மும்பையிலிருந்து திரும்பிய பத்திரிகையாளரான நண்பர் அங்கே ‘தி கேரளா ஸ்டோரி’ படம் பார்த்ததைப் பற்றி கூறினார்.
“அரங்கம் நிறைந்த காட்சி அல்ல. ஒரு படமாக பார்த்துவிட்டு போனார்கள். சிலருக்கு திகில் படம் பார்க்கிற உணர்வு. தீவிரவாத கூட்டத்துக்கு இவர்கள் சொல்லும் வழியில் ஆள் திரட்டுவது என்றால்… ஆள் திரட்ட யுகம் ஆகலாம்! அதற்குள் தீவிரவாதமே குளோஸாகிவிடும்” என்று விமர்சனமாக பேசினார். அது அவர் கருத்தாக இருக்கலாம்! “ஆனால் இதை வைத்து கர்நாடகா தேர்தலில் ஜெயிக்க முயற்சி செய்யப்பட்டது பரிதாபம்!” என்று முடித்தார்.
“பொதுவாக சினிமா சமூக சீர்திருத்தங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கிறது. சந்தேகமில்லை. ஏனென்றால் கண்ணுக்கு எதிரே நடக்கும் சமூக கொடுமைகளுக்கு சாட்சியாக அம்மாதிரியான படங்களைப் பார்க்கிறார்கள். அரசியலுக்கு சினிமா நேரடியாக கைகொடுப்பதில்லை. வசூலை கொடுத்தாலும்” என்றார் அவர்.
1971 தேர்தல் சமயத்தில்தான் ‘துக்ளக்’ சினிமாவாக வந்தது. திமுகவுக்கு எதிரான மறைமுக பிரச்சாரம் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அது ஒன்றும் உதவவில்லை. மாறாக திமுக மாபெரும் வெற்றி பெற்றது. கர்நாடகா தேர்தலிலும் அப்படித்தானே நடந்தது. ‘துக்ளக்’ நாடகமாக மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டபோது, திமுக ஆட்சியில் அதைத் தடை செய்ய சிலர் விரும்பினார்கள். அறிஞர் அண்ணா நாடகத்தை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போயிருந்தார்.
சினிமா எடுப்பவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆதாரமற்றதாக எதையும் சொல்லிவிடக் கூடாது. ‘தி கேரளா ஸ்டோரி’யை ஒரு படமாக பார்த்துவிட்டு அமைதியாக சென்றவர்களே பெரும்பாலோர், மும்பையில் விபரீத விவாதங்களில் யாரும் ஈடபடவில்லை என்றார் நண்பர். இருக்கலாம்!
சென்சார் போர்ட் தங்கள் கடமையில் சிறப்பாக செயல்பட்டு ஓகே சொன்னால் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ‘நடப்பது ஜனநாயகம்’ என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டுகிறதே!
சமூக சீர்திருத்த கருத்துகளுக்கே பொறுமை காட்டப்படாமல் எதிர்ப்பு காட்டும் பழமைவாத தீவிரவாதிகள் இப்போது எகிறி எகிறி குதிக்கிறார்களே! அவர்களுக்கு விளம்பரமும் அதிகம் கிடைக்கிறதே!
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ‘பராசக்தி’ படம் வந்து பெரும் வசனப் புரட்சியை ஏற்படுத்தியது. கலைஞரின் ‘பேனா’ (நினைவு சின்னம் வைத்தால் தான் என்ன!) கூர்மையாக மூடநம்பிக்கைகளை சாடியது. அப்போது அவருக்கு வயது 28 தான்.
அதற்கு முன்பு வேலைக்காரி படம் அறிஞர் அண்ணா வசனத்துடன். அதற்கும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக அம்பாளை பார்த்து படும் துன்பங்களை கூறி கண் இல்லையா காது கேட்கவில்லையா என்று வரும் பாட்டுக்கு எதிர்ப்பு. ஆனால் அந்த எதிர்ப்புகள் எடுபடவில்லை.
‘பராசக்தி’ படம் தீபாவளி வெளியீடு! தைரியம்தான்! அப்போது மத்திய சென்சார் போர்டில் சாஸ்திரியார் என்று அழைக்கப்பட்டவர் இருந்தார். சாஸ்திரி கத்தரி நிறைய போடுவார் என்று பயந்தார்கள். அப்படி நடக்கவில்லை. ‘அம்பாள் எப்போதுடா பேசியிருக்கிறார்’ என்று வசனம் வரும். அதில் கல் என்ற சொல் சைலண்டாக்கப்பட்டது. வேறு வெட்டு இல்லை.
ஆனால் தீவிர பழமைவாதிகள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்று குதித்தார்கள். அப்போது ராஜாஜி முதலமைச்சர். அவர் ஒருவிதமான காந்திய சீர்திருத்தவாதி அல்லவா? பேசாமல் இருந்தார். கூச்சல் சற்று அதிகமாகவே அறிஞர்கள் குழு அமைத்து படத்தை பார்க்க சொல்லலாம் என்று முடிவானது.
மறு சென்சாருக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் பழமைவாதிகள். ராஜாஜி கண்டுகொள்ளவில்லை. குழுவும் அமைக்கவில்லை. தினமணி கதிர் வார இதழில் 10 பக்கத்துக்கு படத்தை தாக்கி பரப்பிரம்மம் என்ற பெயரில் கட்டுரை வெளியானது. கலைஞர் பிறகு பரப்பிரம்மம் என்ற நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார்.
இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி படத்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டது. அதன் வசனங்கள் தி.மு.க., தி.க. அரசியல் கூட்டங்களில் ஒலித்தன. 175 நாட்கள் ஓடிய வெற்றிப் படமாக மாறியது. மிகப்பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் இதே நாட்கள் ஓடியது. ‘பராசக்தி’ என்று அந்த படத்துக்கு பெயரை வைத்தது கலைஞரின் சாமர்த்தியமாக பேசப்பட்டது.
எதிர்ப்புகள் இருக்க வேண்டியதே! ஆனால் ஒருதலைபட்சமாக விமர்சனமோ, படத்துக்கு உள்அர்த்தம், வேறு அர்த்தம் கற்பித்து வெற்றியாக்க பார்ப்பதோ மக்கள் ரசிப்பதில்லை. ஒட்டுமொத்தமான மக்களின் சிந்தனை நியாயமாகவும், சரியாகவும் இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா!
பராசக்தியின் வசனங்களில் மூடநம்பிக்கையை எதிர்த்து சொல்லப்பட்ட கருத்துகளை மக்கள் வரவேற்றதும், சமூகத்தில் தாக்கம் ஏற்பட்டதும் உண்மையே. அதற்காக தெய்வ நம்பிக்கை போய்விட்டதா என்ன!
எதையும் மிகக்கடுமையாக விவாதிப்பதில் தவறே கிடையாது. முரட்டுத்தனமான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. விவாதங்களுக்கு புகழ் பெற்ற நாடு இந்தியா! நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ’Argumentative Indian’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘விஷ்ணு’ என்ற கடவுளை ஏற்க மறுத்து விவாதம் நடந்திருக்கிறது ரிஷிகளுக்கு இடையே. இந்திரன் – வருணன் – அக்னி வழிபட்ட காலம் அது. அமர்த்தியா சென் இன்று தொல்லைக்கு ஆளாகியிருக்கிறாரே!
ஒரு துணுக்கு!
பராசக்தி சமயத்தில் ஒரு பக்கம் ‘ஔவையார்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. வாசன் அல்லவா! பெரும் விளம்பரம்! முதல்வர் ராஜாஜிக்கு ஸ்பெஷல் ஷோ. ராஜாஜி பாராட்டினார் என்றார்கள். ஆனால் இஷ்டம் இல்லாமல் படத்தை பார்த்ததாக ராஜாஜி தன் டைரியில் எழுதி வைத்திருந்தார்! ராஜாஜி பற்றிய ராஜ்மோகன் காந்தி புத்தகத்தில் இந்த செய்தி!