No menu items!

Strict ஆக மாறிய Chennai Traffic Police!

Strict ஆக மாறிய Chennai Traffic Police!

சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.

கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால், பின்னாலிருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்றால்…..இப்படி தெருவில் வண்டி ஓட்டினால் காவல்துறையின் செலான் வாங்காமல் திரும்ப மாட்டோம் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.

காவல்துறையினர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பது மட்டுமில்லாமல், இப்போது இன்னொரு வகையிலும் போக்குவரத்து தவறுகளை கண்டுபிடிக்கிறார்கள். அது ட்விட்டர் புகார்கள்.

நீங்கள் சாலையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அங்கே ஒரு வாகனம் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் உங்கள் மொபைல் மூலம் போட்டோ எடுத்து சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் (@ChennaiTraffic) நேரம், இடம் குறிப்பிட்டு தவறை சுட்டிக் காட்டலாம். உடனே காவல்துறை அந்த வாகன சொந்தக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பிவிடுகிறார்கள்.

சென்னை பொதுமக்களுக்கு அடுத்தவரை மாட்டிவிடுவதில் அத்தனை சந்தோஷம். ஹெல்மெட் போடவில்லை, பைக்கில் மூன்று பேர் போகிறார்கள், ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்தியிருக்கிறார்கள், நம்பர் ப்ளேட்டை டிசைனாக எழுதியிருக்கிறார்கள்….இப்படி கண்ணில்படும் தவறுகளையும் படம் பிடித்து போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார்கள். தவறு செய்தவர்களுக்கு அபராத நோட்டீஸ் எஸ்.எம்.எஸ்ஸில் போகிறது.

இது மட்டுமில்லாமல் இப்போது காவல்துறையினர் வேறொரு முறையையும் கையாளுகிறார்கள். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறீர்களா? உடனே உங்களை வண்டியில் ஹெல்மெட் இல்லாத தலையுடன் அமர்ந்திருப்பதை படமெடுத்து அனுப்பிவிடுகிறார்கள். பிறகு உங்கள் வண்டி எண்ணை வைத்து உங்கள் மொபைலுக்கு அபராத ரசீது தேடி வரும்.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்துக்கு இதுவரை 72 ஆயிரத்து 800 பின் தொடருபவர்கள் இருக்கிறார்கள். ட்விட்டர் பக்கம் தவிர ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு பக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலமும் புகார்கள் பெறப்படுகின்றன. இவை தவிர ஒரு வாட்ஸ்அப் எண்ணும் இருக்கிறது. அதிலும் புகார்கள் தெரிவிக்கலாம்.

தினமும் பல புகார்கள் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றை சென்னை காவல்துறை சரி பார்த்து விதிமீறியர்களுக்கு அபராதம் விதிக்கிறது. இந்த அபராதத்தை ஆன்லைனிலே கட்டிக் கொள்ளலாம்.

”இப்போது போக்குவரத்தை நாங்கள்தான் கண்காணிக்க வேண்டுமென்பதில்லை. சமூக ஊடகங்கள் மூலம் மக்களே புகார்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் நான்காவது கண்ணாக செயல்பட்டு விதிமீறல்கள், போக்குவரத்து சிக்கல்களை எங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறார்கள். இது எங்களுக்கு பலமாக இருக்கிறது. சாலைகள் பாதுகாப்பனதாக மாற மக்கள் பங்கேற்பு அவசியம்” என்கிறார் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார்.

கடந்த நான்கு மாதங்களில் சமூக ஊடகங்கள் மூலம் 3000 புகார்களுக்கு மேல் வந்திருக்கின்றன. அவற்றில் 94 சதவீத புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாக காவல்துறை கூறுகிறது.

ஆகவே சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறாமல் சாலைகளை பயன்படுத்துங்கள். மீறினால் அபராதம் அடுத்த வினாடி உங்கள் மொபைலுக்கு வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...