‘கிழக்கு’ பதிப்பக உரிமையாளர், வலதுசாரி ஆதரவாளர், எழுத்தாளர் என பலவாறாக அறியப்படும் பத்ரி சேஷாத்ரி கைதுதான் இப்போது இலக்கிய உலகின் ஹாட் டாக். பத்ரி சேஷாத்ரி கைது பற்றி எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன்
என் நிலைப்பாடு தெளிவானது.
கோவன் கைதிலிருந்து செந்தில் பாலாஜி கைது வரை அவை அவசியமற்றவை, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானவை என்றுதான் சொல்லி வருகிறேன். பத்ரி கைது விவகாரத்திலும் என் நிலைப்பாடு இதுதான்.
பேசியதற்கு கைது செய்வதை எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. கைது என்பதை வேறு வழி ஏதுமில்லாவிட்டால் கடைசியாக செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட வழிமுறை. மக்களாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் எல்லா நாடுகளும் இவ்வழிமுறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்கிறது. ஆனால், நடப்பது வேறு.
திராவிட இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் நண்பர் ஒருவர் இது ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது என்றார். அவ்வாறு நடந்திருக்குமா என்பதில் எனக்கு ஐயமே.
தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் வாயைத் திறக்கவே இல்லை. விருதுகள், வீடுகள் காத்திருக்கின்றபோது அரசை எதிர்த்துப் பேசுவது சரியாக வராது என்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நிற்கிறார்கள். பெருமாள் முருகனின் கருத்து சுதந்திரத்திற்குப் பொங்கியவர்கள் இன்று வாயை மூடிக் கொண்டிருப்பது இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
நண்பர் பத்ரி கைது செய்யப்பட்டிருப்பது எனக்கும் வருத்தம் தருகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கு தி.மு.க.வை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை.
புகழ்பெற்ற கவிஞர் எஸ்.ரா. பவுண்ட் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதற்கு நிகரானது பத்ரியின் கைதுக்கு காரணமான அவரது பேச்சு.
பத்ரி சேஷாத்ரி விவகாரத்தில் உணர்வு பொங்க பேசுகிறவர்கள் பலர் பேராசிரியர் ஆனந்த் டெண்டுல்மே, பத்திரிகையாளர் சித்திக் கப்பான், கவிஞர் வரவர ராவ், பாதிரியார் ஸ்டான் சுவாமி, சமூக செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டபோது எப்போதாவது ஏதாவது பேசியிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்களா? அவர்கள் வலதுசாரி அரசியலுக்கும் அராஜங்களுக்கும் எதிராக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஜாமீன் கூட மறுக்கப்பட்டு பலகாலம் சிறையில் உழல நேர்ந்தது. குறைந்தபட்ச சட்ட வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டது. உடல்நிலையை கருத்தில் கொண்டு கூட கருணை ஏதுமின்றி வரவர ராவுக்கும் ஸ்டான்ஸ் சுவாமிக்கும் சாய்பாபாவுக்கும் நீதி மறுக்கப்பட்டது.
கருத்துகள் தொடர்பான கைதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நம் எழுத்தாளர்களின் மெளனங்களுக்கும் ஆவேசங்களும் பிளவுண்ட மனசாட்சியால் ஆனது. அதற்கு எந்த மதிப்பும் இல்லை.
கவலைப்படாதீர்கள், பத்ரி உடனடியாக ஜாமீனில் வந்துவிடுவார். நான் மேலே குறிப்பிட்டவர்களைபோல மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிறையில் வாடமாட்டார். திமுகவை திட்ட உங்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
எழுத்தாளர் அராத்து
சமூக வலைத்தளங்களில் ரௌடிகள் போல வெறும் அவதூறுகளையும் ஆபாசக் கருத்துக்கள் மற்றும் கேவலமான தனிமனிதத் தாக்குதல்களையும் நடத்திக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்வதன் மூலம் அரசு சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு பொதுப் பிரச்சனையில் தன் கருத்தை சொல்கையில், விமர்சனம் வைக்கையில் கைது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்தாகத்தான் போய் முடியும். பத்ரி சேஷாத்ரி விடியோவில் சொன்ன கருத்துகள் முற்றிலும் மறுக்கக்கூடியவை என்றாலும் இந்தக் கைது தவறு என்பதுதான் என் பார்வை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அவதூறை சட்டத்தால் எதிர்கொள்ள வேண்டும்.
இதுவரை கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அளவு இடம் கொடுத்த மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இருந்து வந்திருக்கிறது. பாஜக கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைதுகளை செய்து வந்தால் , அதை எதிர்க்க அதே வழியில் செயல்படுவது நீண்ட நாள் நோக்கில் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.
இதுவும் தேவைதான். ஆனால், அதில் ஒரு அளவுகோல் இருக்க வேண்டும். ‘நாட்ல அவன் அவன் கொலை கொள்ளை கற்பழிப்பு பண்ணிட்டு திரிஞ்சிட்டு இருக்கான், சும்மா போஸ்ட் போட்டு, விடியோ போட்டு திரிஞ்சிட்டு இருக்குறவனை அரஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க’ என மக்கள் பேசும் நிலை வந்து விடக்கூடாது.
கலைஞர் அரசில் இப்படியெல்லாம் கைதுகள் நடக்காது. அவர் பக்கத்தில் போய் அவரையே அவதூறாகப் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், ஜெயலலிதா அப்படி அல்ல; எடுத்ததெற்கெல்லாம் கைது. ஜெயலலிதாவிற்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு லௌகீக பெண்மணி போல எடுத்தற்கெல்லாம் முகம் சுளித்துக்கொள்வார்.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தற்போதைய திமுக அரசு கலைஞர் வழியில் அல்ல, ஜெயலலிதா வழியில் நடக்கிறது. இதுதான் திமுக தொண்டர்களுக்கும் பிடித்திருக்கிறது.
இனி மத்திய பாஜகவில் பத்ரி சேஷாத்ரிக்கு கொஞ்சம் மைலேஜ் கூடும்.
எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியம்
பத்ரி சேஷாத்ரி கைதை கடுமையாக கண்டிக்கிறேன். காசுப்பூர் குறித்து அவர் சொன்ன கருத்துகள் அவலமானவை. கண்டிக்கத்தக்கவை. அவரது சார்பு நிலையை மோசமாக வெளிப்படுத்துபவை. ஆனால், அவை எதுவுமே கைதுக்கு உரியன அல்ல.
நவீன ஜனநாயக சமூகங்களில் கைது என்பது மிக மிக மிக அரிதாகவே நடக்க வேண்டியது. கொலை, கொள்ளை போன்றவற்றுக்குக் கூட கைது செய்வதற்கு prima facie ஆதாரம் தேவைப்படுகிறது. முணுக் என்றால் கைது என்பனவற்றை ஆதரிப்பது சரியல்ல. ஒரு சமூகமாக நாம் இன்னமும் இரண்டாம் நூற்றாண்டை தாண்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பெரும் ஊழல், நிதிச் சலவை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரை அமைச்சராக தொடர அனுமதித்துக் கொண்டிருக்கும் மாநில அரசு, அதற்காக சுப்ரீம் கோர்ட் வரை வாதாடிக் கொண்டிருக்கும் ஒரு அரசு, வெறுமனே ஆட்சேபகரமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியதற்காக மட்டுமே கைது எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது மாபெரும் சோக முரண்.
எழுத்தாளர் பால முருகன்
பத்ரி சேஷாத்ரி கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வலதுசாரிகளின் வழக்கமான பேச்சு அது. தவறான பேச்சு. ஆனால், அது காவல்துறையினர் வழக்கு போட்டு சிறை படுத்தும் அளவு எதுவும் இல்லாதது. அந்த பேச்சினால் 153(A) IPC இரண்டு குழுக்களுக்கு இடையே பகைமை நடந்ததாக குற்ற வழக்கு தாக்கல் ஏற்புடையதல்ல. பா.ஜ.க ஆட்சியில் இது போல் ஏராளமான வழக்குகள் புனையப்படுகிறது. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சட்டத்தை பழி வாங்கும் கருவியாக பயன்படுத்துகின்றனர். நாம் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டியதில்லை. இந்த கைது தவறானது.
எழுத்தாளர் அழகிய பெரியவன்
பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை கண்டித்து நண்பர்கள் என்ற முறையிலும், தன்னுடைய புத்தகத்தைப் பதிப்பித்தவர் என்ற முறையிலும் சக எழுத்தாளர்கள் சிலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இன்னும் சொல்லப்போனால் உயரிய குணம்.
காலமெல்லாம் சாதிமுறையையும் இந்து மத வெறியையும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான பிற்போக்கு கருத்துகளையும் எழுதியும் தெரிவித்தும் வருகின்ற இத்தகையவர்கள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு ஏற்றவர்களா, தகுதியானவர்கள் தானா என்று அவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது.
அவர்கள் எப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள். நாளைக்கு சட்ட நெருக்கடிகளிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு, யாரெல்லாம் தனக்கு ஆதரவாக பேசினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவர்கள் நிச்சயமாகப் பேசுவார்கள், எழுதுவார்கள் என்பது உறுதி.
எத்தனையோ தருணங்களில், தம்மக்கள் வாழ்வியலையும் உரிமையையும் பண்பாட்டையும் எழுதுகிற எழுத்தாளர்களைக்கூட கைவிட்டுவிடுகிற தமிழ்ச் சமூகம் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்!!!!
வேறென்ன செய்ய? நல்ல குணத்தை பாராட்டித்தானே ஆகவேண்டும்?!!!
எழுத்தாளர் தர்மராஜ்
பத்ரி சேஷாத்திரி கைதுக்கு வாழ்த்துகள். இனி அவர் ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்து வாழ்வில் சிறப்பார் என்பது என் கணிப்பு. மற்றபடி இந்த விவகாரத்தில் ‘கருத்துச் சுதந்திரப் பறிப்பு’ என்று சொல்லப்படும் எல்லாவற்றையும் நான் குப்பையில் தூக்கிப் போடுவேன்.
எழுத்தாளர் அம்பை
பத்ரி கைதுக்கு நான் கண்டனம் செய்கிறேன். அவர் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கூற அவருக்கு உரிமை உண்டு. இந்தக் கைது உச்சநீதி மன்றத்தைத் தாக்கியதற்கு என்று நினைக்கிறேன். Contempt of Court. வெகு காலமாகக் காத்திருந்து வாய்ப்புக் கிடைத்ததும் செய்த கைது.
கவிஞர் சுகிர்தராணி
பத்ரி சேஷாத்திரி, யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மணிப்பூர் கொடூர நிகழ்ச்சி பற்றிப் பேசும்போது, ஆமா… இப்ப என்ன? என்பதுபோல, அதை நியாயப்படுத்தி விட்டேத்தியாகப் பேசுகிறார். மேலும், உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் நீதிபதி பற்றியும் இழிவாகப் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் பெண் கவிஞர்கள் என்று என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை வரிகளைச் சொல்லிச் செல்கிறார்.அது இலங்கையில் நடந்தது பற்றியாம். கொலையும் செய்வாள் என்னும் அக்கவிதை 2015இல் வெளிவந்தது. அது இந்தியாவில் தலித்துகள், தலித் பெண்கள், ஒடுக்கப்பட்ட பெண்களின் மீது கொடூரமாக நிகழ்த்தப்படும் வன்முறைகள், ஆணவக் கொலைகள் பற்றியது. கயர்லாஞ்சி பிரியங்கா, அரியலூர் நந்தினி, சேலம் ராஜலட்சுமி, தேனி ராகவி, ஹாத்திராஸ் மணீஷா, காஷ்மீர் ஆஸிபா, இளவரசன், சங்கர், கோகுல்ராஜ், கண்ணகி முருகேசன், ஓசூர் நந்தீஷ் போன்ற படுகொலைகள் எல்லாம் இந்தியாவில் அல்லாமல் வேறு எங்கு நடந்தன? இந்தியாவில் எதுவும் நடக்காத மாதிரியும் அந்தக் கவிதைக்கும் இந்தக் கொடூரத்திற்கும் தொடர்பே இல்லாத மாதிரியும் கூறிச் செல்கிறார், பத்ரி.
எட்டு வருடத்திற்கு முன்பு எழுதிய அந்தக் கவிதை, இன்றும் ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் மீதான கொடுமைகளுக்கும் பொருந்துவது, மிகப்பெரிய துயரம். கலைகள் எல்லா காலத்திற்குமானது என்பது பதிப்பகம் நடத்தும் பத்ரி சேஷாத்ரிக்குத் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.
கவிஞர் பெருந்தேவி
சென்ற சட்டமன்றத் தேர்தலில் மனதார திமுகவை ஆதரித்தேன். என் நண்பர்கள் பலரிடம் தொடர்ந்து பேசி திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தேன். வருந்துகிறேன்.
பத்ரி சேஷாத்ரி தனது நேர்காணலில் மணிப்பூர் குறித்து தெரிவித்த பல கருத்துகள் என் பார்வையில் ஏற்புடையவை அல்ல. ஆனால், அவர் கைது, அதுவும் வார இறுதியில் உடனடியாக பெயில் வாங்கமுடியாதபடி நடக்கும் கைதுகளின் தொடர்வரிசையில் நடந்திருக்கும் கைது, கண்டிக்கப்பட வேண்டியது.
எழுத்தாளர் நக்கீரன்
அறிவுத்தளத்தில் இயங்கியதாக நம்பப்பட்ட பத்ரி உணர்ச்சி தளத்துக்குக் கீழிறங்கி காழ்ப்புணர்ச்சியுடன் பேசும் நிலைக்கு ஆளாகியதற்கு உள்நோக்கம் இருக்கலாம். அல்லது அரசியல் நோக்கிய நகர்வுக்கு அடித்தளமாகவும் இருக்கலாம். எப்படியாயினும் ஆன்ந்த் டெல்டும்டே போன்று இவர் மாதக் கணக்கில் சிறை வைக்கப்பட போவதில்லை. சீக்கிரமே வெளியே வந்து தியாகி பட்டத்துடன் உலாவப் போகிறார்.
வலதுசாரிகளான் குருமூர்த்தி தொடங்கி பி.ஏ.கிருஷ்ணன் வரைக்குமானவர்கள் எவ்வளவுதான் கீழ்தரமாக பேசினாலும் அவர்களுக்கென்று ஒரு ‘பண்பாட்டு பாதுகாப்பு வளையும்’ சமூகத்தில் உண்டு. ஆன்மீக மொழியில் அவர்கள் ‘பரமசிவன் கழுத்து பாம்பு.’ அவர்களை எளிதில் தீண்ட இயலாதவாறு வலுவான அரவணைப்பு அனைத்து தளத்திலும் உள்ளது. அந்த பாதுகாப்புதான் இவர்களது பேச்சின் துணிச்சலுக்கு பின்புலம். ஆனால், இதைக் கருத்து சுதந்திரம் என்று தவறாகக் குறிப்பதுதான் அவலம்.
கருத்து சுதந்திரம் என்றாலே உடனே வால்டேரின் வாசகத்தை தூக்கி கொண்டு வந்துவிடுவது வழக்கம். “உன்னுடைய கருத்துகளில் ஒன்றுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், அக்கருத்துகளைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” என்பதுவே அவரது வாசகம்.
ஆனால், எல்லோருடைய கருத்து சுதந்திரத்தையும் வலியுறுத்தின வால்டேர்தான், “குரங்குகளைவிட கொஞ்சம் முன்னேறியவர்கள் நீக்ரோக்கள். அவர்களைவிட உயர்ந்த தளத்தில் முன்னேறி இருப்பவர்கள் வெள்ளையர்கள்” என்று எழுதினார். இதைக் கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுகொள்ள முடியுமா? நம் வலதுசாரிகளின் கருத்துச் சுதந்திரமும் இந்த அளவில்தான் உள்ளது.
எனக்கு வியப்பளிப்பது ஒரு பதிப்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள நமது எழுத்தாளுமைகள். அவர்களில் பலரின் அறவுணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற ஆளுமைகள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானபோது இவர்களின் பலரது இதழ்களில் பெவிகால் தடவப்பட்டிருந்த மர்மம் இன்னும் விளங்கவில்லை.
எழுத்தாளர் ஆர். அபிலாஷ்
பத்ரி சேஷாத்ரி மீது ஒரு பதிப்பாளராகவும் ‘கிரிக் இன்போ’ இணையதளத்தின் மூலவர்களில் ஒருவர் எனும் அளவிலும் எனக்கு மரியாதையுண்டு.
கிழக்குப் பதிப்பகம் ஒரு வித்தியாசமான பதிப்பகம். வெகுஜன வாசிப்புக்கு குறைந்த விலையில் பல நல்ல அறிமுக நூல்களுக்கு எடுத்துச் சென்றது. காலக்கெடு விதித்து சம்பளம் கொடுத்து எழுத்தாளர்களைக் கொண்டு 150-180 பக்க அளவில் ஒரு தொழிற்சாலையைப் போல புத்தகங்களை உருவாக்கினார். என்.ஹெச்.எம். செயலியை அறிமுகப்படுத்தினார். அவர் இன்னும் பெரிய உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவர்.
2010க்குப் பிறகு பதிப்பாளராக அவரது வீழ்ச்சி மெல்ல துவங்கியது. சமூக வலைதளங்களில் ‘கொடியேந்திய வலதுசாரி குமரன்’ ஆகிவிட்டார். ஒரு பக்கம் பி.ஏ. கிருஷ்ணன் என்றால் இன்னொரு பக்கம் பத்ரி. அதே கொடியுடனே இப்போது சிறைக்கும் சென்றுவிட்டார். இதைப் பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்த புள்ளியை நோக்கித் தான் நகர்ந்து வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கிழக்கு பதிப்பித்த அரசியல், வரலாற்று நூல்களிலும் ஒரு மோசமான வலதுசாரிப் பார்வை தான் இருந்தது.
சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள பேட்டியில் பத்ரி மணிப்பூர் கலவரங்களை மிகுந்த மதக் காழ்ப்புணர்வுடன் சித்தரித்துப் பேசினார். பத்ரி இதற்கு முன்பும் டிவி சேனல்களில் பேசியதுண்டு என்றாலும் இம்முறை அவர் ஒரு தெளிவான உத்தேசத்துடனே வந்ததாகத் தெரிகிறது. அதைப் பார்க்கையில் “நானும் ரௌடி தான்யா, என்னையும் அரெஸ்ட் பண்ணுய்யா” என அவர் கேட்பதைப் போலிருந்தது. இனி பத்ரி வெளிவந்ததும் அவரை வரவேற்பார்கள். அவரை அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பேச வைத்து தியாகி ஆக்குவார்கள்.
எனக்கு பத்ரியின் கருத்துக்களுடன் உவப்பில்லை என்றாலும் அவரை தனிப்பட்ட முறையில் பிடிக்கும். ஆனால், அமெரிக்காவில் படித்து வேலை செய்து எலான் மாஸ்க் போல இருக்க வேண்டியவர் இப்படி மாரிதாஸ், சவுக்கு குரூப்பில் சேர்ந்துவிட்டாரே என நினைத்தால் தான் சற்று வருத்தமாக இருக்கிறது.