தமிழ் மொழியின், தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ததில் முக்கியமானது கீழடி அகழாய்வு. இந்த அகழாய்வின் தொடக்கப்புள்ளியாகவும் காரணமாகவும் இருந்தவர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் கீழடி அகழாய்வு ஏன் முக்கியமானது என்பது தொடர்பாக அமர்நாத் ராமகிருஷ்ணா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.
கீழடியில் அகழாய்வு செய்யலாம் என்று முதலில் எதனடிப்படையில் முடிவு செய்தீர்கள்?
இதுவரை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இரண்டு முறைகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்று, தற்செயலான கண்டுபிடிப்பு (Accidental discovery) வேறு எதற்காகவோ ஒரு இடத்தில் தோண்டும் போது, எதேச்சையாக சில தடயங்கள் கிடைக்கும். சிந்துசமவெளி நாகரிகங்கள் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் ரயில் வழித்தடம் அமைப்பதற்காக தோண்டியபோது, பிராமணாபாத் என்ற இடத்தில் பெரிய பெரிய செங்கற்கள் கிடைத்தது. இதனால்தான் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அது என்பது தெரியவந்தது.
அதற்கு முன்பு 1861இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அந்த இடத்தை பார்த்துள்ளார். ‘புத்த ஸ்தூபங்கள் போல இருக்கு. எனவே, புத்தர் காலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாகத்தான் அது இருக்க வேண்டும்’ என்றுதான் சொன்னார். இந்நிலையில், பிராமணாபாத்தில் கிடைத்த செங்கற்கள் அடிப்படையில் இங்கே ஒரு நகர நாகரிகம் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டினார்கள். அப்படித்தான் சிந்துசமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்செயல் கண்டுபிடிப்பு. இதுபோல்தான், தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரும் ரயில்வே வழித்தடம் அமைக்கும்போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னொரு முறை, அறிவியல் முறைப்படி அணுகுவது. அப்படித்தான் கீழடி கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையின் பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் இலக்கிய ஆதாரங்களைப் போலவே எண்ணிலடங்காத வரலாற்று மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன. இந்தியாவில் இதுவரை கண்டறியபட்ட கல்வெட்டுகளில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்துதான், காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருக்கின்றன. மதுரை அருகே சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிமான் கோம்பை நடுகல் தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கும் முன்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர். திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய மன்னன் பெருமணலூரை (தற்போது மணலூர்) தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்ததாக உள்ளது. இதேபோன்று பல்வகை ஆதாரங்கள் இருந்தும்கூட இப்பகுதியில் விரிவான தொல்லியல் அகழாய்வு ஏதும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில்தான் மதுரை அருகே அகழாய்வு மேற்கொள்ள முடிவெடுத்தோம்.
2013ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினோம். ஆனால், தற்போதைய நிலையில் மதுரை நகருக்குள் தோண்ட முடியாது. எனவே, மதுரை அருகே அகழாய்வு செய்ய ஒரு சிறந்த இடத்தைத் தேடினோம். தென்தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது வைகை நதி. மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிமலை அருகில் உற்பத்தியாகி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்றங்கரை என்னும் பகுதியில் கடலில் கலக்கிறது. இதன் பள்ளத்தாக்கு முழுக்கத் தொல்லியல் வளமிக்கப் பகுதியாக இருக்கிறது. எனவே, வருசநாட்டில் ஆரம்பித்து ஆற்றங்கரை வரை, வைகை நதியின் இரண்டு பக்கமும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தேடுதலை மேற்கொண்டோம். இந்தக் கள ஆய்வில் மண்மேடுகள், முதுமக்கள் தாழி, பெருங்கற்கால அடையாளங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்ற தொல்லியல் சான்றுகள் 293 இடங்களில் கிடைத்தன. இதில், மூன்று மீட்டர் உயரம் கொண்ட மண் மேடாகவும், மூன்றரை ஏக்கர் சுற்றளவும் 80 ஏக்கர் பரப்பும் கொண்டதாகக் கீழடியிலுள்ள பள்ளிச்சந்தைத் திடல் தொல்லியல் மேடு இருந்தது.
பழங்காலத் தொல்லியல் சான்றுகள் இருக்கும் இடத்தையும் ஓர் ஊர் இருந்து அழிந்து போனதையும் தொல்லியல் மேடு என அழைப்போம். இவ்வளவு பெரிய தொல்லியல் மேடு கிடைப்பது மிகவும் அரிது. இந்த இடம், மதுரை – ராமேஸ்வரம் இடையேயான பழங்கால வணிகப் பாதையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே, கீழடியில் அகழாய்வு செய்வது என முடிவு செய்தோம். முறையாகத் தொல்லியல் மேட்டை ஆராய்ந்து அளந்த பின் பலவகைக் கட்டங்களாகப் பிரித்தோம். 10-க்கு 10 மீட்டர் சதுர பரப்பளவில் 4-க்கு 4 மீட்டர் அளவில் குழிகளை தோண்ட தொடங்கினோம்.
நீங்கள் தொடங்கியது முதல் இதுவரை கீழடியில் எட்டு கட்ட அகழாய்வுகள் நடந்ததுள்ளது. இதுவரை கிடைத்துள்ளவற்றின் அடிப்படையில் கீழடி அகழாய்வு காட்டும் உண்மை என்ன? வரலாற்றின் அதன் முக்கியத்துவம் என்ன என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில், இங்கே ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்களை முதலில் கொடுத்துள்ளது கீழடிதான். இதனால், இதுபோல் இன்னும் பல ஆய்வுகளை செய்ய கீழடி நமக்கு ஒரு தொடக்கமாக இருக்கிறது. சங்க காலத்தின் பரப்பளவை முழுமையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கீழடி போல் இன்னும் பல ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும். அதற்கான தரவை கீழடி நமக்கு கொடுத்துள்ளது என்பதுதான் அதன் முதன்மையான முக்கியத்துவம் என்று நான் நினைக்கிறேன்.
கிடைத்துள்ள தடயங்கள் அடிப்படையில் கீழடியின் காலகட்டத்தை எதிலிருந்து எது வரை வரையறை செய்துள்ளீர்கள்?
கிமு 800 முதல் கிபி 300 வரை, ஆயிரம் ஆண்டுகள் அங்கு ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கிமு 800இல் தோன்றி வளர்ந்து பின்னர் சரிவடைந்துள்ளது. கிமு 800 முதல் கிமு 500 வரையான காலகட்டம் ஒரு நகரம் உருவாவதற்கான முந்தைய காலம். கிமு 500 முதல் கிமு 100 வரை வளர்ச்சியடைந்த நகரமாக இருந்துள்ளது. கிமு 100 முதல் கிபி 300 வரை அந்த நகரம் நலிவடைந்த காலகட்டமாக நாங்கள் கணித்துள்ளோம்.