அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நள்ளிரவு கைது
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்ததையடுத்து உடனே அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அலுவலகத்திற்கு சீல்
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர். அலுவலக வாயிலில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் இந்த அலுவலகத்துக்குள்ளே பிரவேசிக்க கூடாது. அப்படி மீறி உள்ளே நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ராணுவப் படை குவிப்பு
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவமனையைச் சுற்றி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து அவரது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ‘கரூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாவட்டம் முழுவதும் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்று கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கண்டனம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை இதுவரை 16 அமைச்சர்கள் மருத்துவமனையில் நேரில் சந்தித்துள்ளனர்.செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் சந்தித்த பிறகு, ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சோதனை என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி, “மிசாவையே பார்த்துள்ளோம். இந்த வழக்கெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லை” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் நாளை மறுநாள் 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை
இந்நிலையில், ஒமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதில் அவருக்கு இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு (வயது 47) ரத்தநாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என்றும் ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அல்லது ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக இன்று காலை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்திருப்பதாக தி.மு.க தரப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத காவலில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பிலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, நடைமுறைகள் முடிந்த பிறகு விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் எம்.சுந்தர், சக்தி வேல் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மதியம் 2.15 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.