ப்ளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கல்வி வழிகாட்டி பொன். தனசேகரன் தரும் பரிந்துரைகள் இங்கே…
“படிப்பது வேலைக்காகத்தான். எதைப் படித்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று தெரிந்து படிக்கிறோம். அந்தவகையில் அரசுத் துறைகளில் கணிசமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு திட்டமிட்டு படிப்பதன் மூலம் அரசு வேலைகளை பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்காக எட்டு வகைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 1, குரூப் 2… இப்படி 8 வரைக்கும் இருக்கிறது. தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்; ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையம்; வங்கிப் பணிகளுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் இப்படி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தேர்வாணையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அந்தந்தப் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகி முயற்சிக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது ஒருபக்கம் இருக்க பிஏ., எம்.ஏ. என தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்து படிப்பவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என ஒரு பொதுவான அபிப்ராயம் உள்ளது. அது தவறு. வரும் காலங்களில் தமிழும் ஆங்கிலமும் தெரிந்த வல்லுநர்களுக்கு தேவை அதிகமாக இருக்கும். கணினி தமிழுக்கு தமிழ் மொழி படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அகராதிப் பணிகள், மொழிபெயர்ப்பு பணிகள், ஊடகத்துறை பணிகள் என பல வாய்ப்புகள் உள்ளன.
சரி, இதுவரை நன்றாக படிப்பவர்களுக்கான வாய்ப்புகள் பற்றி பார்த்தோம். இனி படிப்பு சரியாக வராதவர்கள் என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். பொதுவாக தனக்கு சரியாக படிப்பு வரவில்லை எனக் கருதுபவர்கள் எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதை மட்டும் தேர்வு செய்து படிப்பது நல்லது.
எனக்கு தெரிந்த இருளர் இனப் பெண்… பளஸ் 2-இல் 52 சதவிகிதம் மட்டும்தான் மார்க். பிஎஸ்சி சுவாலஜி சேர்ந்து படித்தார். 62 சதவிகிதத்தில் அதை முடித்துவிட்டு எம்.எஸ்சி. சுவாலஜி படித்தார். எம்.எஸ்சி. முடிக்கும்போது 80 சதவிகிதம். அதன்பின்னர் பிரசிடென்சி காலேஜில் எம்.பில். செய்தார். இப்போது லயோலாவில் பி.ஹெச்டி செய்துகொண்டு இருக்கிறார்.
பி.ஹெச்டி ஸ்காலர்ஷிப்புக்காக இந்திய அளவில் தேர்வு நடக்கும். அதில் 735 பேரை தேர்வு செய்து ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள். 735இல் இந்த பெண் 38ஆவது ரேங்க். அவருக்கு இப்போது மாதம் 38,000 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது.
எங்கே தொடங்கி எங்கே வந்து நிற்கிறார் பாருங்கள். எனவே, ப்ளஸ் 2-இல் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று யாரும் துவண்டுவிட தேவையில்லை. அதன்பின்னர் முயற்சி செய்து படித்துகூட உயரங்களை தொட முடியும். இதுபோல், மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் வேலையிடங்களில் தங்கள் திறமையினால் முன்னேறி செல்வதையும் பார்க்க முடியும். பிஇ முடிக்கும்போது அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் உடனே வேலைக்கு சென்றுவிடுவார்கள். குறைவான மதிப்பெண் காரணமாக வேலை கிடைக்காதவர்கள் எதாவது ஒரு கல்லூரியில் எம்இ சேர்ந்து, அதன்பின்னர் பிஹெச்டி என்று உயரங்களை தொடுவார்கள். எனவே, எந்த கட்டத்திலும் சோர்ந்து விடாமல் முயற்சிப்பவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கும்.
சீன மூங்கில்கள் தொடக்கத்தில் வளராது. கிட்டதட்ட 5 வருடங்கள் வரை பெரிய வளர்ச்சி இல்லாமலே இருக்கும். அதை சாகுபடி செய்தவர்கள்கூட சோர்ந்துவிடுவார்கள். ஆனால், அதற்குப் பின்னர் ஒரு வேகம் எடுக்கும். அடுத்த ஆறு மாதங்களில் பெரிய மரமாகிவிடும். இதுபோல் ஒரு வேகம் எடுக்கும் நேரம் ஒவ்வொரு மாணவர்கள் உள்ளேயும் இருக்கிறது. ஒவ்வொருவரின் திறமை, ஆர்வத்துக்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்வது படிப்பதுதான், மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் அந்த நேரம்.