக்கு முக்கிய கதாபாத்திரம். முயற்சித்திருக்கிறார்.
வில்லனாக வரும் விநாயகன், தெலுங்கு சினிமா வில்லன் வகையறாவாக மலையாளம் பேசுகிறார். அவரது க்ளோஸ்-அப் வில்லத்தனத்திற்கு பக்காவாக பொருந்துகிறது.
வழக்கம் போல் ரஜினி இறங்கி அடிக்கவில்லையே தவிர, அவருக்குப் பதிலாக ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் அதிரடி காட்டியிருக்கிறார் அனிரூத். அந்த பின்னணி தீம் மியூசிக் அட்ரினலின் அதிரிபுதிரி.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காவல்துறையே சிலைக்கடத்தல் விநாயகன் பெயரைக் கேட்டாலே பதறுகிறது. ஆனால் அவரோ ஒரு மண்டபத்திற்குள் கைலியைக் கட்டிக்கொண்டு, நாலைந்து பேரை வைத்து கொண்டு உதார் விடுகிறார். சிலைக்கடத்தல் என்றால் அரசு சும்மா இருக்குமா அல்லது காவல்துறை வேடிக்கைப் பார்க்குமா என்று யோசிக்காமல் அளந்துவிட்டிருப்பது கமர்ஷியல் சினிமாவுக்கே உரிய சமாச்சாரம்.
நெல்சனின் பளாக் காமெடி தூக்கலாக இல்லையென்றாலும், பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதி ஒகே என்று நினைக்கும் போதே, இரண்டாம் பாதி இழுத்துகொண்டே போகிறது. பாவம் எடிட்டருக்கு சுதந்திரம் இல்லைப் போலும். படத்திற்கு ஸ்பாய்லர் எதுவும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு இரண்டாம் பாதியின் திரைக்கதை இழுவை சமர்ப்பணம்.
ரஜினியை வைத்து இப்படியொரு கதாபாத்திரத்தில் இயக்க ஒரு தைரியம் வேண்டும். இப்படியொரு 60 வயது ரிட்டயர்ட் ஆசாமியாக நடிக்கவும் ரஜினிக்கு ஒரு துணிவு வேண்டும். இந்த இரண்டும் ஒரு வழியாக நிறைவேறியிருக்கிறது.
நேர்மை ரொம்ப முக்கியம் என்ற குரலை கமர்ஷியலாக ஒலிக்க செய்திருக்கிறார் நெல்சன்.