23 அறுவைசிகிச்சைகள் கொடுக்காத வலி, இப்பொழுது அஜித்திற்கு….
ரொம்பவே துவண்டுப் போயிருக்கிறார் ஏ.கே.
கோடிக்கணக்கான தமிழ் சினிமா ரசிகர்களால் ஆதர்ச ஹீரோவாக கொண்டாடப்படும் அஜித்தின் ‘அசல் ஹீரோ’வான பி.எஸ். மணி இன்று இவ்வுலகில் இல்லை.
இறந்து போன பி.எஸ். மணி அஜித்தின் அப்பா மட்டுமில்லை.
அப்பாவே தன்னுடைய மகனுக்கு ஒரு நண்பனாகவும் இருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு உறவுதான் இவர்கள் இருவருக்குள்ளும் இருந்தது.
குறும்புப் பயலாக தவழ்ந்து கொண்டிருந்த அஜித்தின் கையைப்பிடித்து அவருக்கு நடக்க கற்றுக்கொடுத்தது முதல், தனது முதுமையில் அதே அஜித்தின் கைப்பிடித்து ஒரு முதிர்ந்த குழந்தையாக நடந்தது வரை ஒரு நண்பராகவே வாழ்ந்திருக்கிறார்.
தனது அப்பாவைப் பிரிந்த வலியைவிட, தனது இறுதி மூச்சு வரை உற்சாகமூட்டிய அந்த நண்பனைப் பிரிந்த வலி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பது அஜித்துடன் நெருங்கிய பழகியவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.
இன்று நாம் பார்க்கும் அஜித்திடம் இருக்கும் பல விஷயங்களுக்கு இன்ஸ்பைரேஷன், அஜித்தின் சீனியர் ஃப்ரெண்ட் பி.எஸ். மணிதான்.
அஜித்திற்கு சிறு வயதிலிருந்தே, கொஞ்சம் வேகம் அதிகம். பட்டென்று கோபம் வரும். பொசுக்கென்று வார்த்தைகள் வெடிக்கும். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற ருத்ரம் இருக்கும்.
இதையெல்லாம் புரிந்து கொண்டு, அஜித்தை அவர் வழியிலேயே போகவிட்டு, இன்று பக்குவப்பட்ட ஒரு மனிதராக மாற்றியதில் அஜித்தின் அப்பாவின் பங்கு மிக அதிகம்.
படிப்பில் விருப்பம் இல்லை. ஏதாவது ஒரு வேலைப் பார்க்க பிடிக்கவில்லை. இப்படியொரு எண்ணத்துடன் அஜித் தனது வாழ்க்கையில் மெக்கானிக்காக களமிறங்கிய போதும், நான் நடிக்கப் போகிறேன் என்று வீட்டில் அஜித் தனது ஆசை சொன்னப் போதும், நடிப்பு வேண்டாம் மோட்டார் ரேஸ் போதும் என்று அஜித் ரிஸ்க் எடுத்த போதும், ஒரு நண்பனாக அதைப் புரிந்து கொண்டு அஜித்தின் தோள் மேல் கைப்போட்டவர் பெரியவர் பி.எஸ். மணி.
’மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்’ என்று அஜித்தின் அப்பா சொன்ன வார்த்தைகள்தான் இன்று அஜித்தை இந்தளவிற்கு ஒரு வெளிப்படையான ஒரு மனிதராக மாற்றியிருக்கிறது. ஒரு கமர்ஷியல் நடிகருக்கு மிக மிக அவசியமான ரசிகர் மன்றங்களைக் கூட கலைக்க வைத்திருக்கிறது.
’மனதிற்கு எது பிடிக்கிறதோ அதை செய்’ என்ற அப்பாவின் அந்த வார்த்தைகள்தான், மோட்டார் ரேசில் சாதித்த திரை நட்சத்திரம் என்ற உலக அந்தஸ்தை பெற்று தந்திருக்கிறது. அஜித்தை இன்று மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது கூட, அதை ஓரங்கட்டிவிட்டு, பைக்கை கிளப்பிக்கொண்டு ஒரு தனி மனிதராக ரேசிங் போக வைத்திருக்கிறது.
அஜித் திரையில் ஆடுவதை விட அவர் நடப்பதே ஸ்டைலாக இருக்கும்.. இந்த நடை, மேனரிசம் எல்லாமே அவரது அப்பாவின் கொடைதான்.
இப்படி ஒரு அப்பாவாக, ஒரு நண்பராக இருந்ததால் அஜித்திற்கும் அவரது அப்பாவுக்கு இடையில் உறவின் மீது உரசல்கள் இருந்தது இல்லை.
அஜித் திருமணமானப் பின்பும் கூட, தன்னுடைய அப்பாவையும், அம்மாவையும் தனக்கு பக்கத்திலேயே வைத்து கொண்டார். ஷாலினியும் அக்கறையுடன் கவனித்து கொள்வார்.
ஷூட்டிங் இல்லாத சமயங்களில் அஜித் சமையலில், மதிய உணவு தயாராகும். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளுடன் ஒரு கலகலப்பான பொழுதாக அமைவதில் அஜித் ரொம்பவே மெனக்கெடுவார்.
ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இந்த சந்தோஷம் கொஞ்சம் பறிப்போனது. அஜித்தின் அப்பாவிற்கு பக்கவாதம். நடக்க முடியாத சூழ்நிலை.
இதனால் முழு நேர மருத்துவ கவனிப்புடன் தந்தையைப் பார்த்து கொண்டார் அஜித்.
‘துணிவு’ படம் வெளியாகும் நேரத்தில்தான் அஜித் அப்பாவின் உடல்நிலை மோசமான நிலையை எட்டியது. இதனால் துணிவு ரிலீஸ் மீது இருந்ததை விட அப்பா உடல்நிலை குறித்த படபடப்பு அஜித்திற்கு அதிகமிருந்தது.
ஆனால் இப்போது அப்பா இல்லை.
மழைக்கும், வெயிலுக்கும் இளைப்பார ஒரு கூரை கொடுக்கிற… நல்லது கெட்டது என எல்லாவற்றையும் பேச இடம் கொடுக்கிற… அன்பையும், காதலையும், உறவையும் கொண்டாட்டத்தையும் பரிமாறிக் கொள்ள தளம் கொடுக்கிற….. ஊருக்கு மத்தியில் இருக்கும் ஒரு ஆலமரம் வேறோடு சாய்ந்தால் எப்படி இருக்கும்? ஆலமரமில்லாத அந்த வெறுமையான இடத்தைப் பார்க்கும் போதெல்லாம் எப்படியெல்லாம் நினைவுகள் வந்து தாக்குமோ மனதிற்குள் வலிக்குமோ அப்படியொரு சூழல் இப்போது அஜித் குமாருக்கு.
எவ்வளவோ வலிகளை தாங்கிய அஜித், இந்த இழப்பின் வலியிலிருந்தும் மீண்டு வருவார்.
‘If the people we love are stolen from us, the way to have them live on is to never stop loving them’