அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.
ஒரு ஆட்சியில் அமைச்சர்கள் நீக்கப்படுவதும் சேர்க்கப்படுவதும் இலாகாக்கள் மாற்றப்படுவதும் நடைமுறைதான்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டது பல கேள்விகளை எழுப்புகின்றன.
- தமிழ்நாட்டின் நிதி நிலையை சரியாக கையாண்டுக் கொண்டிருக்கிறார். கடனைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். செலவுகளைக் கட்டுப்படுத்தியிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் புகழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஏன் இந்த மாற்றம்? தமிழ்நாட்டின் நிதிநிலை முழுமையாக சரியாகிவிட்டதா? இனி பிடிஆரின் திறமை நிதித் துறையில் தேவைப்படவில்லையா?
- குற்றச்சாட்டுக்களோ புகார்களோ இல்லாதபோது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் மாற்ற வேண்டும்?
- பிடிஆர் பேசியதாக தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவுக்கான எதிர்வினையா?
- சமீபத்தில் ஆளுநர் மாளிகை செலவுகளைக் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதற்கு ஆளுநர் மாளிகையும் விளக்கங்களைத் தந்தது. பிடிஆரின் இலாகா மாற்றத்தின் பின்னணியில் ஆளுநர் மாளிகை செலவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா?
- மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?
- பிடிஆரின் தனிப்பட்ட செல்வாக்கு உயர்வது கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதா? அதனால் இந்த மாற்றமா?
- பிடிஆர் திமுகவில் ஒதுக்கப்படுகிறாரா? அவருக்கு ஆதரவான குரல்கள் திமுகவில் இல்லையா?
- பிடிஆர் மீது திமுக தலைமைக்கு அதிருப்தி இருக்கிறதா? அதன் வெளிப்பாடுதான் இந்த இலாகா மாற்றமா?
இத்தனை கேள்விகள் இருக்கின்றன. இவை சாமானியருக்கு வரும் கேள்விகள்.
எதிர்க் கட்சிகள் கிளப்பப் போகும் கேள்விகள். அரசியல் மேடைகளில் ஒலிக்கப் போகும் கேள்விகள்.
திமுக இந்தக் கேள்விகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறது? சமாளிக்கப் போகிறது?