ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், சில புத்தகங்களை விற்கக்கூடாது என்று பதிப்பாளர்களை தன்னிச்சையாக காவல்துறையினர் மிரட்டியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் புத்தகக் காட்சி பிரபலமானது. சென்னை வாசகர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் சென்னை புத்தகக் காட்சிக்கு வாசகர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், அந்த வாசகர்களை கவனத்தில் கொண்டும் வாசிப்பு பழக்கத்தை பரவலாக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் ஆண்டுதோறும் இப்போது புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த வரிசையில் சென்ற மாதம் கோயம்புத்தூரில் புத்தகக் காட்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும், ஈரோட்டைச் சேர்ந்த மக்கள் சிந்தனை பேரவையும் இணைந்து இந்த புத்தகக் காட்சியை நடத்துகிறது. ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் கடந்த 4- ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் புத்தகக் காட்சியில், மே17 இயக்கத்தினர் வெளியிட்ட ‘ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு)’, மதிமுக பொருளாளர் செந்திலதிபன் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும் விழுதுகளும்’, எதிர் வெளியீடான ‘இந்துத்துவ பாசிசம்’, திராவிடர் கழக மஞ்சை வசந்தன் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை புத்தகக் கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றும்படி, ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், தனிப்பிரிவு காவலர் மெய்யழகன் ஆகியோர் மிரட்டியுள்ளதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
கண்காட்சி அரங்கில் இருந்து புத்தகங்களை நீக்க மறுத்த ‘நிமிர்’ பதிப்பக அரங்கில் இருந்த விற்பனையாளரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். அவர் மறுத்த நிலையில் அவரது கையை பிடித்து இழுத்துள்ளனர்.
இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தனிப்பிரிவு காவலர் மெய்யழகன் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, புத்தகக் காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், “புகார் எதுவும் இல்லாத நிலையில், தன்னிச்சையாக புத்தக கண்காட்சி அரங்கினுள் வந்த போலீசார் பதிப்பகத்தாரை மிரட்டியுள்ளனர். இதற்கும் மக்கள் சிந்தனை பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசால் தடை செய்யப்படாத, காப்புரிமை பெற்ற புத்தகங்களை விற்க புத்தக திருவிழாவில் தடை ஏதும் இல்லாத நிலையில், புத்தகம் வாங்குவது போல் வந்த போலீசார் பதிப்பகத்தினரை மிரட்டி அச்சுறுத்தி உள்ளனர். இதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அதேநேரம், காவல்துறையினர் நடவடிக்கையை வரவேற்றுள்ள, இந்துத்துவ அமைப்பான ராஷ்ட்ரிய இந்து மகாசபா, “உலகில் வேறு எந்த நாட்டிலாவது, அல்லது இந்தியாவிலேயே கூட வேறு எந்த மதத்தையாவது இழிவுபடுத்தக்கூடிய இப்படிப்பட்ட புத்தகங்களை வெளியிட முடியுமா? காவலர்கள் பணியிட மாற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும்” என கூறியுள்ளது.
ஈரோடு காவல்துறை நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், “இந்த நூல்கள் தடை செய்யப்பட்ட நூல்களா? தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பல புத்தக கண்காட்சிகளில் தெருக்களில் விற்பனை செய்து கொண்டிருக்கின்ற இந்த நூல்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஈரோடு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? ஈரோடு காவல்துறை யாருக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது? இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வரலாற்று பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, “ஈரோடு புத்தகச் சந்தையில் நூல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. 1981இன் பிற்பகுதியில் கண்ணதாசன் காலமாவதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன் ‘இயேசு காவியம்’ படித்தேன். திருச்சி கலைக்காவிரி வெளியிட்ட அந்நூலின் தயாரிப்பு நேர்த்தி அளவுக்குக் கவிதை மிளிரவில்லை. ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம் அது. அடுத்து அதைப் படித்துக் கொண்டிருந்தபோது அவ்வளவு பழக்கமில்லாத நண்பர் ஒருவர் மஞ்சை வசந்தனின் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ நூலை அறிமுகப்படுத்தினார். கண்ணதாசனின் ஆத்திகத்திற்கு மஞ்சை வசந்தனின் நாத்திகம் நல்ல முறிவாக விளங்கியது. நமக்குக் கிறிஸ்டபர் ஹிட்சின்சும் வேண்டும், ரிச்சர்டு டாக்கின்சும் வேண்டும், ஆல்பர்ட் ஐன்ஸ்டினும் வேண்டும், மஞ்சை வசந்தனும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கிழக்கு பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதை கண்டித்தும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம், கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அது ஜனநாயகத்துக்கு ஆபத்துதான்.