நோயல் நடேசன்
பிரான்சிலுள்ள பரிசுத்த லூர்து (St. Lourdes) மாதா எங்கள் வீட்டிற்கு வந்து பல காலமாகிவிட்டது. சரியாக ஐந்து வருடங்கள் முன்பு மனைவி சியாமளாவின் புற்று நோய் பற்றி அறிந்ததும், அறுவை சிகிச்சைக்கு சியாமளாவோடு நானும் வைத்தியசாலைக்குப் போனேன். பல வருடங்கள் முன்பாக நாங்கள் லூர்து நகர் போய் வந்தபோது அங்கிருந்து கொண்டு வந்த புனித நீர் (Holy water) நிறைந்த மாதா சொரூபம் வைத்தியசாலையின் கட்டிலருகே உள்ள சிறிய மேசையில் எனக்குத் தெரியாமலே வந்து அமர்ந்துகொண்டது. மீண்டும் வீட்டுக்கு வந்தபோது படுக்கையறையிலுள்ள மேசையில்… ஐந்து வருடத்தில் நான்கு வீடுகள் மாறிய போதும், தொலையாது எம்மை நிழலாகத் தொடர்நதது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்த மாதாகோவிலிருந்து வந்த புனித நீரைத் தொட்டு கண்ணில் வைப்பது சியாமளாவின் வழக்கம்.
இரு நூற்றாண்டுகள் முன்பு மருத்துவம், விஞ்ஞானம் என்பன பெரிதாக கிடையாது. அதிலும் தென் ஆசியப் பிரதேசத்தில் மனிதர்களை நம்பிக்கைகள் மட்டுமே ஊன்றுகோலாகக் காலம் காலமாக வழிநடத்தியது. பராம்பரியமான மதங்களோடு வெளியிருந்து வந்த மதங்களும் நமது மக்களது மனங்களில் ஆழமாகப் பதிந்தன. அதன்பின்னர், இந்த நூற்றாண்டில் 95 வீதமான மக்கள் விஞ்ஞானம் தோற்றுவித்த மருத்துவத்தை தங்களது அன்றாட தேவைக்குப் பாவித்தாலும், அடிப்படையான பரிணாமம் – பகுத்தறிவு என்பன அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. அது அவர்கள் தவறல்ல, மானிட வரலாறு எப்பொழுதும் ஏற்கனவே போடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதில்லை!
சரி, பிரான்ஸின் லூர்து மாதா ஆஸ்திரேலியாவின் எங்கள் வீட்டுக்கு வந்த கதைக்கு வருவோம்.
பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் ஸ்பெயின் நாட்டின் எல்லையோரத்தில் லூர்து என்ற சிறிய நகரம் மலைசாரந்த பகுதியில் உள்ளது. அங்கு ஒரு புகழ்பெற்ற மாதா கோயில் உள்ளது. இந்த இடம் தற்பொழுது வத்திக்கானுக்கு அடுத்தபடியாக கத்தோலிக்க மக்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது.
நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு லூர்து நகருக்கு போனோம். அதன் காரணம் எனது நண்பர் ரவிந்திரராஜ; இவர் பலமுறை அங்கு போயிருந்தார்… அதன் மகிமை பற்றி எமக்கு சொல்லியிருந்தார்.
பாரிசில் விமானத்திலிருந்து மதியத்தில் இறங்கினாலும் எமது பிரயாணப் பொதிகள் வரத் தாமதமாகிவிட்டது. லூர்து நகருக்கு செல்லும் மாலை இரயிலை பிடிக்க வெளி மாகாணத்திற்குச் செல்லும் இரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும். ஆறு கிழமை பயணத்திற்கான பொருட்களை அடங்கிய பெட்டிகளைத் தூக்கி இரயில் மாறுவது வேறு கடினமாக இருந்தது. அப்போதுதான் பயணத்தை இரயிலில் ஒழுங்கு செய்யாது விமானத்தில் போயிருக்கலாமே என எண்ணி வருந்தினோம். ஆனால், என்ன செய்வது; விட்ட தவற்றை நினைத்து நோகத்தான் முடியும்! மேலும், பிரயாணங்களில் இப்படியான பல சிக்கல்களை எதிர்கொள்வதும் பயண அனுபவத்தின் ஒரு அங்கமே!
பாரிஸ் இரயில் நிலையத்தில் பயணிகள் பலர், நாங்கள் கேட்காது, எங்கள் பொதிகளைத் தூக்க உதவினர். அப்போது எனது நண்பன் சொன்ன, ‘வாழ்வில் உனது பெட்டியை நீயே தூக்கும் வரையிலும்தான் நீ பிரயாணம் செய்யமுடியும்’ என்பது நினைவில் வந்தது.
நாங்கள் லூர்து நகருக்கு போய் பார்த்தபோது அதிகம் பக்தர்கள் இருக்கவில்லை. ஆனால், என்னை அதிசயிக்க வைத்த விடயம்: ஏராளமானவர்கள் சக்கர நாற்காலிகளோடு வந்திருந்தார்கள். விசாரித்தபோது யாரோ ஒருவர் அந்த கோயிலில் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடந்ததாக வரலாறு உண்டு என்றார்கள்.
முதியவர்கள் மட்டுமல்ல இளம் வயதினர் பலர் இருந்தனர். வந்தவர்கள் எல்லோரும் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வந்திருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. பிரார்த்தனை கூட்டத்தில் முன்பாக ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்தார்கள். இவ்வளவு சக்கர நாற்காலிகளை ஒன்றாக ஒரு இடத்தில் அதுவரை நான் பார்த்ததில்லை.
பாரிசில் இருந்து இரயிலில் தென் நோக்கிப் போவது கண்ணுக்கு விருந்தான அனுபவம். அதிலும் நாங்கள் சென்றது வசந்தகாலத்து மாலை நேரம். எங்களுடன் பேச்சுத் துணையாக எத்தியோப்பியாவில் வசிக்கும் தமிழ் பேசும் மலையாளத்தவரும் சேர்ந்துகொண்டார். எத்தியோப்பியாவில் வியாபாரம் செய்பவர். எங்களுக்கு பெட்டி தூக்கி உதவி, பின்பு எங்களுடன் உணவுண்ணும் அளவு நெருக்கமாகினார். எங்களை அடுத்தமுறை எத்தியோப்பியாவுக்கு வரும்படியும், தனது வீட்டில் நிற்கமுடியும் எனவும் அழைப்பு விடுத்தார். இம்முறை தனது மகனது பரீட்சை சித்தியடைதலுக்கான வேண்டுதலுக்காக வந்ததாகவும் அடுத்தமுறை திருவனந்தபுரத்திலிருந்து தனது தாயை அழைத்து வரவிருப்பதாகவும் கூறினர்.
நாங்கள் தூய லூர்து அன்னையின் ஆலயத்தை சென்றடைய இரவாகிவிட்டது. ஆனாலும் அங்கு டாக்சி தயாராக இருந்தது. எத்தியோப்பிய நண்பரை ஹோட்டலில் விட்டுவிட்டு எங்களது ஹோட்டலுக்கு சென்றோம்.
கடந்த முறை அனுபவத்தில், இம்முறை இந்த லூர்து அன்னை தல யாத்திரையை மையமாகக்கொண்டே மிகுதி பிரயாணத்தை ஒழுங்கு செய்திருந்தோம். அத்துடன் நண்பன் ரவீந்திராஜ் மனைவியுடன் வந்திருந்தார். பயணத்துக்குத் துணையாக வரும்போது பயணத்தில் வாய்பாட்டுக்கு வாத்தியமாகச் சுவை அதிகம்.
காலையில் எழுந்து ஆலயத்திக்குச் சென்றபோது, அந்த ஊர் என்னை மிக கவர்ந்தது. அழகான பச்சை கம்பளம் விரித்த நிலத்தில் இடைக்கிடையே திட்டுத் திட்டாகப் பனி படர்ந்த மலைப்பிரதேசம். பாடிக்கொண்டே பாவாடையை ஒதுக்கியபடி ஓடும் பருவப் பெண்ணாகச் சலசலத்தபடி கரைகளிடையே ஒதுங்கி ஓடும் ஆறு. பனித் திட்டுகளைத் தடவி, ஆற்றில் நீராடி, மலைகளுடன் அந்தரங்கமாக கீதம் இசைத்து தென்றல் வீசும் வசந்த காலம். மத்திய கால ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் அங்கமைந்த ஆலய அழகிக்கு வைத்த பொட்டாக அந்தப் பிரதேசத்தில் ஒளிர்ந்தது.
நாங்கள் தங்கிய ஹோட்டல் ஆலயத்திலிருந்து அதிக தூரமில்லை. ஆலயத்தின் பின் பகுதியில் ஒரு குகையுள்ளது. அதில் தண்ணீர் கசியும். எல்லோரும் அந்தக் குகையின் பாறைகளில் கசியும் குளிர் நீரை முகத்தில் ஆசீர்வாதமாக தொட்டு வைப்பார்கள். இந்த குகையில்தான் மேரி மாதா ஒரு சிறுமிக்குக் காட்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது!
நண்பன் ரவிந்திராஜ், அவர் மனைவி, சியாமளா மூவரும் குகை உள்ளே செல்ல சில மணிநேரம் வரிசையில் நின்றபோது, நான் எதிரில் சலசலத்தபடி ஓடும் ஆற்றின் கரைக்குக் கட்டியிருந்த சுவரில் இருந்தபடி எனது மனக்குதிரையைத் தட்டி விட்டேன்.
19ஆம் நூற்றாண்டில் (1858) லூர்து நகரில் வாழ்ந்த பதினாலு வயதான பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமியின் முன்பாக, மேரி மாதா ஒரு நாளல்ல பல நாட்களாகத் தரிசனமாகி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். இச்செய்தி சிறுமியின் மூலம் ஊரில் பரவி, மதகுருமார்களுக்கும் இறுதியில் ரோமிலுள்ள கத்தோலிக்க திருச்சபைக்கும் பரவியது. இப்படிப் பல இடங்களில் மேரி தோன்றுவதாகப் கதைகள் வந்தபோதிலும் இந்த இடத்தை கத்தோலிக்க திருச்சபை தீவிரமாக விசாரித்து, அது உண்மையாக இருக்கலாம் என்ற முடிவு செய்ததால், ஒன்றல்ல மூன்று ஆலயங்கள் குன்றைக் குடைந்து கட்டப்பட்டது. மட்டுமல்ல, பின்னாளில் 35 வயதில் இறந்த பெர்னதெத்தை பரிசுத்தமானவளாக (Sainthood) 1933இல் கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியது.
பெர்னதெத் (Bernadette) என்ற சிறுமியின் முன்பாக மேரி மாதா தரிசனமாகிய கதையை மதம் சாராதவர்கள் நம்ப மறுத்து, மனப்பிராந்தி அல்லது அருட்டுணர்வான விடயம் எனலாம். அருட்டுணர்வே மதத்தின் அத்திவாரம் என்பதால் இதைப் பற்றிய ஆராய்வு நமக்குத் தேவையில்லை!
லூர்து நகர் தற்பொழுது பிரான்சின் முக்கிய சுற்றுலாப் பொருளாதார மையமாகவும் உள்ளது. 14 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நகரம்தான்; ஆனால், பாரிசுக்கு அடுத்ததாக அதிக ஹோட்டல்கள் கொண்ட நகரமாக உள்ளது. வருடத்திற்கு ஆறு மில்லியன் மக்கள் புனித யாத்திரையாக இங்கு வருகிறார்கள். இலங்கையர்களது பல உணவகங்களைகூட இங்கு பார்த்தேன்: அதில் ஒன்றில் உணவருந்தினோம்.
பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பல பகுதியிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் கூட்டமாக கிறிஸ்துவ மத சுலோகங்களை எழுப்பியபடி வந்தார்கள். கத்தோலிக்க மதம், இளம் மனங்களில் ஆதர்சமான மதமாக இருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடான போதிலும் அடிப்படையில் கத்தோலிக்க நாடு. மேலும் கத்தோலிக்க மதத்தில் உள்ள உலகத்தின் பல இனத்தவர்கள் இங்கு வந்துபோவதைக் காணமுடிந்தது. பாரிசில் வாழும் பல இலங்கையர்களையும் சந்திக்க முடிந்தது.
கத்தோலிக்க மதத்தில் எனக்குப் பிடித்த விடயங்கள் சில உள்ளது. ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள், சங்கீத மேதைகளை வளர்த்து விட்ட தொட்டிலாகும் அது. கத்தோலிக்க மதமில்லாதபோது நமக்கு லியனர்டோ டாவின்சி கிடைத்திருப்பாரா?
இந்தியாவில் இந்து மதத்தை வெளியே எடுத்தால் கலாச்சாரத்தில் என்னதான் மிஞ்சும்? இந்தியாவில், இந்து மதத்தின் கீழ் வளர்ந்த கலை கலாச்சாரம்போல் தற்போது நாம் பார்க்கும் ஐரோப்பாவின் தோற்றம், மத்திய காலத்திலிருந்த கத்தோலிக்க மதத்தின் சாயலே. கத்தோலிக்க மதத்தின் வடிவங்களே நாம் பார்க்கும் மேற்கு ஐரோப்பா. அதேபோல் ஓதோடொக்ஸ் கிறிஸ்துவ மதத்தின் தேவாலயங்கள், மோசாய் வடிவங்கள் எல்லாம் சேர்ந்து உருவாகிய கலவையே கிழக்கு ஐரோப்பா. மட்டுமல்ல மாயா யதார்த்தம் என்ற இலக்கிய வடிவ உருவாக்கம் கத்தோலிக்க மதத்தில் உள்ள அருட்டுணர்வுகளை வைத்தே தென்னமெரிக்காவிலிருந்து தோன்ற முடிந்தது. கனவுகள், கற்பனைகள், தோற்ற மயக்கங்கள் என்பன கலைக்கு அவசியம். அவை இல்லாதபோது மதங்களில் வெறுமையாக இருக்கும்.
தற்போது லூர்து நகரில் கட்டப்பட்டுள்ள மூன்று ஆலயங்களும் மலைக் குன்றின்மேல் ஒன்றாக இயற்கையோடு இணைந்து கட்டப்பட்டுள்ளன. அருகிலுள்ள ஒரு மலையில் தொடர்ச்சியாக யேசு நாதரைச் சிலுவையில் அறைவதற்குப் போர் வீரர்கள் அழைத்துச் செல்வதும், இயேசுநாதர் சிலுவையோடு மூன்று தடவைகள் விழுவதும், மாதா மேரியை சந்திப்பதும், வெரோனிக்காவிடம் முகம் துடைக்கக் கைக்குட்டையை வாங்குவதும், சிலுவையில் அறையப்படுவதும், மரித்த பின் குகையினுள் வைத்து மூடுவதும், இறுதியில் அவர் உயிர்த்தெழுவதெனப் பல காட்சிகள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன அந்த மலையைச் சுற்றி வர மூன்று கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், வயதானவர்கள், ஊனமாகி நடக்க முடியாதவர்கள் எனப் பலர் அந்த மலையை சுற்றி வந்தார்கள் என்பது எமக்கு வியப்பைக் கொடுத்தது!
நாங்கள் அங்கு தங்கியிருந்த இரண்டாவது நாளின் மாலையில், அதிகமான பக்தர்கள் அற்ற சூழ் நிலையில், நானும் சியாமளாவுடன் அந்த மலைக்குகைக்குள் சென்று வந்தேன். மூன்று இரவுகள் லூர்து நகரில் தங்கியிருந்து மீண்டும் பாரிஸ் வந்தோம்.
சிறுவயதில் எனக்கு நோய் வந்தபோது, மடுமாதாவுக்கு மெழுகுதிரி கொளுத்துவதாக நேர்த்திக்கடன் வைத்திருந்ததுடன் என்னையும் என் தாயார் அங்கு அழைத்துச் சென்று பெரிய மெழுகுதிரியைக் கொளுத்தியதை அசை போடவைத்தது.