ஒட்டுமொத்த இந்தியாவின் இப்போதைய ஹாட் நியூஸ் தக்காளிதான். கடந்த மாதம் வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளிக்கு இப்போது ஏகப்பட்ட மவுசு. நாட்டில் பல பகுதிகளில் 150 ரூபாய்க்கு மேல் விற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரேஷன் கடைகளில் வைத்து விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் 100-க்கும் 130-க்கும் இடையில் ஓரளவு கட்டுப்பாட்டில்(!) உள்ளது.
பொதுவாக ஒரு காய்கறியின் விலை உயர்ந்தால், அதை வாங்காமல் தவிர்ப்பது மக்களின் வழக்கம். ஆனால் தக்காளியைப் பொறுத்தவரை அது முடியாது. அசைவ உணவு, சைவ உணவு என்று எந்த வகை உணவைச் சாப்பிடுபவராக இருந்தாலும் சரி, அதில் தக்காளியை தவிர்க்க முடியாது. அதனால் தக்காளியின் விலை உயர்வால் தவித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். 5 தக்காளி போடும் குழம்பில் 4 தக்காளிகளைப் போடுவது, 3 தக்காளி போடும் உணவில் 2 தக்காளிகளைப் போடுவது என்று சிக்கனப்படுத்தி வருகிறார்கள்.
ஓட்டல்களில் வழக்கமாக டிபனுக்கு வழங்கப்படும் சட்னிகளில் தக்காளிச் சட்னி இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவில் தக்காளிச் சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.
தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
நம் நாட்டில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் தக்காளி அதிகம் விளையும். மகாராஷ்டிராவில் உள்ள நாராயண்காவ், ஜுன்னார் ஆகிய பகுதிகள், கர்நாடகாவில் பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகள், ஹிமாச்சல் பிரதேசில் உள்ள சொலான் பகுதி ஆகியவற்றில்தான் தக்காளி அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.
அதிலும் மகாராஷ்டிர மாநிலம்தான் இந்த 3 மாநிலங்களில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில விவசாயத் துறை செயலாளர் சுனில் சவான், மாநிலத்தில் உள்ள விவசாய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் சவான், “கடந்த 6 மாதங்களாக தக்காளியின் விலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒரு கிலோ தக்காளியின் விலை 6 ரூபாயில் இருந்து 9 ரூபாய்க்குள்தான் இருந்திருக்கிறது. இதனால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மார்ச் மாதத்தில் தக்காளின் விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், அதற்கடுத்த மாதத்திலேயே மீண்டும் 10 ரூபாய்க்கு கீழ் சென்றுவிட்டது.
இந்த குறைவான விலை விவசாயிகளை கடுமையாக பாதித்தது. உற்பத்தி செலவைவிட தக்காளியின் விலை குறைவாக இருப்பதால், விவசாயிகள் அதைப் பயிரிடுவதைக் குறைத்தனர். தக்காளி பயிரிடும் பரப்பளவை சுருக்கியதுடன் வேறு பயிரை விளைவித்தனர். அத்துடன் பருவம் தவறிய மழையாலும் தக்காளியின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது” என்கிறார்.