அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒரு கனவு, இலக்கு இருக்கும். அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவது. அதுதான் ஐபிஎஸ் பணியின் உச்சம். எப்படி டென்னிஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் வெற்றிப் பெறுவது இலக்காக இருக்குமோ அப்படி.
இப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான ரேஸ் தொடங்கிவிட்டது. தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஜூன் மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார். அவருக்கு அடுத்து யார் அந்தப் பதவிக்கு வரப் போகிறார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. இந்தப் பதவிக்காக தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் போட்டி இருக்கிறது.
2021ல் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்றப் பிறகு அதிகாரிகள் மாற்றம் நடந்தது. தலைமைச் செயலராக இறையன்பு ஐஏஎஸ் பொறுப்பேற்றார். அப்போது டிஜிபியாக இருந்த ஜேகே திரிபாதி ஐபிஎஸ் ஜூன் 30ல் ஓய்வுப் பெற, அந்த இடத்துக்கு சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
டிஜிபி நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டல்களை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படிதான் அரசுகள் நடந்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் இவைதான். பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் 2006ஆம் ஆண்டு இந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
டிஜிபி பதவிக்கு வருபவர்கள் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு (யுபிஎஸ்சி – Union Public Service Commission) மாநில அரசு அனுப்ப வேண்டும். அவர்களில் மூன்று பேரை மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும், அந்த மூன்று பேரில் ஒருவரை மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்றும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஓய்வுபெறும் காலத்துக்கு அருகில் உள்ளவர்களை டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு தருவதை தவிர்க்க வேண்டும்.
புதிய டிஜிபிக்கான தேர்வு செயல்முறைகளை மூன்று மாதங்களுக்கு முன்பே அரசு தொடங்கிவிட வேண்டும்.
இப்படி சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் 2006ல் பிறப்பித்தது. இந்த உத்தரவுகள் தொடர்பாக வழக்குகள் போடப்பட்டு 2018 அதற்கு விளக்கங்களும் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால் இன்று வரை மாநிலங்களில் டிஜிபி நியமனங்கள் சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகளும் பதியப்பட்டு வருகின்றன.
சரி, தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு வருவோம்.
சைலேந்திரபாபு ஐபிஎஸ் 1987 வருடத்து அதிகாரி. அவருக்கு அடுத்து மூத்த அதிகாரிகளாக 1988, 1989, 1990 ஆகிய வருடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவியேற்றவர்கள் வருகிறார்கள்.
1988 பட்டியலில் இப்போது இருப்பவர் சஞ்சய் அரோரா ஐபிஎஸ்.
1989 வருடப் பட்டியலில் நான்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். பி.கந்தசாமி, பிரமோத் குமார், ராஜேஷ்தாஸ், ப்ரஜ் கிஷோர் ரவி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் வருகிறார்கள். இவர்களில் கந்தசாமி ஐபிஎஸ் ஏப்ரல் மாத இறுதியில் ஓய்வுப் பெறுகிறார். ராஜேஷ்தாஸ் ஐபிஎஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது போல் பிரமோத் குமார் ஐபிஎஸ் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ப்ரஜ் கிஷோர் ரவி இந்த வருடம் டிசம்பர் மாதம் ஓய்வுப் பெறுகிறார். ஆனாலும் அவரால் பட்டியலில் இடம் பெற முடியும்.
1990ஆம் வருடப் பட்டியலில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி தகுதியில் இருக்கிறார்கள். அவர்களில் மூத்தவர் இப்போது சென்னை கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால். இவரைத் தவிர ஏ.கே.விஸ்வநாதன், அபாஷ் குமார், ரவிசந்திரன், சீமா அகர்வால்,
இவர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வர முடியும்.
அயல்பணிக்காக டெல்லி சென்றிருந்த சஞ்சய் அரோரா ஐ.பி.எஸ் மீண்டும் தமிழ்நாடு வருகிறார் என்று தகவலகள் வந்திருக்கின்றன. இவர் வால்டர் தேவாராம் தலைமையிலும் பவிஜயகுமார் ஐ.பி.எஸ் தலைமையிலும் வீரப்படனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப் படைகளில் பணியாற்றியவர். பிறகு சத்தீஸ்கரில் நக்சைலைட் ஒடுக்கும் பணியில் இருந்தார். தற்போது டெல்லி காவல் துறை ஆணையராகப் பணி புரிந்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு டிஜி.பி ரேஸில் சீனியர் இவர் தான்.
இவருக்கு அடுத்த நிலையில் போட்டியில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இருக்கிறார். இப்போது சென்னை நகர போலீஸ் கமிஷனராக சிறப்பாக பணியாற்றுவதால் இவருக்கு டிஜிபி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இருவரைத் தவிர தீயணைப்பு துறை தலைவராக இருக்கும் பி.கே ரவி ஐபிஎஸ், தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநரும் முன்னாள் சென்னை காவல் துறை ஆணையராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர்களின் பெயர்களும் டிஜிபி பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.