தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ‘மூவ்’கள் இப்போது இந்திய அளவில் கவனிக்கப்படுகின்றன. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மற்ற மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதம், தேசிய அளவிலான சமூக நீதி கூட்டமைப்பு, ஆளுநர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்பு என மு.க. ஸ்டாலின் நடத்தும் அரசியலும் தமிழகத்தைக் கடந்து டெல்லியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? மம்தா பானர்ஜி, சரத்பவார் என 2024 பிரதமர் போட்டியில் இருக்கும் மாநிலத் தலைவர்களுடன் ஸ்டாலினும் இணைகிறாரா?
இதை உறுதிப்படுத்துவது போல், “வரலாற்றில் குப்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், மொகலாயர்கள் காலம், சோழர் காலம், பல்லவர் காலம் என்ற வரிசையில் எதிர்கால வரலாற்றில் மு.க. ஸ்டாலின் காலமும் நிச்சயம் இடம்பெறும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் அவரது கரங்கள், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் முன்னிலையில்தான் இதைக் கூறினார், திருச்சி சிவா.
‘திராவிட மாடு’ ( மாடுதான் ) போன்ற திமுக ஆதரவு சமூக வலைதள பக்கங்களிலும், “இமையம் முதல் குமரி வரை எங்கே எந்த பிரச்சினை என்றாலும் முதல் குரலாக ஒலிக்கிற ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஒரே தலைவர் ஸ்டாலின்” என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சமூகநீதிக்கான போரில் அனைவரையும் இணைப்பதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய தலைவராகக் காட்சியளிக்கிறார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் கூறியுள்ளார்.
தனது அரசியல் குருவும் தந்தையுமான கருணாநிதியை அடியொற்றியே மு.க. ஸ்டாலினின் இந்த தேசிய அரசியல் நகர்வும் உள்ளது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்ற காலம் தொடங்கி தன் வாழ்நாளில் இறுதிக் கட்டம் வரை இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் கருணாநிதி. 1969-ம் ஆண்டே மாநில சுயாட்சிக்காக, மத்திய – மாநில அரசுகளின் உறவு நிலையை உறுதி செய்வதற்காக ராஜமன்னார் கமிட்டியை அமைத்து இந்தியாவையே அதிர வைத்தார். 1975-ல் நாடு முழுவதும் அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார்.
1990களில் ராஜீவ் காந்திக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய விபிசிங் தலைமையில், காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் முதல்வர்களை அணி திரட்டினார். தேசிய முன்னணியை உருவாக்கி ‘கிங் மேக்கர்’ ஆனார். அப்போது தொடங்கி 2014 வரை மத்தியில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கூட்டணி ஆட்சிகளிலும் ஒரு சக்தி வாய்ந்த நபராக பவனிவந்தார்.
இப்போது ஸ்டாலின் காலம்…
கடந்த சில மாதங்களாக ஸ்டாலின் கவனப்படுத்துபவை தேசிய அரசியலில் முக்கிய விவாதங்களாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதல்வரானதும் சட்டசபையில் பேசிய ஸ்டாலின், “இந்தியா என்பது மாநிலங்களால் ஆன ஒன்றியம்” என்றார். அந்த பேச்சு வீடியோ தேசிய அளவில் இணையம் முழுக்க பரவி விவாதங்களை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பதாகவும் மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிப்பதாகவும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது இதன் தொடர்ச்சிதான்.
ஸ்டாலின் முயற்சியால் நீட் எதிர்ப்பும் பல மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலும் தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியுள்ளது.
முன்னதாக மருத்துவ படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காகத் தமிழ்நாடு அரசு நடத்திய சட்ட போராட்டமும் அதன் வெற்றியும் பிகார், உத்தரப் பிரதேசம் உட்பட வடஇந்திய மாநிலங்களில் ஓபிசி பிரிவினர் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர், ஸ்டாலின் குறித்த செய்திகளில் ஆர்வம் காட்டிய உத்தரப் பிரதேச இளைஞர்கள் அவரது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினர்.
சரி, ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு சென்றால் ராகுல் காந்திக்கு போட்டியாக வருவாரா? அதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முதலில் அறிவித்தது ஸ்டாலின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஸ்டாலினின் தேசிய அரசியல் ‘மூவ்’ குறித்து கவனித்து வரும் அதிமுக, பாஜகவினரும் உணர்ந்துள்ளார்கள். எனவேதான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தியத் துணைப் பிரதமர் என்ற கனவு ஏற்பட்டுள்ளது” என்று கவனமாகவே விமர்சித்துள்ளார்.
ஆனால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “எதுவும் சாத்தியம். நமக்கு தேவகவுடா பிரதமராக இருந்துள்ளார், அதனால் ஏன் முடியாது?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.
வில்சன் வார்த்தைகள் சாத்தியமானால், இந்தியப் பிரதமரான வேட்டி கட்டிய முதல் தமிழனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருப்பார்.