இந்தியாவில் எப்படி தக்காளியின் விலை அதிகரித்துகொண்டு செல்கிறதோ, அதேபோல் தென் கொரியாவில் உப்பின் விலை விண்ணை எட்டிவிட்டது. ஆனால் இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் தென் கொரியர்கள் உப்பை வாங்கிக் குவிக்கிறார்கள். அதை தங்கள் வீட்டில் இருப்பு வைத்துக்கொள்கிறார்கள். இதற்கு காரணம் ஜப்பான்.
தென் கொரியாவில் உப்பின் விலை உயர்வதற்கும், ஜப்பானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
சம்பந்தம் இருக்கிறது. அது ஃபுகுஷிமா அணு மின் நிலையம்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் அந்நாட்டைச் சேர்ந்த ஃபுகுஷிமா அணு உலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்த டாய்ச்சி (Daiichi) அணு உலைக்குள் கடல்நீர் பெருமளவில் புகுந்ததால், மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் சேதமடைந்தன.
இதன் காரணமாகக் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழக்க, அணு உலையில் வெப்பம் அதிகரித்தது. இதனால் அந்த அணு உலை வெடித்துச் சிதறும் நிலை வந்த்து. இந்த அழிவில் இருந்து ஃபுகுஷிமா அணு உலையைக் காக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வைத்து அதை குளிர்வித்தார்கள். ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை குளிர்விக்க அப்போது பயன்படுத்தப்பட்ட தன்ணீரில் கதிர்வீச்சு பாய்ந்ததால் அதை என்ன செய்வது என்று ஜப்பானுக்குத் தெரியவில்லை. அதனால் பல ஆண்டுகளாக ஃபுகுஷிமா அணு உலை வளாகத்திலேயே அதைத் தேக்கி வைத்திருந்த்து.
இந்த சம்பவம் நடந்து சுமார் 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போது ஃபுகுஷிமாவில் உள்ள கதிர்வீச்சு பாய்ந்த தண்ணீரை பசுபிக் பெருங்கடலில் விட முடிவு செய்திருக்கிறது ஜப்பான். அந்த தண்ணீரை பசுபிக் கடலில் கலந்தால், அதில் தயாரிக்கப்படும் உப்பால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்ற அச்சத்தால்தான் இப்போதே உப்பை வாங்கி சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள் தென் கொரிய நாட்டு மக்கள்.
தென் கொரியா மட்டுமல்ல, பசுபிக் கடலை ஒட்டியுள்ள பல நாடுகள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கள் கடல் வளம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ என்ற அச்ச்சத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி, சுமார் 10 லட்சம் கியூபிக் மீட்டர் பரப்பளவு கொண்ட (அதாவது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் நீச்சல் குளத்தில் அளவில் உள்ள 500 நீச்சல் குளங்களில் உள்ள நீரின் அளவு) தண்ணீரை பசுபிக் கடலில் விடுவதில் தீவிரமாக இருக்கிறது ஜப்பான். கதிர்வீச்சு பாய்ந்த தண்ணீரை தாங்கள் சுத்தீகரித்து உள்ளதால், அதை கடலில் விடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்து வருகிறது.
இதற்கு முன்னோட்டமாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோசி (International Atomic Energy Agency’s Director General Rafael Grossi) செவ்வாய்கிழமை ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா ஆணு மின் நிலையத்தை பார்வையிட உள்ளார். ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அணு மின் நிலைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அவர் அனுமதி தந்தால் அடுத்த சில நாட்களிலேயே கதிர்வீச்சு பாய்ந்த தாண்ணீர் பசுபிக் கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலக்கப்படும்.
சீனா உள்ளிட்ட பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பசுபிக் பெருங்கடல் ஒன்றும் ஜப்பானின் கழிவுநீர் கால்வாயல்ல என்று சீனா சீறியுள்ளது. நிலையில் தாங்கள் மட்டுமின்றி பல நாடுகள் அணுக் கழிவுகளை கடலில் கொட்டி வருவதாக ஜப்பான் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஜப்பான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் உள்ள டார்லிங்டன் அணு மின் நிலையம், தென் கொரியாவில் உள்ள கோரி அ நு மின் நிலையம், சீனாவில் உள்ள ஹோங்க்யான் அணுமின் நிலையம், பிரான்ஸ் நாட்டில் உள்ள டிரிகாஸ்டின் அணு மின் நிலையம் போன்றவை ஆண்டுதோறும் அதிக அளவில் கதிர்வீச்சு கலந்த நீரையும், குப்பைகளையும் கடலில் கலந்து வருகிறது. அதனுடன் ஒப்பிடும்போது ஜப்பான் வெளியிட்த் தீர்மானித்துள்ள கதிவீச்சு தண்ணீரின் அளவு மிகவும் குறைந்த்துதான்” என்று குறிப்பிட்டுள்ளது.