சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை அனல் பறக்கப் போகிறது. ஏற்கெனவே அக்னி நட்சத்திரத்தால் கொதித்துக் கிடக்கும் மைதானத்தில், நாளை சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கப் போவதே இதற்கு காரணம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படியோ, அப்படித்தான் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும். சிஎஸ்கே ரசிகர்களைப் பொறுத்தவரை மற்ற எந்த அணிகளிடம் தோற்றாலும், தங்கள் மஞ்சள் படை மும்பை இந்தியஸிடம் மட்டும் தோற்கக் கூடாது. மும்பை ரசிகர்களின் மனநிலையும் கிட்டத்தட்ட அதேதான். அதனால் தங்கள் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு அணிகளின் வீரர்களும் உயிரைவிட்டு போராடுவார்கள்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் இதுவரை 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இரு அணிகளும் மோதிய 35 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 20 முறையும், சிஎஸ்கே 15 முறையும் வென்றுள்ளன. இது இவர்கள் மோதும் 36-வது போட்டி.
இந்த ஐபிஎல்லில் ஏற்கெனவே நடந்த போட்டியில் மும்பையை வென்றதால் கிடைத்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது சிஎஸ்கே. கான்வாய், ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, தோனி என தீபக் சாஹர் வரை கிட்டத்தட்ட 9 பேட்ஸ்மேன்கள் இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம்.
இந்த ஐபிஎல்லைப் பொருத்தவரை முதல் பாதி ஆட்டங்களில் ஆடுகளங்களங்கள் பிரஷ்ஷாக இருந்ததால் வேகப்பந்து வீச்சு அதிகம் எடுபட்டது. ஆனால் இப்போது பல பிட்ச்கள் பழகிவிட்டதால் சுழற்பந்து வீச்சுதான் எடுபடுகிறது. ஜடேஜா, தீக்ஷணா, மொயின் அலி, சாண்ட்னர் என குவாலிடியான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது சென்னைக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இந்த 2 பலங்களும் சேர்ந்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் மும்பை பக்கமும் நம்பிக்கைக்கு குறைவில்லை. பொதுவாகவே ஐபிஎல்லின் தொடக்க போட்டிகளில் தோற்று, கடைசி கட்டத்தில் வேகமெடுப்பது மும்பையின் ஸ்டைல். அது இந்த முறையும் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள் மும்பை ரசிகர்கள். ஆரம்ப கட்டத்தில் பேட்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், க்ரீன் உள்ளிட்டோர் இப்போது புலியாக பாய்வது அவர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கேப்டன் ரோஹித்தும் ஃபார்முக்கு வந்தால் சென்னை அணி சமாளிப்பது கஷ்டம்.
பேட்டிங்கில் சென்னைக்கு ஈடுகொடுத்தாலும், பெரிய அளவிலான ஸ்பின்னர்கள் இல்லாதது மும்பை இந்தியன்ஸின் பலவீனம்.