சாகுந்தலம் (Shaakuntalam -தெலுங்கு) – அமேசான் ப்ரைம்
துஷ்யந்தன் சகுந்தலை ஜோடியின் புராணக் கதையை கொஞ்சம் தூசு தட்டி இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் சொல்லியிருக்கும் படம்தான் சாகுந்தலம்.
விஸ்வாமித்ரருக்கும், மேனகைக்கும் பிறந்த மகளான சகுந்தலை கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். ஒருநாள் வேட்டைக்கு வரும் துஷ்யந்தன், ஆசிரமத்துக்குள் நுழைகிறான். அங்கு சகுந்தலையைக் கண்டு காதல் கொள்கிறான். இருவரும் இணைய சகுந்தலை கர்ப்பமாகிறாள். இந்த நேரத்தில் அரண்மனைக்குச் செல்லும் துஷ்யந்தன் திரும்ப வராமல் இருக்கிறான். அவனைத் தேடி சகுந்தலை அரண்மனைக்குச் செல்ல, அவள் யாரென்றே தெரியாது என்று ஏற்க மறுக்கிறான். அவர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
துஷ்யந்தனாக தேவ் மோகனும், சகுந்தலாவாக சமந்தாவும் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். நம் புராண கதைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வதற்கான முயற்சியாக இப்படத்தை எடுத்த நிலையில் பாக்ஸ் ஆபீசில் சரியாக போகவில்லை. தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
தாஜ் : ரீன் ஆஃப் ரிவஞ்ச் (Taj: Reign of Revenge -இந்தி வெப் சீரிஸ்) – ஜீ5
பொன்னியின் செல்வன் படம் உங்களுக்கு பிடித்திருந்தால் ஜீ5 ஓடிடியில் வெளியாகி இருக்கும் தாஜ் வெப் சீரிஸும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பொன்னியின் செல்வன் படம் ராஜ ராஜ சோழனைப் பற்றியதென்றால் இந்த வெப் சீரிஸ் அக்பரையும், சலீமையும், அனார்கலியையும் பற்றியது.
இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அந்த முதல் சீசனின் இறுதியில் சலீமை நாடுகடத்தும் அக்பர், அனார்கலியை உயிருடன் கல்லறையில் வைத்து மூட உத்தரவிடுகிறார். அதேநேரத்தில் மறைமுகமாக அனார்கலி தப்ப வழி செய்கிறார். ஆனால் அவரது அக்பரின் கடைசி மகன் தான்யாத், அனார்கலியைக் கொல்வதுடன் சலீமையும் கொல்ல முயற்சி செய்கிறார். அதிலிருந்து தப்பும் சலீம், தன் சகோதரனை பழிவாங்க சபதம் எடுக்கிறார்.
இப்போது வெளியாகியிருக்கும் சீசனில் ரஜபுத்ரர்களை அடக்க முடியாமல் திணறும் அக்பர், சலீமை மீண்டும் ஆக்ராவுக்கு வரவழைக்கிறார். அது சலீமின் சகோதரர் தானியாத்துக்கும், அக்பரின் சில மனைவிகளுக்கும் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து முகாலய சாம்ராஜ்யத்தில் நடக்கும் பூசல்களைச் ச்சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
நஸ்ருதீன் ஷா அக்பராக நடித்துள்ள இந்த வெப் சீரிஸ், முகலாய சாம்ராஜ்யம், அக்பரின் தீ இலாஹி மதம் என பல விஷயங்களைப் பற்றி விலாவரியாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் ஆபாச காட்சிகளும் இருப்பதால் வரலாறு தெரியவேண்டிய குழந்தைகளுக்கு இந்த தொடரை தைரியமாக காட்ட முடியவில்லை.
சாஸ் பஹு அவுர் ஃபிளமிங்கோ (Saas Bahu Aur Flamingo – இந்தி வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்)
1980-களில் கவர்ச்சிக் கன்னியாக நடித்து இளம் உள்ளங்களை அள்ளிய டிம்பிள் கபாடியா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுத்திருக்கும் வெப் சீரிஸ் சாஸ் பஹு அவுர் ஃபிளமிங்கோ.
இந்தியாவின் எல்லையோர கிராமம் ஒன்றில் கைவினைப்பொருட்கள் நிறுவனம் என்ற பெயரில், மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களை தயாரித்து நாடெங்கும் வினியோகம் செய்து வருகிறார் டிம்பிள் கபாடியா. அவரைப் பிடிக்க ஒரு தனி அதிகாரியை போலீஸ் நியமிக்கிறது. மறுபுறம் போட்டியாளர்கள் அவரைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தனது 2 மருமகள்கள் மற்றும் மகள் யாராவது ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வெடுக்க விரும்புகிறார் டிம்பிள் கபாடியா.
அவரால் பொறுப்பை ஒப்படைக்க முடிந்ததா, போலீஸாரால் அவரைப் பிடிக்க முடிந்ததா? எதிராளிகளின் சதித்திட்டம் என்ன ஆனது என்பதுபோன்ற கேள்விகளுக்கு இந்த தொடர் பதில் சொல்கிறது.
விருபாக்ஷா (Virupaksha – தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்
அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘விருபாக்ஷா’. தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்போது வெளியாகி உள்ளது.
கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் மடிகிறார்கள். அதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதி அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக் கொல்கின்றனர். இறந்த தம்பதியரின் மகனை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கின்றனர்.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். தொடர் மரணங்களுக்கு என்ன காரணம் என்பதுதான் படத்தின் கதை. திகில் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.