தமிழ் மொழியின், தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ததில் முக்கியமானது கீழடி அகழாய்வு. இந்த அகழாய்வின் தொடக்கப்புள்ளியாகவும் காரணமாகவும் இருந்தவர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் கீழடி அகழாய்வு ஏன் முக்கியமானது என்பது தொடர்பாக அமர்நாத் ராமகிருஷ்ணா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை நீங்கள் செய்தீர்கள். அதற்கான அறிக்கையை சமர்பித்துள்ளீர்கள். அந்த அறிக்கையில் என்னன்ன சொல்லியுள்ளீர்கள்?
கீழடியில் செய்யப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை 982 பக்கங்களில் கொடுத்திருக்கிறோம். கீழடி தொல்லியல் தளத்தின் காலகட்டம், அங்கு நிலவிய கலாச்சாரம், அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்த பயிர்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், அந்த இடம் எப்படி ஒரு நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ஆரம்பகட்ட விடைகளை அளிப்பதாக இந்த ஆய்வறிக்கை இருக்கும்.
கீழடியில் கிடைத்த உயிரியல் எச்சங்களை ஆய்வுசெய்தபோது, அதில் குறிப்பிடத்தக்க அளவில் நெற்பயிரின் எச்சங்களும் உமியும் கிடைத்தன. இதனால், அங்கு பெரிய அளவில் நெற்பயிர் விளைவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இங்கு தொடர்ந்து விளைச்சல் அதிகரித்து, இதனால் ஏற்பட்ட உபரியால், உள்நாட்டு – வெளிநாட்டு வணிகமும் வர்த்தகமும் நடக்க ஆரம்பித்து, மெல்ல மெல்ல கீழடி ஒரு நகர்ப்புறமாக மாற ஆரம்பித்துள்ளது.
கீழடி பகுதியில் பெரிய அளவில் விலங்குகளின் எலும்புகள் கிடைத்ததை வைத்துப் பார்த்தால், கீழடியின் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கை வகித்திருக்கக்கூடும். வீடுகளில் எருமை, ஆடு, செம்மறியாடு போன்ற விலங்குகளை வளர்த்ததுபோக, கொம்புகள், தோல் போன்ற பொருட்களுக்காக மிருகங்களை வேட்டையாடுவதும் கீழடியில் நடந்திருக்கிறது. காட்டு மாடுகள், காட்டெருமைகள் போன்றவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் செல்லப் பிராணிகளாகவோ பாதுகாப்புக்காகவோ வளர்க்கப்பட்டிருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கீழடியின் பொருளாதாரத்தில் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பது தெரிய வருகிறது.
கீழடியில் கிடைத்த விலங்கு ஆதாரங்களிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது குதிரை பற்றியதுதான். கீழடியில் இருந்த மக்கள் குதிரைகளை வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது தொல்லியல்ரீதியில் மிக முக்கியமானது. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் / காலின் வந்த கருங்கறி மூடையும் / வடமலைப் பிறந்த மணியும், பொன்னும் / குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்” என்கிறது சங்க காலப் பாடலான பட்டினப்பாலை. அதாவது, ‘கடல் மூலம் கொணடுவரப்பட்ட வேகமாகச் செல்லக்கூடிய நிமிர்ந்த குதிரைகள், சரக்கு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும் வடமலையில் இருந்து வந்த தங்கமும் மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும் அகிலும்’ என்பது இந்த வரிகளின் அர்த்தம்.
தென்னிந்தியாவிலேயே தொல்லியல் தளங்களில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குதிரைகள் சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சொல்லப்படுவதைப்போல, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும்.
சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சங்கப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. குதிரை உட்பட கீழடியில் கிடைத்த சில சான்றுகள், இந்த இலக்கியங்கள் காட்டும் சங்க காலத்தை சிறிய அளவிலாவது உறுதிப்படுத்துகின்றன.
முதல் இரண்டு கட்ட அகழாய்விலேயே 7 லட்சம் பானை ஓடுகள் கிடைத்தன. அதை அங்கேயே பட்டியலிட்டு, அதிலிருந்து 1 லட்சத்து 3 ஆயிரம் பானை ஓடுகளை அலுவலகத்துக்கு கொண்டு வந்தோம். அதில் இருந்து வடிவம் பிரகாரம் பட்டியலிட்டு 13900 பானை ஓடுகளை தேர்வு செய்தோம். அதை முறைப்படி ஆய்வுக்குட்படுத்தி 1842 பானைகளை கண்டடைந்தோம். தமிழ் பிராமி எழுத்துகள் 108, குறியீடுகள் 197-ஐ அட்டவணைப் படுத்தினோம். இப்படி முறையாக பட்டியலிட்டு சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை தமிழ்நாட்டில் இருந்து இதுதான் முதல்.
இந்த இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. ‘திசன்’ போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. இந்த இரண்டு அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் ஆரம்பகால வரலாற்றையும் சங்க காலத்தையும் மேலும் அறிந்துகொள்ள கீழடி மிக மிக முக்கியமான தொல்லியல் தளமாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
தொடரும்