No menu items!

கதை கேளு… கதை கேளு… தக்காளி கதை கேளு!

கதை கேளு… கதை கேளு… தக்காளி கதை கேளு!

தக்காளி விலை உயர்வுதான் இப்போது இந்தியாவின் ஹாட் டாபிக். தமிழக வரலாற்றிலேயே…, ஏன் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக கிலோ 200 ரூபாய்க்கு மேல் போய்விட்டது தக்காளியின் விலை. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான குடும்பத் தலைவிகளுக்கு தக்காளி இல்லாமல் சமைக்கத் தெரியாது என்பதால், எந்த விலை கொடுத்தாவது தக்காளியை வாங்கியாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

ஆனால் உங்களுக்குத் தெரியுமா?… 16-ம் நூற்றாண்டு வரை இந்தியர்களுக்கு தக்காளி என்றால் என்னவென்றே தெரியாது. புளிப்பு சுவைக்கு புளியைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த போர்ச்சுகீசியர்கள்தான் முதலில் இந்தியாவுக்கு தக்காளியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதன்பிறகு படிப்படியாக தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தக்காளியைப் பற்றி இதுபோன்ற மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்…

தக்காளிகள் முதலில் பெரு நாட்டில் விளைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவை விளையத் தொடங்கியதாக மரபணு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு சிலர் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தக்காளி விளையத் தொடங்கியதாக கூறுகின்றனர்.

தக்காளி 16-ம் நூற்றாண்டில்தான் முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமானது. ஐரோப்பாவில் அறிமுகமான தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்ததால், அங்குள்ள மக்கள் முதலில் அதை ’கோல்டன் ஆப்பிள்’ என்று அழைத்தனர்.

பைபிளில் தக்காளியைப் பற்றி குறிப்பிடப்படாததால், அவை விஷத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று முதலில் ஐரோப்பியர்கள் பயந்துள்ளனர். அதனால் முதலில் அவற்றை அவர்கள் சமையலுக்கு பயன்படுத்தவில்லை. டைனிங் டேபிளை அலங்கரிக்க மட்டுமே பயன்படுத்தினர்.

தக்காளி பழ வகையைச் சேர்ந்ததா, காய்கறி வகையைச் சேர்ந்த்தா என்ற விவாதம், அது பயன்பாட்டுக்கு வந்த காலம் முதலே இருந்து வருகிறது. இது தொடர்பான ஒரு வழக்குகூட அமெரிக்க உச்ச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் 1893-ம் ஆண்டில் தக்காளி ஒரு காய்கறி என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தக்காளி என்றதும் நம் நினைவுக்கு சிவப்பு நிறம்தான் ஞாபகத்துக்கு வரும். சிவப்பாக தளதளவென்று இருக்கும் தக்காளிதான் நல்ல தக்காளி என்ற எண்ணம் பல குடும்பத் தலைவிகளுக்கு இருக்கிறது. ஆனால் தக்காளியின் நிறம் சிவப்பு மட்டுமல்ல. மஞ்சள், ஊதா, கருப்பு, இளஞ்சிவப்பு நிறத்தில்கூட தக்காளிகள் இருக்கின்றன.

உலகளாவிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் இருக்கின்றன.

மனிதனைப் போலவே தக்காளிகளுக்கும் விண்வெளிக்கு சென்ற பெருமை இருக்கிறது. கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக சுமார் 60 ஆயிரம் தக்காளி விதைகளை விண்வெளிக்கு கொண்டுசென்று விண்கலத்தில் உள்ள கண்ணாடி அறைகளில் விதைத்து, அதன் வளர்ச்சியைக் கண்காணித்துள்ளனர்.

உலகிலேயே அதிக அளவில் தக்காளிகளை விளைவிக்கும் நாடாக சீனா உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் அதிக அளவாக 41.8 மில்லியன் டன் தக்காளிகளை அந்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் அமெரிக்காவும், 3-வது இடத்தில் இந்தியாவும் அதிக அளவிலான தக்காளிகளை உற்பத்தி செய்கின்றன.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 14 மில்லியன் டன் தக்காளி விளைவிக்கப்படுவதாக இந்திய தோட்டக்கலைத் துறை தெரிவிக்கிறது. 2019-20-ல் இந்தியாவில் 20 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அந்திராவில் 6 மில்லியன் டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது. அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் சுமார் 1.8 மில்லியன் டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணாத்தின் தேசிய பானமாக தக்காளி ஜூஸ் உள்ளது.

தக்காளியின் எடையில் 94.5 சதவீதம் தண்ணீராகும். இதிலுள்ள சத்துகள் இதயத்துக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஒரு தக்காளியில் சராசரியாக 22 கலோரி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தக்காளி, 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒக்லாமா மாகாணத்தில் விளைந்தது. இதன் எடை 3.5 கிலோ.

இந்தியாவில் தக்காளியை அதிகம் விளைவிக்கும் மாநிலமாக ஆந்திரா உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள புனோல் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று தக்காளி திருவிழா நடைபெறும். ’லா டொமாட்டினா’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சுமார் லட்சக்கணக்கான கிலோ தக்காளியை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...