திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் எதிரணி இருக்க முடியாது என்பது திமுகவின் கருத்தாக இருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, தெலாங்கானாவில் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் ஜகன்மோகன், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பீகாரில் நிதிஷ் குமார்…. இப்படி காங்கிரசை எதிர்க்கும் பலர் இருக்கிறார்களே?
தேசிய அடையாளம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ். எனவே, மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸும் இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதைத்தான் சொல்லியிருக்கிறோம்.
2024 தேர்தல் பற்றிய உங்கள் கணிப்பு என்ன?
பாஜக, ஊடகம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதானிக்கு என்.டி.டி.வி.யை வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஹிட்லர், முசோலினி மாதிரி நடந்துகொள்கிறார்கள். ஹிட்லருக்கும் முசோலினிக்கும் என்ன முடிவு வந்தது எல்லோருக்கும் தெரியும். அதுதான் இவர்களுக்கும் நடக்கும். 2024இல் ஆட்சி மாற்றம் இருக்கும் என்பதற்கான நம்பிக்கை தொடக்கம் இப்போதே ஆரம்பித்துவிட்டது. அதானி பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு உதாரணம். இன்னும் பல ஊழல்கள் வெளிவரும். இதுவரை பேச மறுத்தவர்கள் எல்லாம் இனி பேச ஆரம்பிப்பார்கள். பாஜகவின் ஊழல், மதவாத முகத்திரை கிழியும்.
திமுகவை இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்ற முத்திரையை பாஜகவினர் தொடர்ந்து குத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்கொள்ள திமுக வைத்திருக்கும் திட்டம் என்ன?
இதற்கான நன்றி பாராட்டுக்குறியவர் நம் ஆளுநர்தான். சனாதனம்தான் சிறந்தது என்று அவர் சொல்லியுள்ளார். இந்து என்று பெயர் வருவதற்கு முன் இதற்கு பெயர் பெயர் சனாதனம். இந்து பானாரஸ் பல்கலைக்கழகம் 1916இல் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. சனாதனம் என்றால் என்ன என்பதற்கு ஆதார நூல் அதுதான். அந்த புத்தகத்தில், ‘இந்து மதம் ஆரியர்களுக்கு சொந்தமானது. அவர்கள் அனைவரையும்விட உயர்ந்தவர்கள், அழகானவர்கள்’ என்று சொல்கிறது.
சனாதனம் போன்ற இந்து மத தத்துவங்களுக்குதான் நாங்கள் எதிரி; எல்லா இந்துக்களுக்கும் அல்ல. அருந்ததியருக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தது நாங்கள்; வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தவப்பட்டவர்கள் என்று கொடுத்தது நாங்கள்; இதுபோல் முக்குலத்தோருக்கு, ஆதி திராவிடர்களுக்கு கொடுத்தது நாங்கள்தானே. இவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே. பிராமணர் அல்லாதவர்களுக்கு கோயிலை, சாலையை, பள்ளிக்கூடத்தை, மருத்துவமனைகளை திறந்துவிட்டது நாங்கள்தானே. பெண்ணுக்கு கல்வி கொடு என்று சொன்னோம். கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களுக்கா அதை சொன்னோம், இந்து பெண்களுக்குதானே சொன்னோம். இந்துக்கள் என்று சட்டத்தால் அறியப்பட்டவர்கள் எல்லோருக்கும் 100 வருடங்களாக நாங்கள்தான் உரிமை வாங்கிக்கொடுத்தோம்.
இந்து சனாதன தத்துவப்படி உயர இருக்கிறதாக சொல்லும் பிராமணர், ஒரே குலம் ஒரே தேசம் என்கிறாரே, கடைசியில் இருக்கிற அருந்ததியர் சாப்பிடும் உணவை அவர் சாப்பிடுவாரா? இந்துக்கள் என்ற பெயரால் யாரை ஏமாற்றுகிறார்கள்?
இந்துக்களிலேயே சமத்துவத்தை எதிர்க்கிற சனாதன இந்து, சாமானிய இந்து என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். 2000 வருடங்களாக சபிக்கப்பட்ட சாமானிய இந்துக்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம். இதை புரிந்துகொண்டால் சனாதன இந்துக்கள் செய்யும் துஷ்பிரயோகத்தை சுலபமாக முறியடிக்கலாம்.
தொடரும்