மத்தியில் ஆளும் மோடி அரசின் மீது மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். நேற்றிலிருந்து நாடாளுமன்றத்தில் மணிப்பூர் தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று கேள்விகளை எழுப்பினார்.
இத்தனை கலவரங்கள் நடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட பிறகும் பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?
மணிப்பூர் கலவரங்கள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு 80 நாட்கள் ஆனது ஏன்? அதுவும் 30 விநாடிகள் மட்டுமே பேசியது ஏன்?
இந்தக் கலவரங்களை அடக்கத் தவறிய முதல்வரை இன்னும் டிஸ்மிஸ் பண்ணாமலிருப்பது ஏன்?
இவைதான் அந்தக் கேள்விகள்.
உச்ச நீதிமன்ற உத்தரவால் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேச்சைத் துவக்கிய விதமே பாஜகவினருக்கு பிடிக்கவில்லை.
‘“கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம். உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டிதில்லை.’ என்றுதான் தன்னுடைய உரையைத் துவக்கினார். அதானி பெயரைச் சொன்னதுமே எதிரணியினர் கூச்சலிட்டார்கள்.
ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
‘இன்று நான் எனது மனதில் இருந்து பேச விரும்புகிறேன். நான் அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். என் மனதில் இருந்து வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைத்து வைத்துள்ளேன்.
நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்… தேச பக்தர்கள் அல்ல!
இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க மோடி தயாராக இல்லை. இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை; மாறாக ராவணனின் ஆணவத்தால் எரிந்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார். நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்’ என்று மிக காட்டமாக பேசினார் ராகுல்.
பேசி முடித்ததும் ராஜாஸ்தானில் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற அவையிலிருந்து கிளம்பினார். வெளியில் செல்லும்போது பாஜகவினரைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு சென்றார் என்று பாஜகவின் பெண் உறுப்பினர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.
ராகுல் காந்தி பேசி முடித்ததும் அவருக்கு பதில் கூறுவதற்காக பாஜகவின் அமைச்சர் ஸ்மிருதி இராணி (Smriti Irani) எழுந்து பேசத் துவங்கினார். காங்கிரசையும் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார்.
‘வரலாற்றிலேயே முதன்முறையாக ஒருவர் பாரத மாதா மரணம் பற்றிப் பேசுகிறார், காங்கிரஸ் தலைவர்களும் கைதட்டுகிறார்கள். நீங்கள் இந்தியா அல்ல. இந்தியா தகுதியை நம்புகிறது, வாரிசு அரசியலை அல்ல. ஊழல் இப்போது இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. வம்ச அரசியல் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்று மத்திய அமைச்சர்கள் பலமுறை கூறினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் தான் அதிலிருந்து ஓடின. என்னைக் கண்டதும் அவர் அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்தியாவுக்கு ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் கட்சிதான். ஊழல் பற்றி பேசும்போது உங்களுடைய கூட்டணி இருக்கும் திமுகவை சற்று பாருங்கள்.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நியாயம் எப்போது கிடைக்கும்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது மிகப்பெரிய கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. காஷ்மீரில் அமலில் இருந்த 370 சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக அங்குள்ள பெண்கள் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள்.” என்று அனல் பறக்க பேசினார்.
அது மட்டுமில்லாமல், தனது உரையை முடிக்கும்போது ராகுல் காந்தியை ‘misogynist’ என்று விமர்சித்தார். ’ ராகுல் காந்தி ஒரு misogynist. அதனால்தான் பெண்கள் இருக்கும் அவையிலிருந்து வெளியேறும்போது பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்று கூறினார்.
ராகுல் மீது பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்கள்.
என்ன நடந்தது?
ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தது கேமிராவில் பதிவாகவில்லை. ஆனால் அதை பார்த்தவர் ஒருவர் அந்த முத்தம் விவரித்திருக்கிறார்.
‘அவையிலிருந்து ராகுல் காந்தி வெளியேறும்போது அவர் வைத்திருந்த ஃபைல்கள் விழுந்துவிட்டன. அதை குனிந்து அவர் எடுத்தார். அப்போது அருகிலிருந்த பாஜக உறுப்பினர்கள் சிரித்தார்கள். குனிந்து ஃபைல்களை எடுத்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி பறக்கும் முத்தம் தருவது போல் சமிக்ஞை செய்தார்’ என்று காட்சியைக் கண்ட நபர் குறிப்பிடுகிறார்.
இனி மணிப்பூர் கலவரங்களும் உயிர் பலிகள் மறக்கப்படும். மத்திய அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மறைந்து போகும். ராகுல் காந்தியின் பறக்கும் முத்தம் மட்டுமே நிற்கும். சோஷியல் மீடியாவில் பறக்கும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம் திசை திருப்பப்படும்.
பின்குறிப்பு:
2018ல் இது போன்று மோடி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி அரசின் மீது பல விமர்சனங்களை வைத்தார். ’என்னை நீங்கள் பப்பு என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை..” என்று கூறி பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று பிரதமரை கட்டியணைத்தார். ஆனால் திரும்பி வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும் அருகிலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்து கண்ணடித்து சிரித்தார். இது அப்போது சர்ச்சையானது.