ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அவருக்கு பை பாஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவமனை அறிக்கை கொடுத்திருக்கிறது.
நேற்றிரவிலிருந்து செந்தில் பாலாஜிதான் தலைப்புச் செய்தி. நேற்றிரவு மட்டுமல்ல, சமீபம காலமாகவே அவர்தான் தலைப்புச் செய்தியாக இருக்கிறார்.
வருமானவரித் துறை சோதனைகள், அதிகாரிகள் மீது தாக்குதல், கள்ளச்சாரய சாவுகள், டாஸ்மாக் பத்து ரூபாய், மின் வெட்டு என்று தொடர்ந்து அவர்தான் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி.
யார் இந்த செந்தில் பாலாஜி? அதிமுக ஆட்சியிலும் சக்தி மிக்கவராக இருந்தார். இப்போது சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். எப்படி?
அவர் வளர்ச்சியைப் பார்ப்போம்.
கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி, செந்தில்பாலாஜியின் சொந்த ஊர். பி.காம் படித்துக் கொண்டிருக்கும்போதே அரசியல் ஆசை வந்துவிட்டது. திமுகவில் இணைந்தார். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கவுன்சிலரானார்.
நான்கு வருடங்கள்தாம் திமுகவில். 2000ஆம் ஆண்டு அதிமுகவில் இணைகிறார். செந்தில் குமார் என்ற பெயரை நியுமராலாஜிக்காக செந்தில் பாலாஜி என்று மாற்றிக் கொள்கிறார். அவருடைய வாழ்க்கை வேகமெடுக்கிறது.
அதிமுக மாணவர் அணி பொறுப்புகளில் இருந்தவருக்கு 2006ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிறார். வெற்றிகள் தொடர்கிறது. 2011 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுகிறார். இந்த முறை அமைச்சர் பதவியும் கிடைக்கிறது. அதுவும் முக்கியமான போக்குவரத்து துறைக்கு அமைச்சராகிறார்.
இந்தப் போக்குவரத்து துறைதான் இப்போதும் அவரை துரத்திக் கொண்டிருக்கிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜியும் அவரைச் சார்ந்தவர்களும் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது பின்னர் வழக்காகவும் மாறியது. இப்போது அது அவருக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இன்றும் நீதிமன்றத்துக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்.
2015 ஜூலை 27 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் செந்தில் பாலாஜியை நீக்கினார் ஜெயலலிதா. அதிமுகவில் நடந்த உள்கட்சி தேர்தலில், தனக்கு வேண்டியவர்களை நியமிக்க செந்தில்பாலாஜி முயற்சித்ததாக அவர் மீது அப்போது புகார் கூறப்பட்டது.
அமைச்சர் பதவியிலிருந்தும் மாவட்டப் பொறுப்பிலிருந்து நீக்கினாலும் 2016 தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிமுக சார்பாக போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. செந்தில்பாலாஜி வெற்றிப் பெற்றார். அந்த வருடம் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தார்.
அதிமுகவில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. தினகரன் அணிக்கு மாறினார் செந்தில் பாலாஜி. அங்கிருந்து 2018ல் திமுகவுக்கு வந்தார். 2019 இடைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார். அதனைத் தொடர்ந்து 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். அவருக்கு திமுக அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இந்தத் துறைகள் வழங்கப்பட்டது பல மூத்த திமுகவினருக்கு பொறாமையைக் கொடுத்தது.
செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அவற்றை சாதுர்யமாக சரி செய்து வளர்ந்திருக்கிறார்.
செந்தில் பாலாஜியின் எதிர்ப்பாளர்கள் பல முனைகளில் இருக்கிறார்கள்.
எதிர்க் கட்சிகளான அதிமுக , பாஜகவில் மட்டுமல்ல இப்போது அவர் இருக்கும் திமுகவிலும் இருக்கிறார்கள்.
தலைமைக்கு நெருக்கமானவராக செந்தில் பாலாஜி பார்க்கப்படுகிறார். திமுக தலைமை அவருடன் நெருக்கமாக இருப்பதற்கு காரணங்கள் இருக்கிறது.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக மிகவும் பலவீனமாக தொகுதிகளை இழந்தது கொங்கு மண்டலத்தில். அந்தப் பகுதியில் அதிமுக அதிக அளவில் தொகுதிகளை வென்றது. இப்போது அந்த நிலை மாறத் தொடங்கியிருக்கிறது. காரணம் செந்தில் பாலாஜி.
கடந்த உள்ளாட்சி தேர்தல் கொங்கு மண்டலத்தின் பொறுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு வழங்கினார். அதன் பலன் தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. கொங்கு மண்டலத்தை அப்படியே திமுகவின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் செந்தில் பாலாஜி. கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி குடியிருக்கும் வார்டை கூட தி.மு.க விட்டு வைக்க வில்லை. அங்கேயும் திமுகதான் வென்றது.
இந்த வெற்றிகளுக்கு காரணம் செந்தில் பாலாஜியின் களப்பணி. அ.தி.மு.க கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை தி.மு.க கோட்டையாக மாற்றினார். இதனால் முதல்வரிடம் நன்மதிப்பு பெற்றார். சொன்ன காரியத்தை முடிப்பார் என்ற நம்பிக்கை திமுக தலைமைக்கு வந்தது.
அதே போல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸை அமோக வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி.
இந்தத் தேர்தலின்போது எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உற்சாகமாக களம் இறங்கி பணியாற்றியும் அதிமுக படு தோல்வி அடைந்தது. இதற்கு காரணமும் செந்தில் பாலாஜிதான். இந்த வெற்றி திமுகவில் அசைக்க முடியாத இடத்தை செந்தில் பாலாஜிக்கு பெற்றுக் கொடுத்தது.
வெற்றிகள் மட்டுமல்ல, திமுகவின் பண மூட்டைகளில் ஒருவராக செந்தில் பாலாஜி பார்க்கப்படுகிறார். தேர்தல் செலவுகள் முதல் கட்சியின் அனைத்து செலவுகளும் அவர் மூலம்தான் நடக்கின்றன என்று திமுக வட்டாரங்கள் சொல்லுங்கின்றன. இதனாலேயே கட்சிக்குள் அவருக்கு எதிரிகள் அதிகம். ஆனால் அவற்றையும் சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
சமாளிப்பது, சாதுர்யமாய் காய்கள் நகர்த்துவது, சாமர்த்தியமாய் செயல்படுவது எல்லாம் செந்தில் பாலாஜிக்கு பிறவி குணங்கள்.
அதிமுக ஆட்சியின் போது செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் இன்று செந்தில் பாலாஜியை கைவிட முடியாத சூழலில் நிற்கிறார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து ஆதரவு அறிக்கை வெளியிடுகிறார்.
இதுதான் செந்தில் பாலாஜியின் சாதூர்யத்துக்கும் சாமர்த்தியத்துக்கும் சிறந்த உதாரணம்.
இந்த சாமர்த்தியம், சாதுர்யம், சமாளிப்புகள் எல்லாம் அவருக்கு இன்றைய பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவுமா என்று கேட்டால்…
நிச்சயம் வெளிவருவார், இதை விட பிரமாண்ட வளர்ச்சி பெறுவார் என்று சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.