பரபரப்பாக இருந்த விஷாலுக்கு அடுத்தடுத்து சில ப்ளாப் படங்கள். அதே நிலைமைதான் லட்சுமி மேனனுக்கும். இதனால் இவர்கள் இருவரும் இப்போது மீடியாவின் வெளிச்சத்தில் இல்லை.
’பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ என இரு படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்போது உண்டாகாத பரபரப்பு இப்போது கிளம்பி இருக்கிறது.
காரணம் லட்சுமி மேனன். ‘நான் இப்போது சிங்கிள் இல்லை’ என்று லட்சுமி மேனன் சொல்லி வைக்க, அப்படியென்றால் சிங்கிளாக இருந்த லட்சுமி மேனனை கவர்ந்தவர் யார் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
முன்பு லட்சுமி மேனன், ‘எனக்கு சிம்புவைப் பிடிக்கும்’ என்று வெளிப்படையாகவே கூறியவர். ஆனால் அதற்கு பிறகு சிம்புவும் இவரும் சேர்ந்திருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அத்தோடு இவர்களைப் பற்றி காதல் கிசுகிசு நமநமத்துப் போனது.
அதேபோல் விஷால் விஷயத்திலும் அபிநயா, வரலட்சுமி சரத்குமாருடன் டேட்டிங் போகிறார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அவை எதுவும் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. ஹைதராபாத்தை சேர்ந்த நடிகைக்கும் விஷாலுக்கும் நடந்த நிச்சயத்தார்த்தமும் பாதியில் முறிந்துப் போனது.
ஆனால் இப்போது விஷாலையும், லட்சுமி மேனனையும் இணைத்து ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இது குறித்து இவர்கள் இருவர் தரப்பிலிருந்தும் எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லை.
கமல், கார்த்தியுடன் இணைகிறாரா விஜய்?
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் ‘லியோ’ படத்தின் ஷுட்டிங் முடிவடைந்துவிட்டது. இப்பட த்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன. அக்டோபர் 19-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இப்போது காஷ்மீருக்கு மீண்டும் சென்றிருக்கிறார். இப்படத்தில் எடுக்கப்பட வேண்டிய பேட்ச்வொர்க் வேலைகள் அங்கு நடந்துவருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த பேட்ச்வொர்க் பணிகளும் முடிவடைந்துவிடும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை திரைக்கதையின் மூலம் இணைத்து இந்த இரண்டுப் படங்களும் இடையே ஒரு தொடர்பு இருக்குமாறு பார்த்துகொண்டார் லோகேஷ் கனகராஜ். இதைதான் ‘எல்.சி.யூ’ [லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்] என்று ரசிகர்கள் குறியீடாக கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் நடிக்கும் ‘லியோ’ படமும் இந்த எல்சியூ-வில் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், ’லியோ’ படத்தயாரிப்பு நிறுவனம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ மற்றும் ’விக்ரம்’ பட தயாரிப்பு நிறுவனங்களை தொடர்பு கொள்ள திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அதாவது கைதி மற்றும் விக்ரம் என இந்த இரண்டு படங்களிலும் இடம்பெற்ற கதாபாத்திரங்களை தங்களது படத்தில் பயன்படுத்தி கொள்ள எந்தவிதமான நிபந்தனையும் இல்லை. எங்களுக்கு ஒப்புதல்தான் என்று சொல்லும் என்.ஒ.சி எனப்படும் நான் அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிசுகிசுக்கிறார்கள்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் இது பற்றி கூறாமல் மெளனம் காத்து வருகின்றன. விஜயும், கமல், கார்த்தியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குநரின் தனிப்பட்ட எல்சியூ கருத்தாக்கத்தில் இணைய ஒப்புக்கொள்வாரா அல்லது தனது படம் விஜய் படமாகவே வெளியாக வேண்டுமென நினைக்கிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவந்துவிடும்.
அஜித் ரசிகர்களை சீண்டிய தெலுங்கு இயக்குநர்!
’‘வேதாளம்’ படக்கதை 10 மடங்கு க்ரிஞ்ச் ஆக இருந்தது’ இப்படியொரு கருத்தை தெலுங்கு இயக்குநர் மெஹர் ரமேஷ் கூற, பொங்கி எழுந்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
யார் இந்த மெஹர் ரமேஷ்?. அவர் ஏன் வேதாளம் படம் பற்றி இப்படியொரு கமெண்ட்டை அடிக்க வேண்டும்?
விஷயம் ஒன்றுமில்லை. சிரஞ்சீவையை வைத்து ‘போலா ஷங்கர்’ என்ற படத்தை இயக்கியிருப்பவர்தான் இந்த மெஹர் ரமேஷ். இந்தப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.
அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வேதாளம்’. 2015-ல் ‘வேதாளம்’ வெளியானது. அஜித்திற்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு வேதாளத்தை, இப்போது தெலுங்கில் ’போலா ஷங்கர்’ என ரீமேக் செய்திருக்கிறார்கள்.
இந்தப் பட ப்ரமோஷனில்தான் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷை பக்கத்தில் வைத்து கொண்டு ஊடகங்களைப் பார்த்து ,’பார்த்தீங்களா எங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு கீர்த்தி சுரேஷ் எப்படி கவர்ச்சியாக இருக்கிறார். இந்தப்படத்தில் அவர் என்னை அண்ணா.. அண்ணா.. என்று அழைத்தது எனக்குப் பிடிக்கவில்லை. அடுத்தப்படமே எனக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார்’ என்று வெளிப்படையாகவே வழிந்தார்.
மறுபக்கம் மெஹர் ரமேஷ், ‘வேதாளம்’ 10 மடங்கு க்ரிஞ்ச் ஆக இருந்தது. அதனால் கதையில் 60 முதல் 70 சதவீதம் வரை மாற்றிவிட்டோம். அண்ணன் தங்கை பாசத்தை மட்டும் எடுத்து கொண்டு ‘போலா ஷங்கர்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறோம்’ என்று சொல்ல, இவரது இந்த சீண்டல்தான் அஜித் ரசிகர்களை உசுப்பேற்றி இருக்கிறது.
சமூக ஊடகத்தில் இவரது கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கவே, படம் ரிலீஸ் ஆகும் நேரம் என்பதாலும், பட்டென்று ’நான் அந்த மாதிரி தவறான எண்னத்தில் சொல்லவில்லை என்று ஜகா வாங்கியிருக்கிறார் மெஹர் ரமேஷ்.