விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் ‘லியோ’ படத்தில் ரேஷன் கடைகளில் நிற்கும் கூட்டத்தைப் போல, எக்கச்சக்கமான நட்சத்திரப்பட்டாளம் இருக்கிறது.
இதனால் யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரங்கள், எந்தளவிற்கு முக்கியத்துவம் இருக்கும், எவ்வளவு நிமிடங்கள் இவர்களது காட்சிகளில் படத்தில் இடம்பெறும் என்பது குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே இருக்கிறது.
’லியோ’ படத்தைப் போலவே இப்போது ‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினியுடன் கைக்கோர்த்திருக்கிறது மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ப்ரியங்கா மோகன், விநாயகன், வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப், சுனில், கலையரசன், கிங்க்ஸ்லி, யோகி பாபு, மாரிமுத்து, ஜாஃபர் சாதிக் என நட்சத்திரங்களின் எண்ணிக்கை போய்கொண்டே போகிறது.
இந்நிலையில்தான் சிவராஜ்குமாருக்கு ‘ஜெயிலர்’ படத்தில் 11 நிமிடங்கள் மட்டும்தான் காட்சிகள் இருக்கிறதாம். ஆரம்பத்தில் ரஜினி படம் என்பதால் கதையைக் கூட கேட்காமல், ஓகே சொல்லியிருக்கிறார் சிவராஜ்குமார். ஆனால் இயக்குநர் நெல்சன் வற்புறுத்தி கதையைக் கேட்க வைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் முக்கியமான காட்சியில் வரும் சிவராஜ்குமார் அதன்பிறகு க்ளைமாக்ஸில்தான் வருகிறாராம்.
சிவராஜ்குமாருக்கு 11 நிமிடங்கள்தான் என்றால் மற்றவர்களுக்கும் இதே கதைதான் என்ற முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது.
மன அழுத்தத்தில் அமலா பால்!
சினிமாவில் இன்று சில நட்சத்திரங்களுக்கு க்ளோஸ் அப் ஷாட்களை வைக்கவே முடியாது. உணர்வுகளை வெளிப்படுத்தி முகப்பாவனைகளைக் காட்டுவதில் இருக்கும் சிக்கல்தான் இதற்கு காரணம். இன்னும் சில நடிகைகளுக்கு மொழியும் தெரியாது. தமிழ் நன்றாக தெரிந்த சில நடிகர்களுக்கும் இதே கதிதான்.
ஆனால் ஒரு சில நட்சத்திரங்களுக்கு நடிப்பு அருமையாக வெளிப்படும். ஆனால் வாய்ப்புகள்தான் வராது. இந்தப் பட்டியல், ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன், அமலா பால் என நீண்டுகொண்டே போகும்.
இப்போது விஷயம் என்னவென்றால், அமலா பால் படங்களில் நடிக்காவிட்டாலும் ரொம்பவே பரபரப்பாக இருக்கிறார். மாலத்தீவுக்குப் போவது. பாண்டிச்சேரியில் இருப்பது. சமூக ஊடகத்தில் புகைப்படங்களை ஏற்றிக்கொண்டே இருப்பது என மும்முரமாக இருக்கிறார்.
ஆனாலும் வெப் சிரீஸிலும், ஒடிடி- தளங்களுக்கான படங்களில் நடிக்க மட்டுமே ஒரு சில வாய்ப்புகள் வந்தன.
இதனால் கொஞ்சம் வெறுத்துப்போன அமலா பால் இப்போது கவர்ச்சி திகட்டும் அளவிற்கு புகைப்படங்களையும், ரீல்ஸ் எனப்படும் வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டே இருக்கிறார். சில புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் தமன்னா நடித்த வெப் சிரீஸ் காட்சிகளுக்கு சவால் விடும் அளவிற்கு சூடேற்றுகின்றன.
படவாய்ப்புகள் இல்லை. சொந்தமாகவே படம் தயாரித்து நடிக்க வேண்டிய சூழல். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய நிம்மதி இல்லை. இதனால் ரொம்பவே மன அழுத்தத்தில் அமலா பால் இருக்கிறாராம்.
தமன்னாவின் இந்த சோஷியல் மீடியா யுக்தி அவருக்கு இப்போது பெரும் வரவேற்பை கொடுத்திருப்பதால் அதே வழியில் இப்போது அமலா பாலும் இறங்கியிருக்கிறார். ஆனால் இந்த அம்சங்களெல்லாம் 31 வயதான அமலா பாலுக்கு பலன் கொடுக்குமா என்று இனிதான் தெரியும்.
தமிழில் தலைப்பு வையுங்கள் – ஆர்.கே. செல்வமணி
’ஜென்டில்மேன்’ என்று ஷங்கர் தனது முதல் படத்திற்கு பெயர் வைத்தார். அப்படத்தின் வெற்றி, தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது.
அதன் பிறகு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வெளியாகின.
இது சரிப்பட்டு வராது என்று நினைத்த தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு வரிவிலக்கு என்று அறிவித்தார். இதையடுத்து தமிழில் பெயர் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் உயிர்பெற்றது.
ஆனால் இப்போது சமீப காலமாக அடுத்த தலைமுறை படைப்பாளிகளின் வருகைக்குப் பிறகு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.
’Love Today’, ‘DD Returns,’ ‘LGM,’ ‘Love,’ ‘Terror,’ ‘Dinosaurs,’ ‘Pizza-2’ என இப்போது ஆங்கில பெயர்களில் படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
‘தமிழ் கலாச்சாரம், தமிழின் பெருமை மீது கொண்டிருப்பவர்கள் இன்று ஏன் தங்களுடையப் படங்களுக்கு ஆங்கில பெயர்களை சூட்டுகிறார்கள் என்பது புரியவில்லை. சிலருடைய பேச்சுக்கும் அவர்களது செய்கைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழில் பெயர் வைத்தால் மானியம் கொடுத்தால் அது நன்றாக இருக்குமென முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்’ என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.