நேற்று மிகப் பெரிய விழா டெல்லியில் நடந்தது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா. ஆதீனங்கள் சூழ, நாதஸ்வரம் ஒலிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிதத்தை பிரதமர் திறந்து வைத்தார். குடியரசுத் தலைவரை அழைக்காதது, எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பு,செங்கோல் சர்ச்சை போன்ற கடுமையன விமர்சனங்கல் இருந்தாலும் இந்த நிகழ்வு இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு முக்கியமான விழா. இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளின் கவனத்தையும் இந்த நிகழ்வு கவர்ந்தது.
அதே தலைநகர் டெல்லியில் அதே நேரத்தில் மற்றொரு சம்பவமும் நடந்தது. அதுவும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. வருத்தப்பட வைத்தது. ஜனநாயகத்தை சந்தேகப்பட வைத்தது.
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பல விருதுகளையும் மரியாதைகளையும் பெற்றுத் தந்த நமது மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறையினர் கடுமையான முறையில் கையாண்டனர். நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்தக் காட்சிகளும் நேற்று சர்வதேச அளவில் பரவியது. பல முனைகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்று கடுமையாக கருத்து தெரிவிதார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜனநாயக நிகழ்வு ஒன்று நடந்துக் கொண்டிருக்கும்போது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவது போல் நடந்துக் கொள்வது சரியா என்பதுதான் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவானவர்களின் கருத்து.
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் என்றோ அல்லது தங்களுக்கு அரசு மரியாதைகள் வேண்டும் என்றோ போராடவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைக்கு தீர்வு வேண்டும், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே கோரிக்கை.
நியாயமான கோரிக்கையாகதானே இருக்கிறது. அதை நிறைவேற்றி, குற்றத்தை செய்தவரை தண்டிப்பதில் என்ன பிரச்சினை என்பது எல்லோருக்கும் எழும் எளிய கேள்வி.
ஆனால் இங்கே குற்றஞ்சாட்டப்பட்டவர், வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்திரவு தந்தவர் பெயர் பிரிஜ் பூஷண் சரண்சிங். சமூகத்தில் பெரிய மனிதர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர். மிக முக்கியமாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.
இவர் மீது ஜனவரி 18 ஆம் தேதி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மல்லிக், வினேஷ் போகட் ஆகியோர் பாலியல் புகார் அளித்தார்கள். இவர்கள் தவிர வேறு சில வீராங்கனைகளும் பிரிஜ்பூஷன் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். சாக்ஷி மல்லிக்கும் வினேஷ் போகட்டும் நமது நாட்டுக்காக ஒலிம்பிக்கில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள். ஆனால் இந்தியாவுக்காக விளையாடி சாதனைப் படைத்தவர்களின் குற்றச்சாட்டு எடுபடவில்லை. ப்ரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசுக்கு அழுத்தம் வரத் துவங்கியதும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழுவும் தாமதமாக அறிக்கை தந்தது. அந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரிஜ்பூஷன் மீது வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஏப்ரல் மாதம் டெல்லியில் ஜன்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் தீவிரமடைந்தது. வீராங்கனைகளுக்கு ஆதரவு கூடியது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பிரிஜ்பூஷன் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும், விசாரணைக் கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்கப்பட்டது. வழக்கு விசாரணை தீவிரமடைந்ததும் பிரிஜ்பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்யவே இத்தனை போராட்டம். காரணம் அவர் பெரிய மனிதர். பாஜக எம்.பி.
பிரிஜ்பூஷனை கைது செய்ய வேண்டும் என்பது மல்யுத்த வீராங்கனைகளின் மற்றொரு கோரிக்கை. 2012லிருந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தரும் இவரை கைது செய்யாமல் வேடிக்கைப் பார்ப்பதா என்று கடுமையான கேள்விகளை எழுப்பி டெல்லியில் போராட்டத்தை தொடர்ந்தார்கள். ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
அந்தப் போராட்டத்தின் உச்சம்தான் நேற்று மல்யுத்த வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம்.
1250 கோடி ரூபாய்க்கு பிரமாண்டமாய் நாடாளுமன்றம் கட்டுகிறோம். சர்வ மத பிரார்த்தனைகள், ஆதீனங்கள், செங்கோல் என மிக சிறந்த திரைக் கதையுடன் திறந்து வைக்கிறோம். நீதி நேர்மையின் சின்னம் செங்கோல் என்று அடையாளப்படுத்துகிறோம். தரையில் விழுந்து வணங்கி ஜனநாயகத்தை போற்றுகிறோம்.
ஆனால், புதிய நாடாளுமன்றத்திலிருந்து இரண்டே கிலோமீட்டர் தள்ளி தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு கேட்கும் பெண்களின் குரல்களை கேட்க மறுக்கிறோம்.