காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகை காஞ்சனா. ஒரு காலத்தில் புகழோடு இருந்த காஞ்சனா, இன்று பெற்றோர் கொடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி மன நிம்மதிக்காக கோயிலை சுத்தப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
காஞ்சனாவின் தந்தை ராமகிருஷ்ண சாஸ்திரி விஜயவாடாவை சேர்ந்தவர். சென்னையில் கட்டிடக்கலை இன்ஜினியராக இருந்தார். அவரது மூத்த மகள்தான் காஞ்சனா. பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வசுந்தரா தேவி, சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். 10-வது வயதில் மியூசியம் தியேட்டரில் அவரது அரங்கேற்றம் செய்தார். பள்ளிப்படிப்பை முடித்து எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்த வசுந்தரா தேவி மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தில் சீதையாக நடித்திருக்கிறார்.
பொருளாதார நெருக்கடியில் குடும்பம் சிக்கிகொள்ள, கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட வசுந்தரா தேவி விமானப் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையில் கிடைத்த சம்பளம் குடும்பத்துக்கு போதவில்லை. அப்பாவின் வியாபார சம்பந்தமான வழக்குகளுக்காக எல்லா சொத்துகளையும் விற்க வேண்டிய நிலை வந்தது. அதனால் பொருளாதார ரீதியாக அவரது குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
1962-ம் ஆண்டில் ஒரு நாள் சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீதரை அவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார். வசுந்தரா தேவியை பார்த்தவுடன் ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனே தான் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் வசுந்தரா தேவி என்ற அவரது பெயரையும் காஞ்சனா என்று மாற்றினார்.
காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ஸ்ரீதரின் சிவந்தமண் அவளுக்கென்று ஒரு மனம் என்று பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சம்பாதித்து கடன்களை சரிகட்டி சொத்துக்களை விட்டு குடும்பத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார் காஞ்சனா. ஆனால் பெற்றோரால் அவருக்கு நிம்மதி இல்லாமல் போனது.
இதுபற்றி கூறும் அவர், “சினிமாவில் நடித்து சம்பாதித்தால்தான் குடும்பத்தைக் கரை சேர்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். இரவு பகல் பாராமல் கால்ஷீட் கொடுத்து உழைத்தேன். பணம் வந்தது புகழ் வந்தது கடன்கள் அடைக்கப்பட்டு சொத்துக்கள் சேரத் தொடங்கியது.
பணம் வந்து சேரச் சேர வீட்டில் பெற்றோரிடையே அடிக்கடி சண்டை வெடித்து. தினம் ஒரு யுத்தம் நடந்தது. பணம் வந்தது நிம்மதி போனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் ஒரே சண்டைக் காடாக இருக்கும். எவ்வளவு பணத்தை சம்பாதித்துக் கொடுத்தாலும் என்னை அன்பாக கவனிக்க நாதியில்லை. வீட்டில் உள்ளவர்களைப் பொறுத்தவரை நான் பணம் கொட்டும் மெஷினாகத்தான் இருந்தேன்.
பொதுவாக நண்பர்களில் உறவினர்களில் வியாபாரக் கூட்டணியில் துரோகிகள் இருப்பார்கள். பெற்றோரில் துரோகிகளை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். நான் இப்படி நிற்கதியாக காரணம் என் பெற்றோர் செய்த துரோகம்தான். இப்போதும் கூட நான் சம்பாதித்துக் கொடுத்த சொத்துக்களின் மேல் உரிமை கேட்டு வழக்கு போட்டு என்னை கோர்ட்டு வரை இழுத்தது என் பெற்றோர் தான்.
இப்படி சம்பாதித்துக் கொடுத்தும் நிம்மதி இல்லாத எனக்கு. ஒரு அன்பான உள்ளத்தின் துணை வேண்டி இருந்தது. 1983-ன் இறுதியில் சுப்ரமண்யம் என்ற விமான நிலைய அதிகாரியை சந்தித்தேன். நானும் அவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தோம். அந்த நேரத்தில் நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. சென்று மூன்று வருட மூன்று மாதம் கழித்து வந்த போது இங்கே எல்லாம் தலைகீழாகி இருந்தது.
என் பெற்றோர் சுப்பிரமணியத்திடம் என்னைப் பற்றி என்னென்னவோ சொல்லி அவர் மனதை கலைத்து விட்டார்கள். எனக்கென்று ஒரு குடும்பம் உருவாகி விட்டால் பிறகு என் சம்பாத்தியம், சொத்துகள் எல்லாம் கை மாறி விடுமே அதனால் எங்களைப் பிரித்து விட்டார்கள்.