எழுத்தாளர், அரசியல்வாதி, ஐஏஎஸ் அதிகாரி, பெண்ணியவாதி, சிற்றிதழ் ஆசிரியர், குறும்பட இயக்குநர் என பன்முகம் கொண்டவர் சிவகாமி ஐஏஎஸ். சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனர், தலைவர். ’வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு சிவகாமி ஐஏஎஸ் அளித்த பேட்டி இது.
சமீபத்தில் அம்பாசமுத்திர காவல் நிலையத்தில் பல்வீர் சிங் என்ற ஐபிஎஸ் அதிகாரி விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கியது உள்பட பல கொடுமைகள் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஆனால், அவர் மீது இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இந்த செயல்களை எப்படி பார்ப்பது?
அரசும் காவல்துறையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, போலீஸ் அரசு என்று சொல்லலாம். வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் பல்வேறு விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களை விமர்சிப்பவர்கள், போராடுபவர்கள்; ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை அல்லது இதுபோல் பல்வேறு அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி போராடுபவர்கள் – இப்படி பல்வேறு விஷயங்களை சட்டம் ஒழுங்கு என்கிற பெயரில் போலீஸை வைத்துதான் அனுகுகிறார்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில்கூட தெரிந்தும் தெரியாமலும் அரசாங்கத்துடன் காவல்துறை இணைந்துள்ளது.
மேலும், என்கவுண்டர் போன்ற காவல்துறையினரின் வன்முறையை விதந்து போன்றும் ஒரு டிரண்டு இங்கு உள்ளது. அவர்களை ஹீரோக்களாக சித்தரிக்கும் போக்கு…
இதனால் காவல்துறையினர் சீரூடையை அணிந்ததுமே வேறு ஒரு மனிதராக அவர்கள் மாறுவிடுகிறார்கள். இதுபோல் உரிமை மீறல் பிரச்சினையைக்கூட தங்கள் மேலிருக்கும் அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. அரசாங்கத்தின் முழு அசீர்வாதம் இருப்பதால்தான் இதுபோன்ற செயல்களை அவர்களால் செய்ய முடிகிறது. அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறல் இது. பல்வீர்சிங் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
பல்வீர் சிங்குக்கு ஆதரவாக ஐபிஎஸ் சங்கம் அறிக்கை விட்டுள்ளது.
இதைத்தான் உயரதிகாரிகள் ஆதரவு உள்ளது என்று நான் சொன்னேன்.
அமுதா ஐஏஎஸ் இப்போது அது தொடர்பான விசாரனையை மேற்கொள்கிறார். இத்தனை அழுத்தங்கள் இருந்தால் அவரால் விசாரணையை முழுமையாக நடத்த முடியுமா?
அமுதா ஐஏஎஸ்ஸுக்கு நேர்மையான அதிகாரி என்ற பெயர் உள்ளது. அதனால் அவர்களை நியமித்துள்ளார்கள். அவர்கள் என்னவிதமான அறிக்கை கொடுக்கப்போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்துதான் அமுதா ஐஏஎஸ் நேர்மையை இனி நாம் மதிப்பிட முடியும்.
சமீபத்தில் கர்நாடாகவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரியும் ரோகினி என்ற ஐஏஎஸ் அதிகாரியும் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் கொச்சையாக விமர்சித்துக் கொண்டார்கள். அது தேசிய அளவில் செய்தியானது. இது போன்ற செயல்கள் ஏன் நடக்கிறது? எப்படி கட்டுப்படுத்துவது?
அதிகாரிகள் சிலரிடம், நாம் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்ற எண்ணம் மறைந்து, நான் பெரிய ஆளா நீ பெரிய ஆளா என்ற எண்ணம் உள்ளது. அதன் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள். எல்லோரும் இப்படி கிடையாது.
ரேங்கிங் அடிப்படையில் பார்க்கும்போது ஐஏஎஸ்ஸை விட ஐபிஏஸ் குறைவான ரேங்க். ஆனால், பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து வருடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பி ஆகிவிடுகிறார்கள்; ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர் ஆக பத்து வருடங்கள் ஆகும். இதனால் ஐஏஎஸ் பத்து வருடங்களில் அடையும் அதிகாரத்தை ஐபிஎஸ் பத்து வருடங்களில் அடைந்துவிடுகிறார்கள். இதனால் சில இடங்களில் அதிகார மோதல் ஏற்படுகிறது. இதற்கு அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட ஆளுமையும் முக்கிய காரணம்.
தொடரும்