இந்தப் பெயரில் இப்போது சுடச்சுட ஒரு திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. அணுகுண்டின் தந்தையாகக் கருதப்படும் ஜே. ராபர்ட் ஓபன்ஹைமரின் பயோபிக்தான் இந்தப் படம். படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். படத்தில் ஓபன்ஹைமராக நடித்திருப்பவர் ஐரிஷ் நடிகரான கிளியன் மர்பி. இந்த பயோபிக் படம் திரைக்கு வருவதால், ஓபன்ஹைமரைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் ஆர்வம் புதிதாகத் திக்கெட்டும் தெறிக்கத் தொடங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மன் யூத குடும்பம் ஒன்றின் முதல் தலைமுறை குழந்தை ஓபன்ஹைமர். 1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்தவர் இவர். அப்பா டெக்ஸ்டைல் துறையில் கொடி கட்டிப்பறந்தார். அரண்மனை மாதிரியான வீடு. படகுக் கார். வீடு முழுக்க வேலைக்காரர்கள் என வளர்ந்தவர் ஓபன்ஹைமர்.
சின்ன வயதிலேயே ஓபன்ஹைமருக்கு செம அறிவு. 9 வயதில்(!) கிரீக், லத்தீன் மொழிகளில் தத்துவ இயல்(!) படித்தார். கனிமவியலிலும் இவர் படுகெட்டிக்காரர். நியூயார்க் மினராலஜி கிளப்புக்கு இவர் ஒரு கட்டுரையை எழுதி அனுப்ப, இவரை சொற்பொழிவாற்ற அந்த கிளப் அழைப்பு விடுத்தது. கட்டுரையை எழுதியனுப்பிய ஓபன்ஹைமர் ஒரு குட்டிப்பையன் என்பது அந்த கிளப்புக்கு பிறகுதான் தெரியும்.
1923ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் வேதியியில் மாணவர். நச்சு ரசாயனம் படிந்த ஆப்பிள் பழத்தை தெரியாத்தனமாக இவர் பேராசிரியரின் மேசையில் வைத்துவிட்டுப் போக, பேராசிரியர் நல்லவேளை அதை சாப்பிடவில்லை. ‘உடனே ஒரு மனோதத்துவ நிபுணரைப் போய்ப்பார்’ என்று பேராசிரியரிடம் திட்டுவாங்கியவர் ஓபன்ஹைமர்.
இவரது காதல் முயற்சிகள் அடிக்கடி தோற்றுப் போகும். அப்போதெல்லாம் இலக்கியத்தின் பக்கம் ஒதுங்கி இளைப்பாறுவார் ஓபன்ஹைமர். இவரைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்தவர் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்தான். ‘ஓபன்ஹைமர் கிட்ட இருக்கிற பிரச்சினையே இதுதான். அவனைக் காதலிக்காத விஷயங்களைத்தான் அவன் காதலிப்பான்’ என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் ஐன்ஸ்டைன்.
கலிபோர்னியாவில் கல்லூரி பேராசிரியராகவும் இருந்த ஓபன்ஹைமர், ஒரு கட்டத்தில், காதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து போனதால், பயாலஜி படித்த கேதரைன் கிட்டி ஹாரிசன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
அந்த காலகட்டத்தில், நியு மெக்சிகோ பாலைவனத்தின் லாஸ் அலாமோஸ் பகுதியில் அதி உயர் ரகசிய ராணுவத் திட்டங்களை அமெரிக்கா தொடங்கியது. அணுகுண்டு ஒன்றை தயாரித்தே ஆகவேண்டும் என்று அமெரிக்கா படுபயங்கர முனைப்புடன் இருந்த நேரம் அது. அதற்காக ‘மன்ஹாட்டன் திட்டம்’ உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தின் இயக்குநரானார் ஓபன்ஹைமர்.
இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டம் அது. ஓர் அணுகுண்டின் மூலம்தான் உலகப்போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. ஆகவே, காலத்துடன் ஓர் ஓட்டப்போட்டி நடத்தியபடி விறுவிறுப்பாக ஓர் அணுகுண்டை உருவாக்கினார் ஓபன் ஹைமர். 52 கிலோ எடை, ஐந்தடி பத்தங்குல உயரம். உலகத்தின் முதல் அணுகுண்டு உருவானது.
1945ஆம் ஆண்டு ஜூலை 16. பதுங்கு குழிக்குள் சிகரெட்டை புகைத்தபடி படபடவென இதயம் துடிக்க, இருமிக் கொண்டே காத்திருந்தார் ஓபன்ஹைமர். அணுகுண்டு சோதனை ஆரம்பமானது. 21 கிலோ டன் வெடிப்பு அது. வானத்தில் காளான் வடிவப் புகை தோன்றி சூரியனை மறைத்தது. குண்டுவெடித்த அதிர்ச்சியலை 160 கிலோ மீட்டர் தொலைவு வரை பரவியது. அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஓபன்ஹைமர்.
அடுத்து என்ன? இரண்டு அணுகுண்டுகள் சுடச்சுட தயாராயின. ஜப்பான் மீது அந்த அணுகுண்டுகளை வீச வேண்டியதுதான் பாக்கி. ‘பாவம் ஜப்பான் மக்கள்’ என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் ஓபன்ஹைமர். ஆனால், அணுகுண்டுகளை எப்படி வீச வேண்டும் என்று ராணுவ வல்லுநர்கள் கூட்டத்தில் பேசியபோது ஓபன்ஹைமரின் மனநிலை வேறு மாதிரியாக மாறியிருந்தது.
‘மழை அல்லது மூடுபனி இருக்கும்போது அணுகுண்டை வீசக்கூடாது. விழுகிற அணுகுண்டு நம் பார்வையில் படும்படி வீச வேண்டும். ரொம்ப உயரத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்து விடக் கூடாது, பிறகு சேதம் குறைவாகி விடும்’ என்று விரிவுரையாற்ற ஆரம்பித்து விட்டார் ஓபன்ஹைமர்.
‘ஜெர்மனிக்கு இன்னும் அணுகுண்டு தயாராகவில்லை’ என்று அவர் சொன்னபோது ஒரே விசில் சத்தம்.
அதன்பிறகு, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் சில நாட்கள் இடைவெளியில் அணுகுண்டுகள் வீசப்பட்டபோது, ஓபன்ஹைமர் வெற்றி வீரரைப் போல கையை ஓங்கி குத்திக்காட்டிய சம்பவம்கூட நடந்திருக்கிறது.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஓபன்ஹைமர். அதில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொல்லும் வசனம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ‘கடமையில் வழுவாதே. இப்போது போர் செய்வது உன் கடமை. யார் வாழ வேண்டும் யார் சாக வேண்டும் என்பதை முடிவு செய்பவன் நான். நீ கழிவிரக்கம் கொள்ளாதே. இந்த வேளையில் நானே மரணம். நானே உலகத்தை அழிப்பவன்’ என்ற வசனத்தை ஓபன்ஹைமர் ஒரு நேர்காணலில் கூட பேசியிருக்கிறார்.
ஆனால் பாவம். அணுகுண்டுகள் வீசப்பட்ட பிறகு ஓபன்ஹைமரின் மனநிலை அடியோடு மாற்றம் கண்டது. 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வெள்ளை மாளிகை ஓவல் அறையில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி டுருமனை சந்தித்தபோது, ‘என் கைகளில் ரத்தம் படிந்திருக்கிறது’ என்றிருக்கிறார் ஓபன்ஹைமர், குற்ற உணர்ச்சியுடன்.
‘இல்லை. என் கையில்தான் ரத்தம் படிந்திருக்கிறது. அதைப் பற்றி நான்தான் கவலைப்பட வேண்டும்’ என்றிருக்கிறார் ஹாரி டுருமன். ‘இவரை இனிமேல் நான் பார்க்கக்கூடாது’ என்று ஹாரி டுருமன் கடுகடுத்ததாகக் கூட கூறுவார்கள்.
கிரேக்க தொன்மக் கதைகளின்படி விண்ணுலகத்தில் இருந்து பூவுலகத்துக்கு நெருப்பைத் திருடி வந்தவன் புரோமிதியஸ். ஓபன்ஹைமரும் இந்த பூவுலகுக்கு அணுகுண்டை கொண்டு வந்த ஒருவகை புரோமிதியஸ்தான்.
அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவைப் பார்த்தபின் அது பற்றிய கழிவிரக்கத்திலேயே வாழ்ந்த ஓபன்ஹைமர், 1967ஆம் ஆண்டு 62ஆவது வயதில் இறந்து போனார்.
‘அணுகுண்டு என்பது ஒரு கற்பனையாக இருந்த காலத்தில் அதை யதார்த்தமாக்கி காட்டியவர் ஓபன்ஹைமர். அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது’ என்றொரு கருத்தும் இருக்கிறது.
ஓபன்ஹைமர் தொடர்பாக தற்போது திரைக்கு வந்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு ஒருவர், ‘கூட்டம் நிரம்பிய திரையரங்கில் ஒரு சின்ன சத்தம் கூட இல்லாமல் ஒரு திரைப்படம் முடிவதை இப்போதுதான் பார்க்கிறேன்’ என்றிருக்கிறார். அந்த அளவுக்கு ஆழமான அமைதியுடன் நிறைவடைவது திரைப்படம் மட்டுமல்ல, ஓபன்ஹைமரின் வாழ்க்கையும்தான்.