தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் அதிகபட்சமாக 96.38 சதவீதமும், மாணவர்கள் 3,82,371 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தை பிடித்த தச்சுத் தொழிலாளி மகள்
இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியான நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அப்பா சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி.
“1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது முதல் படிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டு உள்ளிட்ட எந்தவித பொழுது போக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டேன். எங்கள் வீட்டில் எனக்காக அரசு பொதுத்தேர்வு சமயங்களில் டி.வி. பார்ப்பதை அனைவரும் தவிர்த்து விட்டனர்” என்று தனது வெற்றிக்கான காரணத்தை நந்தினி கூறியுள்ளார்.
முதலிடத்தில் விருதுநகர்
பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு மிக அதிகமாக விருதுநகரைச் சேர்ந்த 97.85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகருக்கு அடுத்ததாக திருப்பூர் (97.79), பெரம்பலூர் (97.59) மாவட்டங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 91.40% மாணவர்களும், 96.64% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த 87.30 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகள் 89.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நூற்றுக்கு நூறு
கணித பாடத்தில் 690 மாணவர்களும், வேதியலில் 3,909 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 812 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 1,494 மாணவர்களும், தாவரவியலில் 340, விலங்கியலில் 154 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியலில் 6,573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 4,618 பேரும், வணிகவியலில் 5,678 பேரும், பொருளியலில் – 1706 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
முதல்வர் வாழ்த்து
பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது.நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.