ஒரு கிரிக்கெட் பேட்டை பயன்படுத்த 100 கோடி ரூபாய் வாங்குகிறார் விராத் கோலி. இதுதான் இன்றைய கிரிக்கெட் உலகின் அதிரடி செய்தி.
சாதரணமாய் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போது பேட் வாங்கவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். சுமாரான ஒரு பேட்டை வாங்க ஆறாயிரம் ரூபாயாவது செலவழிக்க வேண்டியிருக்கும். அதுவே நல்ல பேட் என்றால் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும். விராத் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற ஆட்டக்காரர்கள் விலை 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.
கிரிக்கெட் ஆடத் தொடங்கும்போதுதான் பேட் வாங்கும் கஷ்டமெல்லாம். திறமையாக விளையாடி பெயரும் புகழும் பெற்றுவிட்டால் பேட் இலவசமாக கிடைக்கும். அது மட்டுமல்ல அந்த பேட்டை பயன்படுத்த கோடிகளில் பணமும் கிடைக்கும்.
கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை ஸ்பான்சர் செய்ய, நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு நிறுவனங்கள் வரும். விளம்பரத்தில் நடிப்பதால் வரும் பணம் போதாதென்று கிரிக்கெட் பேட்டில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை பொறிப்பதற்கே கோடிக்கணக்கில் பணம் கொட்டும்.
அந்த வரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீர்ர் என்ற பெருமை விராட் கோலிக்கு இருக்கிறது. கோலி பயன்படுத்தும் பேட்டின் விலை என்ன… 28 ஆயிரம் ரூபாய். அவர் பயன்படுத்தும் பேட்டின் பெயர் MRF கோல்ட் விசார்ட். இத்தனை காஸ்ட்லியாக அந்த பேட் இருப்பதற்கு காரணம் அதன் எடை. வெறும் 1.15 கிலோ எடைகொண்ட இந்த பேட்டில் பட்டாலே பந்துகள் பறக்கும்.
விராட் கோலி காசு கொடுத்து இந்த பேட்டை வாங்க வேண்டியதில்லை. பேட்டும் கொடுத்து அந்த பேட்டை பயன்படுத்த காசும் கொடுக்கிறது எம்.ஆர்.எஃப். நிறுவனம். அதுவும் கொஞ்ச நஞ்ச பணம் அல்ல, 100 கோடி ரூபாய்.
கோலியுடன் 8 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ள எம்.ஆர்.எஃப், நிறுவனம் 100 கோடி ரூபாயை விளம்பரப் பணமாக கோலிக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறது. சுருக்கமான சொல்லப்போனால், அந்த பேட்டை பயன்படுத்துவதற்காக கோலிக்கு ஆண்டுதோறும் 12.5 கோடி ரூபாயை வழங்க உள்ளது MRF நிறுவனம்.
கோலிக்கு அடுத்ததாக பேட்டை பயன்படுத்த அதிக பணம் வாங்கியவர் சச்சின். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரும் MRF நிறுவனத்தின் கிரிக்கெட் பேட்களைத்தான் பயன்படுத்தினார். அந்த நிறுவனத்தின் லோகோவுடன் கூடிய கிரிக்கெட் பேட்களை பயன்படுத்த அவருக்கு ஆண்டுதோறும் 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
சென்னையின் செல்லப்பையனான தோனிக்கு உலகம் முழுக்க ரசிகர் பட்டாளம் உண்டு. அதனால் அவரையும் பேட் ஸ்பான்சர்கள் விட்டு வைக்கவில்லை. தோனியின் கிரிக்கெட் பேட்டில் ஸ்பார்ட்டன் என்ற லோகோவை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த லோகோவைப் பயன்படுத்துவதால் தோனிக்கு ஆண்டுதோறும் 4.33 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கிறது ஸ்பார்ட்டன் நிறுவனம்.
தோனிக்கு அடுத்து கிரிக்கெட் பேட்டுக்காக அதிக அளவில் ஸ்பான்சர்ஷிப் பெற்றுள்ள வீர்ர் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக் கோப்பையிலும், 2011 உலகக் கோப்பை தொடரிலும் இந்தியாவின் நட்சத்திர வீர்ராக விளங்கிய இவரது பேட்டில் PUMA நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும் இதற்காக அவருக்கு அப்போதே ஆண்டொன்றுக்கு 4 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.
இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும், சமீப காலமாக அதிகம் ரன்களைக் குவிக்காத்தால், ரோஹித் சர்மாவின் பிராண்ட் வேல்யூ கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதனால் தனது பேட்டில் CEAT நிறுவனத்தின் லோகோவை வைத்திருக்க அவருக்கு வழங்கப்படுவது 3 கோடி ரூபாய்.
அதேநேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து உள்ளே வெளியே என ஆடிக்கொண்டிருக்கும் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவணுக்கு ஆண்டுக்கு 3 கோடியை பேட்டுக்கான ஸ்பான்சர்ஷிப் பணமாக தூக்கிக் கொடுத்திருக்கிறது MRF நிறுவனம்.