“என்னாச்சு அண்ணாமலை நடைபயணம்? பாதில ப்ரேக் விட்டுட்டாங்களே” என்று உள்ளே நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.
“பாவம் அவருக்கு கால் வலிக்காதா?” என்று சிரித்துக் கொண்டே விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.
“மதுரைல பிரமாண்டமாய் பொதுக் கூட்டம் நடத்துறதா பாஜகவினர் திட்டம் போட்டிருந்தாங்க. மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா கலந்துக்கிறதா இருந்தது. அதுக்காக சென்னை வந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு அப்புறம் மதுரை பக்கம் நடக்கலாம்னு அண்ணாமலை திட்டம் போட்டிருந்தார். திட்டப்படி 7ஆம் தேதி அமைச்சருடன் அண்ணாமலை நடக்கணும். ஆனா மத்திய அமைச்சர் வரல பொதுக் கூட்டமும் கான்சலாகிடுச்சு. அதனால அண்ணாமலை போட்ட திட்டம் சரியா வரல. இதுல அவர் கொஞ்சம் அப்செட். 8ஆம் தேதி நடைபயணத்தை கேன்சல் பண்ணிட்டார்”
“நெல்லைல 22 ஆம் தேதி ஒரு பொதுக் கூட்டம் போட்டிருக்காங்களே. அங்கதான அண்ணாமலை நடைபயணத்தை முடிக்கிறாரு?”
“அந்த பொதுக் கூட்டமே நடக்குமானு தெரியலனு சொல்றாங்க. மத்திய அமைச்சர்கள் வரதுல சிக்கல் இருக்கிறதாம். சங்கரன் கோவிலில் நிர்மலா சீதாராமன், திருநெல்வேலியில் பூபேந்திர யாதவ்னு அமைச்சர்களை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்தாங்க. இப்ப அவங்கலாம் வருவாங்களன்றது டவுட்னு சொல்றாங்க”
“என்ன காரணம்?”
“இப்ப நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கிறதுனால மான்சுக் மாண்டவியா வரல. அமைச்சர்கள் இல்லாம நீங்களே நடத்திக்கங்கனு மேலிடம் சொல்லிட்டதாக ஒரு தகவல் வருது”
“அண்ணாமலையும் ரொம்ப தூரம் நடக்கிறது இல்லையாமே? ஊருக்குள்ள ரெண்டு மூணு கிலோமீட்டர் நடந்துட்டு அப்புறம் ஏசி பஸ்ல அடுத்த ஊருக்கு போகிறாராமே. இதுவரை அண்ணாமலை பத்து நாள் நடந்தது மொத்தம் 25 கிமீதான்னு புள்ளிவிவரம் சொல்றாங்களே?”
”ஆமாம். பாஜகவினரே அது பத்தி பேசுறாங்க. அவங்களுக்குமே இந்த ஸ்டைல்ல நடக்கிறது பிடிக்கல. மீடியாவுல தெரியலனாலும் அந்தந்த ஊர் மக்களுக்கு தெரிஞ்சுரும். மக்கள் தப்பா நினைப்பாங்கனு சொல்லியிருக்காங்க. முக்கியமான இடத்துலலாம் நடக்கிறோம்ல அது போதும்னு அண்ணாமலையை வழி நடத்துறவங்ககிட்டருந்து பதில் வந்திருக்கு”
“காமெடி நடைபயணமா மாறிக்கிட்டு இருக்குப் போல. சரி, நாடாளுமன்றத்துல ராகுல் காந்தியை அனுமதிச்சுட்டாங்க போல..”
“ஆமாம். வேற வழி இல்லை. ராகுல் பத்தின முடிவை தள்ளிப் போடலாம். நம்பிக்கையில்லா தீர்மானம் முடிஞ்சப் பிறகு அவர நாடாளுமன்றத்துல அனுமதிக்கலாம்னு யோசனை சொல்லியிருக்காங்க. ஆனால் மோடியும் அமித்ஷாவும் அதை நிராகரிச்சுட்டாங்களாம். கோர்ட் சொன்ன பிறகும் நாம ராகுலை முடக்கிற மாதிரியான பிம்பம் வெளில தெரியும். அவரை உடனடியா அனுமதிச்சிரலாம்னு சொல்லியிருக்காங்க”
“நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவல்ல எடுத்திருக்கே? என்ன நடக்கப் போகுது?”
“அவரை அப்ரூவரா மாத்தறதுலதான் அமலாக்கத் துறை அதிகாரிங்க தீவிரமா இருக்காங்க. உங்களுக்கும் உங்க சொத்துகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சசிகலா, தினகரன் மாதிரி ஆட்கள் மேல அமலாக்கத் துறை போட்ட வழக்குகள் எப்படி கிடப்பில இருக்கோ, அதேமாதிரி உங்க மேல இருக்கற வழக்குகளும் அப்படியே இருக்கும். ‘அமலாக்கத் துறை என் வீட்டுக்கு வரட்டும்’னு சவால் விடறவரைப் பத்தின தகவல்களை மட்டும் கொடுத்தா போதும்னு சொல்லி செந்தில் பாலாஜியை வழிக்கு கொண்டுவர்ற நடவடிக்கைகளை எடுத்துட்டு இருக்காங்களாம்.”
”அவர் மேல இருக்கிற போக்குவரத்து கழக வேலை ஊழல் வழக்கு அதிமுக காலத்துல நடந்தது அவர் அப்ரூவர் ஆனா அதிமுககாரங்களுக்குதானே கஷ்டம்?”
“அப்படியில்ல. அதுக்கு மட்டும் அவர் அப்ரூவர் ஆக மாட்டார். அவர் வேற பல விஷயங்களையும் சொல்லுவார். இதுதான் அமலாக்கத் துறையின் மேல் மட்டத்தின் விருப்பம்”
“அந்தக் காரியத்தை செந்தில் பாலாஜி செய்வாரா?”
“மாட்டார் என்கிறார்கள்”
“எப்படி சொல்ற?”
“நான் சொல்லல. கட்சிக்காரங்க பேசிக்கிட்டதை சொன்னேன். கலைஞர் நினைவு நாளுக்கு செந்தில் பாலாஜி பெயரிலும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது. அவருக்கு கட்சியின் மேல் கடுப்பு இருந்திருந்தால் அவரது ஆதரவாளர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்”
“அமலாக்கத் துறை இன்னும் சோதனையை நிறுத்தலையே. திருப்பியும் சோதனை பண்ண ஆரம்பிச்சிருக்காங்களே?
“திமுக நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான் போல.”
“கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு போன வாரம் கரூர், கோவைன்னு அமலாக்கத் துறை திரும்பவும் ஒரு ரவுண்டு சோதனையை நடத்தியிருக்கு. அப்ப அவங்களுக்கு சில ஆவணங்கள் கிடைச்சிருக்கு. அந்த ஆவணங்கள் அமலாக்கத் துறை ஜூரிடிக்ஷன்ல வரல. அதனால கொஞ்சம் ஆவணங்களை வருமான வரித் துறைக்கும், கொஞ்சம் ஆவணங்களை சிபிஐக்கும் அனுப்பி வச்சிருக்காங்க. இனி அந்த 2 துறையும் எந்த நேரம் வேணும்னாலும் திமுகவினர் மேல பாயலாம்.”
“திமுகவுக்கு சவாலான நேரம்தான்.”
“இது தெரியாம கட்சிக்காரங்க உள்கட்சி மோதல்லயும், ஒருத்தரை ஒருத்தர் ஓரம் கட்றதுலயும் குறியா இருக்காங்க. உதாரணமா மதுரைல பிடிஆரை முழுசா ஓரம்கட்டற நடவடிக்கைகளை அமைச்சர் மூர்த்தி பார்த்துட்டு இருக்கார். பிடிஆர் ஆதரவாளர்கள்கிட்ட போய், ‘பிடிஆருக்கு அறிவாலயத்துல பெருசா ஆதரவு இல்லை. அவரை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. அதனால இனியும் அவரை நம்ப வேணாம். என்கூட சேர்ந்தா உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவேன்’ன்னு சொல்லி அவங்களை தன்னோட ஆதரவாளரா மாத்திட்டு வர்றார். இதனால பிடிஆர் ஆதரவாளரா இருந்த மதுரை மேயர் இந்திராணி, மூர்த்தி முகாமுக்கு வந்துட்டார். இந்த இணைப்பை கொண்டாட மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, கோஷ்டி வித்தியாசம் இல்லாம எல்லாரையும் குற்றாலத்துக்கு கூட்டிட்டு போயிருக்கார். மதுரை மேயரும் அவங்களோட குற்றாலம் போயிருக்கார். அங்க எடுத்த படங்களை பத்திரிகையில போட ஏற்பாடு பண்ணி, நாங்க இப்ப ஒண்ணாயிட்டோம்னு பிடிஆருக்கு மறைமுகமா தகவல் சொல்லி இருக்கார். அதனால பிடிஆர் கடுப்புல இருக்கார்..”
“அதிமுக மாநாட்டு ஏற்பாடுகள் எப்படி போய்ட்டிருக்கு?”
“இதுக்காக முழு கவனத்தையும் செலுத்திட்டு இருக்கார் எடப்பாடி. இதுபத்தி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல பேசின அவர், ‘நாம ஆட்சியில இருந்தப்ப நீங்கள்லாம் ஏவ்ளோ சம்பாதிச்சீங்கன்னு எனக்குத் தெரியும். அப்பல்லாம் நான் உங்ககிட்ட எனக்கோ, கட்சிக்கோ பங்கு கேட்டதில்லை. அதேபோல நாம் ஆட்சியில இருந்தப்ப உள்ளாட்சியில பதவில இருந்தவங்க எவ்ளோ சம்பாதிச்சாங்கன்னும் எனக்குத் தெரியும். அப்பவும் நான் எனக்கோ கட்சிக்கோ எதையும் கேட்கலை. சட்டமன்ற தேர்தல்லகூட நான்தான் செலவழிச்சேன். ஓபிஎஸ்க்குகூட தேர்தல் செலவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன். யார்கிட்டயும் எதுவும் கேட்கலை. இப்ப கட்சிக்கு உங்களோட உதவி தேவைப்படுது மாநாட்டுக்காக நிறைய செலவழிங்க’ன்னு சொல்லி இருக்கார்.”
”அவர் பேச்சை கட்சிக்காரங்க கேப்பாங்களா?”
“வேற வழியில்லை. அதிமுகனா அது எடப்பாடினு மாறிப்போச்சு. தினமும் மாவட்ட செயலாளர்கள்கிட்ட மாநாட்டை பத்தி போன்ல பேசிட்டு இருக்கார். அன்பாகவும் பேசுறார் உங்க மாவட்டத்துலருந்து மாநாட்டுக்கு ஆட்களை கூட்டிட்டு வரலனா நடவடிக்கை எடுப்பேன்னு மிரட்டவும் செய்யறார்”
“மாநாட்டுக்கு பிரதமரை கூப்பிடறாங்களா?”
“அதுபத்தி எடப்பாடி இன்னும் முடிவு செய்யலை. மாவட்டச் செயலாளர்கள் எவ்வளவு பேரை கூட்டிட்டு வரப்போறாங்கன்னு தெரிஞ்சுட்டு, கூட்டம் பிரம்மாண்டமா நடக்கும்னு உறுதியான பிறகுதான் அவர் பிரதமரை கூப்டுவாராம்.”
”அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவுக்கு வந்திருக்கிறாரே?”
“அவரை திருப்பி சேர்த்துக்கிறதுல கட்சி மூத்தவங்க சிலருக்குப் பிடிக்கல. ஆனால் அன்வர் ராஜாவை சேர்த்துக்கிட்ட சிறுபான்மை வாக்காளர்களுக்கு நம்ம மேல ஒரு நம்பிக்கை பிறக்கும்னு எடப்பாடி பழனிசாமிதான் சொல்லி அன்வர் ராஜாவை சேர்த்திருக்காங்க”
“தமிழகத்தில் மூன்றாவது அனி ஒன்றை அமைக்க சிலர் முயற்சி செய்யறதா கேள்விப்பட்டேனே?”
“தினகரன்தான் அந்த முயற்சியில ஈடுபட்டு இருக்கார். அவரைப் பொறுத்த வரைக்கும் திமுகவைவிட எடப்பாடியைத்தான் முக்கிய எதிரியா நினைக்கறார். நாடாளுமன்ற தேர்தல்ல எடப்பாடி திரும்பவும் தலைதூக்கிடக் கூடாதுன்னு பார்க்கிறார். இப்போதைக்கு கிட்டத்தட்ட ஆறு நாடாளுமன்ற தொகுதியில தனக்கு செல்வாக்கு இருக்குன்னு தினகரன் நம்பறார். இந்த பலத்தை வச்சுட்டு பாமக, ஓபிஎஸ் அதிமுக, தேமுதிக மாதிரி கட்சிகளை இணைச்சு 3-வது அணி அமைக்கறது அவரோட திட்டமா இருக்கு.”
”2016 மக்கள் நலக் கூட்டணி மாதிரியா?”
“கிட்டத்தட்ட அப்படிதான். அப்போ வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒண்ணா வாக்கிங் போன காட்சிகள் மாதிரி ராமதாஸ், ஓபிஎஸ், தினகரன்லாம் ஒண்ணா வாக்கிங் போவாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.