தனது ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆட்களை வைத்து கொண்டு, விஜய் படத்தைக் காட்டிய புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய் வாழ்க என்ற கோஷத்தை கிளப்பிவிட்டார். முதல்வர் வாழ்க என்ற கோஷத்தை கொஞ்ச நேரம் ஒலிக்க செய்துவிட்டு அதன்பிறகே தனது பாடி லாங்க்வேஜை மாற்றினார்.
ஆக விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த். விஜயின் நடவடிக்கையும் அதைப் போலவே இருக்கிறது.
பொதுவாகவே விஜய்க்கு, தெலுங்கு சினிமாவின் மகேஷ் பாபுவின் மேனரிசமும், ஆக்ஷனும் பிடிக்கும். அவற்றின் சாயலை விஜய் படங்களில் பார்க்க முடியும். இப்போது அரசியலுக்கு வர விரும்பும் விஜயின் நடவடிக்கைகள் அனைத்துமே, தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பாணியில் இருக்கின்றன.
பவன் கல்யாண் ‘வராஹி விஜய யாத்ரா’ என்ற பெயரில் ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மக்களைச் சந்திக்கிறார். இதேபோன்று விஜயும் மக்களைச் சந்திக்கும் பயணத்திட்டம் ஒன்றை திட்டமிடச் சொல்லியிருக்கிறார்.
அடுத்து படம் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்த மக்கள் பயணம் தொடங்க இருக்கிறதாம்.
அதேபோல், மக்களிடையே பேசிய பவன் கல்யாண், ‘அரசியலையும், சினிமாவையும் ஒன்றாக பார்க்காதீங்கன்னு உங்களை கேட்டுக்குறேன். உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாரோ அவரை நீங்க கொண்டாடுங்க. அது யாராக இருந்தாலும் சரி. இன்னிக்கும் பிரபாஸ் என்னைவிட பெரிய ஹீரோ. மகேஷ் பாபு என்னைவிட பெரிய ஹீரோ. அவங்க பான் – இந்தியா ஹீரோக்கள், என்னை திக சம்பளம் வாங்குறாங்க. ருக்கும் தெரியாது. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணை உலக முழுசும் தெரியும், என்னை உலகளவுல யாருக்கும் தெரியாது. இதை சொல்றதுல எனக்கு எந்தவிதமான ஈகோவும் இல்ல. விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் போராடுறேன். அவங்க வாழ்க்கையில் ஒளி உண்டாவதை பார்க்க ஆசைப்படுறேன். அதனாலே எல்லா ஹீரோக்களும் இந்த போராட்டத்துல எனக்கு உதவிக்கரம் கொடுப்பாங்க. அவங்க ரசிகர்களும் கைக்கோப்பாங்க’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தார்.
இப்போது விஜய் ரசிகர்களும் இதையே முன்மொழிகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் அஜித், சூர்யா ரசிகர்களும் தளபதிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆக அடுத்து சில மாதங்களில் பவன் கல்யாண் செய்யும் அனைத்தையும் கூர்ந்து கவனித்தாலே போதும் விஜயின் பாய்ச்சல் எப்படி இருக்கும் என்பது ஒரளவிற்கு யூகித்து விடலாம் என்ற முணுமுணுப்பு கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்திருக்கிறது
எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்
சமீப காலமாகவே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நம்மூர் மக்களுக்கே உரிய அந்த சரும நிறம், கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் விதம், நடிப்பில் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் அந்த நடிப்பு என இன்றைக்கு பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிப்பதற்கு இயக்குநர்களின் முக்கிய தேர்வுகளில் ஒருவராக இருக்கிறார்.
இருந்தாலும் இவருக்கு பெரும் வருத்தம் இருக்கிறது. இப்போது இதை வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கிறார்.
‘இங்கே ஹீரோக்களை விட ஹீரோயின்கள்தான் அதிகம் இருக்காங்க. இதனால் யாருக்கும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. எந்தவொரு ஹீரோயினுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைப்பதும் இல்லை. என் விஷயத்தையே எடுத்துப்போம். நிகழ்ச்சி நடக்கும் போது, பல திரைப்பட முக்கியப்புள்ளிகள் மேடையிலேயே என்னுடைய நடிப்பைப் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் அவங்களுடைய படங்களில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பது இல்லை.
இதனால்தான் எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறேன். சின்ன பட்ஜெட், கதாநாயகியை மையமாக கொண்ட கதைகள் என நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது எனக்கென்று ரசிகர்கள் நடிப்பையும், படத்தையும் பாராட்டுகிறார்கள். இப்படியே நான் படம் பண்ணுவதால், இப்போது வரைக்கும் 15 படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதிகப் படங்களில் நடிக்க முடியவில்லை’’ என்று உணர்ச்சிவசப்பட்டு உருகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஓட்டம் பிடிக்கும் ஓடிடி!
திரையரங்குகளில் திரையிடுவதற்காக எடுக்கப்படும் திரைப்படங்களை ஒடிடி தளங்களில் திரையிடும் போது, திரையரங்குகளுக்கு அதன் வருவாயிலிருந்து ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென யாருமே யோசிக்கவே முடியாத வகையிலான ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது தயாரிப்பாளர்களுக்கான சங்கங்களில் ஒன்று.
திரையரங்குகளுக்கு மக்களை வரவிடாமல் தடுப்பது ஒடிடி நிறுவனங்கள்தான் என்று ஒரு குற்றச்சாட்டு, தயாரிப்பாளர்கள் தரப்பில் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருகிறது.
தயாரிப்பாளர்கள் பார்வையில் ஒடிடி நிலைமை இப்படி என்றால், ஒடிடி நிறுவனங்களின் நிலைமை இப்போது கவலைக்கிடமாகி வருவதாக கூறுகிறார்கள்.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆண்டி ஜாஸி, அமேசான் எடுத்துவரும் சில முக்கிய ஷோக்களின் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது பெரும் பொருட்செலவில் எடுத்து, ஒரிஜினல்ஸ் என்று வெளியிட்ட பல வெப் சிரீஸ்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு என்ன காரணம்.. அடுத்து என்ன.. என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
பாலிவுட்டின் ப்ரியங்கா சோப்ரா நடிப்பில், ஏறக்குறைய 2,000 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘சிடாடல்’ வெப் சிரீஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதுதான் இப்போது பிரச்சினையாகி இருக்கிறது.
பெரும் பட்ஜெட், முக்கிய நட்சத்திரங்கள் என இப்படி எடுக்கப்படும் ஒரிஜினல்களில் எவை எவை வரவேற்பை பெற்றிருக்கின்றன, என்ன செலவாகி இருக்கிறது என்ற கணக்குகளை திரும்பி சரி பார்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
Daisy Jones & the Six, The Power, Dead Ringers, The Peripheral போன்ற ஷோக்கள் சுமார் 100 கோடி செலவில் எடுக்கப்பட்டவை. அந்த ஷோக்களும் கூட ரசிகர்களை பெரியளவில் ஈர்க்கவில்லை. மறுமக்கம், மிகவும் எதிர்பார்பை கிளப்பிய, ‘Lord of the Rings’ தொடர் சுமார் 4000 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கும் ரசிகர்களிடையே பெரிய ஆர்வம் இல்லையாம். ஏற்கனவே பார்த்த ரசிகர்களையும் தக்க வைப்பது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறதாம்.
இதே மாதிரியே நிலைமைதான் மற்ற ஒடிடி நிறுவனங்களுக்கும் இருக்கிறதாம். இதனால் பட்ஜெட்டில் கை வைக்க ஆரம்பித்திருக்கின்றன ஒடிடி நிறுவனங்கள்.
திரைப்படங்களை ஓரங்கட்டுமளவிற்கு ஒடிடி வளர்ச்சியடைய காரணம் அவற்றில் இடம்பெற்றுள்ள ஒரிஜினல்கள் மற்றும் வெப் சிரீஸ்களின் பிரம்மாண்டமான படைப்பும், அதை நட்சத்திர பட்டாளமும்தான். இவையே இப்போது எடுப்படவில்லை என்றால் அடுத்து என்ன என யோசிக்கும் நிலைமைக்கு ஒடிடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் வெகுவிரைவிலேயே பல ஒடிடி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்ளும் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு தங்களுடைய நிறுவனங்களை விற்றிவிட்டு ஓட்டம் பிடிக்கும் என அத்துறையின் முக்கியப்புள்ளிகள் கூறுகிறார்கள்.
.