லைகா ப்ரொடக்ஷன்ஸ், சமீப காலமாக மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்களில் தமிழ்த்திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சமீபத்தில்தான் வெளியாகின. அடுத்து ரஜினி மகள் இயக்கும் ‘லால் சலாம்’ அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம், கமல் – ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் – 2’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ என லைகா தயாரிக்கும் மெகா பட்ஜெட் படங்களின் பட்டியல் நீள்கிறது.
தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை தீர்மானிக்கும் நிலையில் லைகா இருப்பதால், தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இந்நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலையில் இருந்தே லைகா நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கோலிவுட் கலகலத்து போயிருக்கிறது.
சென்னை தி.நகரில் இருக்கும் லைகா நிறுவன அலுவலகம், லைகா நிறுவனத்தின் முக்கியப்புள்ளிகளான நீலகண்ட் நாராயண்பூர், நிருதன் ராஜ சுந்தரம், ஜி.கே.எம். தமிழ்க்குமரன் போன்றவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட சென்னையில் 8 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இந்த சோதனை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்தும் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதால்தான் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையினரிடம் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஏன் இந்த திடீர் சோதனை என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது ஹவாலா பிரச்சினையாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்.
லைகா நிதிநெருக்கடியில் தவித்த போது இவ்வளவு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இத்தனை படங்களை எப்படி எடுக்க முடிந்திருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது.
அமலாக்கத்துறையில் இந்த அதிரடி சோதனைக்கு, லைகா முன்பே சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை வெளிநாடுகளில் மேற்கொண்டிருந்த சம்பவங்களும் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.
லைகா ப்ரொடக்ஷன்ஸின் தாய் நிறுவனமான லைகா மொபைல் இதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது.
ப்ரீபெய்ட் மொபைல் போன் சேவைகளை வழங்கி வரும் மொபைல் வர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டராக லைகா மொபைல் சுபாஷ்கரன் அல்லிராஜாவால் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் 20-க்கும் அதிகமான நாடுகளில் தனது ப்ரீபெய்ட் மொபைல்போன் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் இதற்கு முன்பாக பல சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. குறிப்பாக இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்நிறுவனம் இப்பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது.
20216-ல் பிரான்ஸ் நாட்டின் காவல்துறை, பாரிஸில் இருக்கும் லைகா மொபைலின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்த சந்தேகம் இருப்பதாக கூறி அந்நிறுவனத்தில் பணியாற்றிய 19 பேரை கைது செய்தது.
BuzzFeed News மேற்கொண்ட புலனாய்வின் விளைவால் இந்த சோதனையை பிரான்ஸ் நாட்டு காவல் துறை மேற்கொண்டது. பாரிஸில் ப்ரீபெய்ட் மூலம் அழைப்பு விடுக்கும் கார்ட்களை பணத்திற்காக கள்ளச்சந்தையில் லைகா விற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் இந்நிறுவனம் பில்லிங் செய்வதிலும் தவறான நடைமுறையை பின்பற்றியதாகவும் கூறப்பட்டது
2018-ல் இங்கிலாந்தின் ஹெச்.எம்.ஆர்.சி எனப்படும் ஹெச்.எம் ரெவென்யூ அண்ட் கஸ்டம்ஸ் அமைப்பு, சுமார் 134 மில்லியன் பவுண்ட் கார்போரேஷன் வரி கட்ட தவறியாக குற்றம் சாட்டியது. அதாவது வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக செயல்பாட்டில் இல்லாத ஏராளமான நிறுவனங்களை லைகா மொபைல் பயன்படுத்தி வருவதாக இந்த அமைப்பு கூறியது.
2019-ல் லைகா ப்ரொடக்ஷன்ஸ், ஐங்கரன் இண்டர்நேஷனல் ஃப்லிம்ஸின் கருணாமூர்த்தியின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டை வைத்தது. இதற்கு காவல்துறையின் நடவடிக்கை வேண்டுமென்று கோரிக்கை வைத்தது.
2020-ல் இலங்கை அரசு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் பணம் முறைகேடாக, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறி விசாரணைக்கு ஆணையிட்டது.
லைகா மொபைல் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து இருக்கிறது. அத்தோடு அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்துவருவதாகவும் கூறியது. அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருவதாகவும் சொல்லியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் லைகா நிறுவனம் அபாராதம் கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அடுத்து தனது லைசென்ஸை இழக்கும் அபாயத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டது.
இந்த கேள்வி ஒரு பக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஒட்டுமொத்தமாக லைகாவுக்கு லாபத்தை ஈட்டியுள்ளன. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு பாகங்களின் ஒட்டுமொத்த வசூலின் மூலம் சுமார் 200 கோடி முதல் 300 கோடி வரை லாபம் கிடைத்திருக்கலாம் என்பது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம். இந்த பல நூறு கோடிகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், வசூலை அதிகம் காட்டி ஹவாலா பணத்தை உள்ளே இறக்கி இருக்கலாம் என்று ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கசிந்திருக்கிறது.
மற்றொரு கோணத்தில் ரஜினிக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த சோதனை என்றும் கூறப்படுகிறது.
பட்ஜெட் படங்களில் நடித்து வந்த ரஜினி, ஷங்கரின் ’சிவாஜி’ படத்தில் நடித்த பிறகு, மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். இதனால் ரஜினி நடிக்கும் படங்கள் என்றால் ஏதாவது ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தையும் சன் பிக்சர்ஸ் அல்லது லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாகவே இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
ரஜினி நடிக்கவிருக்கும் இரண்டுப் படங்களை லைகா தயாரிப்பதாகவும், அதற்காக ரஜினிக்கு 250 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் கோலிவுட்டின் பரபரப்பான கிசுகிசுவாக முணுமுணுக்கப்பட்டது.
சினிமா வட்டாரத்தில், படங்களைத் தயாரிப்பதற்கும், நட்சத்திரங்களின் சம்பளங்களுக்கும் பல நூறு கோடிகளை இறக்கியதில் ஹவாலா நடவடிக்கைகள் இருக்கலாம் என்கிறார்கள்.
இதை வைத்து முழுநேர ஆரசியல் வேண்டாமென ஒதுங்கிவிட்ட ரஜினியை, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ஸ் கொடுக்க வைக்கவேண்டுமென்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம். இந்த சோதனை ரஜினிக்கும் ஒரு சோதனையாகவே இருக்கும் என்பதால் அவரை இழுப்பது எளிது என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.