”குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பா வச்சக்கணுமா? கூப்பிடு டிகேயை”
“மகராஷ்ட்ரா எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கணுமா?டிகே கிட்ட சொல்லிடு”
“கட்சிக்கு பணம் தேவைப்படுதா? டிகே பார்த்துப்பார்”
“கட்சிக்காரங்களுக்குள்ள பிரச்சினையா? டிகே கிட்ட சொல்லு”
இப்படி காங்கிரசில் டிகே என்ற பெயர் கடந்த சில வருடங்களாக முன்னணியில் இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்தவர் என்றாலும் காங்கிரசின் அகில இந்திய தலைமைக்கு நெருக்கமானவர். இன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்றிருக்கும் பிரமாண்ட வெற்றியை கட்டமைத்தவர்.
டி.கே. எனப்படும் டி.கே.சிவக்குமாரின் ஆரம்பக் கால வாழ்க்கையே அதிரடியாகதான் இருந்திருக்கிறது.
பிறந்தது விவசாயக் குடும்பத்தில். பெங்களூருவிலிருந்து 65 கிமீ தள்ளி இருக்கும் கனகபுரா சொந்த ஊர். குடும்பத்துக்கு சொந்தமான சில ஏக்கர் நிலங்களை சிவக்குமாரின் பெற்றோர் நிர்வகித்துக் கொண்டிருந்தார்கள்.
சிவக்குமாரின் இளமைப் பருவவமே அதிரடியாகதான் இருந்திருக்கிறது. பையன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று அம்மா கவுரம்மாவுக்கு ஆசை. அதனால் மகன் சிவக்குமாரை பெங்களூரிலிருந்து அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அக்கா கணவர் ராணுவ அதிகாரி. கட்டுப்பாடான வாழ்க்கை முறையில்தான் பள்ளிப் பருவம் கழிந்திருக்கிறது.
ஆனால் கல்லூரிப் பருவம் அரசியல் ஆர்வத்துடன் நகர்ந்திருக்கிறது. கல்லூரி மாணவர் சங்கத்தில் அதீத ஈடுபாடு கொண்டவராய் சிவக்குமார் இருந்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத் தேர்தல் வருகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் சிவக்குமார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாணவனுக்கு அரசியல் பலம் அதிகம் இருக்கிறது. தனக்கும் அரசியல் பின்னணி வேண்டுமென்பதற்காக அப்போதைய காங்கிரஸ் தலைவர் பங்காரப்பாவை சந்தித்து ஆதரவு கேட்கிறார் சிவக்குமார். பங்காரப்பா ஆதரவு தர காங்கிரசில் இணைகிறார் சிவக்குமார்.
1985ல் சிவக்குமாரின் முதல் தேர்தல். எச்.டி.தேவகவுடாவை எதிர்த்து சாதனூர் தொகுதியில். அந்தத் தேர்தலில் தோற்றுவிட்டார். அடுத்து 1989 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். 1991ல் கர்நாடக மந்திரிசபையில் அமைச்சர். வேகமான அபரிதமான வளர்ச்சி.
இப்படி வளர்ந்தால் போட்டியும் பொறாமையும் இருக்கமல்லவா? இருந்தது. 1994 தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பை மறுக்கிறது காங்கிரஸ். சுயேச்சையாக போட்டியிடுகிறார். மீண்டும் வெற்றி. மீண்டும் காங்கிரசுக்குள். அதன்பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவரது அரசியல் மிக வேகமாக வளர்ந்தது. கனகபுராவின் புலி என்று கொண்டாடப்பட்டார்.
டிகே சிவக்குமாரின் அசுர வளர்ச்சிக்கு காரணம் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. தன்னுடைய வலது கரமாக டிகே சிவக்குமாரை வைத்திருந்தார். எஸ்.எம்.கிருஷ்ணாதான் டிகே சிவக்குமாருக்கு குரு. ஆனால் 2020ல் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தபோது குருவைப் பின்பற்றவில்லை சிவக்குமார். காங்கிரசிலேயே பக்கப் பலமாக இருந்தார்.
கர்நாடகத்தில் சாதி அரசியல் மிகத் தீவிரமாய் இருக்கும். அங்கே வொக்கலிகா, லிங்காயத் சமூகத்தினர்தான் அதிகம். இதுவரை கர்நாடகத்தில் 23 முதல்வர்களில் 16 இந்த இரு சமூகத்தை சார்ந்தவர்கள்தாம். டிகே சிவக்குமார் வொக்கலிகா சமூகத்தை சார்ந்தவர். அங்கே அவருக்கு அரசியலில் போட்டி கொடுக்கும் இன்னொரு வொக்கலிக அரசியல் தலைவர் குமாரசாமி. ஆனால் இப்போது குமாரசாமியின் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தையும் முந்திவிட்டது காங்கிரஸ். வொக்கலிகா சமூகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக சிவக்குமார் மாறியிருக்கிறார்.
அரசியல் மட்டுமல்ல, சிவக்குமார் பலவித தொழில்களில் ஈடுபடுகிறார். கிரானைட் சுரங்கங்கள், ரியல் எஸ்டேட், தோட்டங்கள், விவசாயம் எஸ்டேட்டுகள் என கர்நாடகத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் சிவக்குமார் முதன்மையானவர். அவரது சொத்து மதிப்பு 1400 கோடி என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
சிவக்குமாருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். மூத்த மகளை காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் மகன் திருமணம் செய்திருக்கிறார். காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா நான்கு வருடங்களுக்கு முன்பு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார் என்பது நினைவில் வரலாம். தற்கொலை செய்துக் கொண்ட சித்தார்த்தா கர்நாடாகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தை தாண்டியும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் சிக்கல்களை களையும் பிரச்சினைகளை தீர்ப்பவராகவும் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்படுகிறார்கள் என்று அறிந்தவுடன் அவர்களை கர்நாடாகவுக்கு அழைத்து வந்து ரிசார்ட்டுகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மகாராஷ்டிராவில் அது போன்ற சூழல் வந்த போதும் இதே ரிசார்ட் அரசியலை பயன்படுத்தினார்.
பிரச்சினையா? கூப்பிடு சிவக்குமாரை என்பது போன்று வளர்ந்து நிற்கிறார் சிவக்குமார்.
இப்படி வளர்ந்த டிகே சிவக்குமார் இன்று கர்நாடக காங்கிரசின் அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏன் முதலமைச்சர் பதவி கொடுக்க காங்கிரசில் இத்தனை தயக்கம்?
காரணம் அவர் மீது இருக்கும் வழக்குகள். 2017ல் சட்ட விரோத பணப் பறிமாற்றம், சொத்துக் குவிப்பு என பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. ஒரு மாத காலம் சிறையிலும் இருந்தார்.
2020ல் சிவக்குமாருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 2023 தேர்தலில் காங்கிரசை வெல்ல வைக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு வைக்கப்பட்ட இலக்கு. அந்த இலக்கு இப்போது வெற்றிகரமாக அடையப்பட்டிருக்கிறது.