No menu items!

50,674 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதாதது ஏன்? அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!

50,674 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதாதது ஏன்? அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!

தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13-03-23 அன்று தொடங்கியது. 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்த நிலையில், முதல்நாள் நடைபெற்ற மொழித் தாள் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல், கல்வி வட்டாரத்தைக் கடந்து தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் 50,674 மாணவர்கள் ஆப்செண்ட் ஆனார்கள்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? அரசுப் பள்ளி ஆசிரியரும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சு. உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

“கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாததன் நீட்சியாக இன்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு வர விருப்பமின்றி இருக்கின்றனர். பெற்றோர்களை ஏமாற்றி, பள்ளிக்கு வருவதுபோல் வந்துவிட்டு வெளியே போய் போதை, குடிப் பழக்கங்களுக்கு ஆளாவது, மாணவர்கள்- மாணவிகள் சேர்ந்து சுற்றுவது ஆகியவற்றையும் காண முடிகிறது. அத்தகைய குழந்தைகளைக் கையாள்வதில், பள்ளிக்கு அனுப்புவதில் அவர்களது பெற்றோர்களும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் மாணவிகள் படிக்கும்போதே திருமணங்கள் செய்துகொடுப்பது, மாணவர்கள் வேலைக்குச் செல்வது உள்ளிட்ட காரணங்களாலும் இடை நிற்றல் ஏற்படுகிறது. வேலைக்குச் சென்று கையில் காசு பார்த்துவிட்ட மாணவர்கள் பள்ளியைத் தவிர்ப்பது நடக்கிறது. பள்ளிக்கே வராமல் பொதுத் தேர்வுகளுக்கு மட்டும் வந்துசெல்லும் குழந்தைகளும் உண்டு.

கடந்த 2022 டிசம்பர் 02 அன்று நான் நேரடியாகக் களத்தில் சந்தித்த ஒரு அனுபவத்தை சொல்கிறேன். இது எங்கோ கிராமத்தில் நடந்ததல்ல… சென்னை நகரத்தின் மையப் பகுதியில் நடந்தது.

எனது வகுப்பு மாணவி ஒருவர் 2022 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒரு நாள் கூட பள்ளிக்கு வரவில்லை. வாரத்தில் மூன்று முறை அல்லது நான்கு முறை அலைபேசி வழியே தொடர்புகொண்டு பேசுவேன். வயிற்றுவலி,‌ தலைவலி, பல்வலி, கண்வலி என்று ஒன்றுவிடாமல் காரணங்களைக் கூறுவார். ஆரம்பத்தில் நம்பினேன்.

su. uma mageswari
சு. உமா மகேஸ்வரி

பிறகு இது தொடரவே சந்தேகம் வந்து பெற்றோருடன் பேசினேன். அவர்களுக்கு பூ கட்டும் வேலை. ஆதலால் காலை நேரத்திலேயே வெளியே சென்றுவிடுகின்றனர். எனவே, அவர்களால் கவனிக்க முடியவில்லை. இதனால், அவர்களும் தங்கள் குழந்தைக்கு உடல்நலமின்மை எனக் கூறிடவே மீண்டும் நம்ப வேண்டிய சூழல் எனக்கு. ஆனால், அதன்பின்னர் அருகில் வசிக்கும் சில குழந்தைகளிடம் விசாரித்தால் பல விதமான பதில்கள் கிடைத்தன.

இப்படியே இரண்டு மாதங்கள் கடந்தன. அரையாண்டுத் தேர்வு வந்துவிடுமே என்று கவலையுடன் ஒரு மாணவியை அழைத்து உதவி கேட்டேன். வீட்டைக் காண்பிப்பதாகக் கூறினார். தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று, மாலை 3 மணி அளவில் நேரடியாக அந்த மாணவியின் வீட்டைக் தேடிக் கண்டுபிடித்துச் சென்றுவிட்டோம்.

அங்கு நான் தேடிச் சென்ற மாணவியோ வீட்டில் இல்லை. அருகே ஒரு வயதான மூதாட்டி பூ கட்டும் வேலையில் இருக்க அவரே அந்த மாணவியின் பாட்டி எனத் தெரிந்தது. பேத்தியை ஒரு விசேஷத்திற்காக மகனும் மருமகளும் அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறினார். இரண்டு மாதங்களாக பள்ளிக்கு வராதது குறித்து கேட்க, தனது பேத்தி வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதாகவும் தூங்குவதாகவும் கூறினார்.

அலைபேசியில் அவர்கள் பெற்றோரை அழைத்து நன்றாகத் திட்டினேன். காவல்துறையில் புகார் அளிப்பேன், குழந்தையை பள்ளிக்கு அனுப்பாதது குற்றம் எனக் கூறினேன்.

பிறகு இரண்டு தினங்கள் கழித்து பள்ளிக்குக் குழந்தையை அழைத்து வந்த அவரது அப்பாவிடம் கனிவாகப் பேசியும் கண்டித்தும் பள்ளிக்கு அனுப்பக் கூறினோம்.

மாணவியிடம் நான் ஒரு உறுதி கூறினேன். “அரையாண்டுத் தேர்வு குறித்து நீ பயப்பட வேண்டாம். ஜீரோ மார்க் வாங்கினாலும் பரவாயில்லை. பள்ளிக்கு மட்டும் லீவு போடாதே, தினமும் வந்துவிடு. உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்று கூறினேன்.

இன்று வரை தொடர்ச்சியாக வருகிறார் அந்த மாணவி. இது போல் நான் செல்லும் வகுப்பறைகளில் இன்னும் சில மாணவிகளின் கதைகள் உண்டு.

6ஆம் வகுப்பில் இருந்தே இந்த பிரச்சினை தொடங்குகிறது. அவர்களை பள்ளிக்கு வரவழைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பதுதான் உண்மை. பெற்றோருக்கு அவர்கள் அன்றாடம் ஈட்டும் வாழ்வாதாரத்தின் அவசியம். வீடுகளில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் கண்டுகொள்வதில்லை.

சென்னை நகரத்தின் மையப்பகுதி கதை இப்படி என்றால் கிராமங்களில் எப்படியிருக்கும்?

ஆனால், எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டால் கல்வித்துறை EMIS கணக்கைக் காட்டி, ‘ஒரு குழந்தை கூட பள்ளிக்கு வராமல் இல்லை’ என்கிறது. கள எதார்த்தத்துக்கும் EMIS கணக்குக்கும் ஏன் இத்தனை இடைவெளி?

முன்பெல்லாம் நேரடியாக வருகைப் பதிவேட்டை நிர்வகித்தார்கள். அப்போது 2, 3 மாதங்கள் பார்ப்பார்கள். மாணவர்கள் வரவில்லையெனில் பெயரை எடுத்துவிடுவார்கள். ஆனால், இப்போது எமிஸ் செயலியில் அவ்வாறு செய்வதில்லை. பள்ளிக்கு ஒருநாள் வந்தால்கூட பெயர் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு  ‘ஒரு குழந்தை கூட பள்ளிக்கு வராமல் இல்லை’ என்கிறது கல்வித்துறை.

இப்படி கல்வித்துறை அதிகாரிகள் ஆன்லைனை மட்டுமே நம்பாமல் நேரடியாக பள்ளிக்குச் சென்று பார்த்தால்தான் கள எதார்த்தம் புரியும். இதைச் செய்யாமல் எல்லாமே சரியாக இருக்கிறது என்று அரசு சொல்வதுதான் பிரச்சினை. கள எதார்த்தத்தைப் பேசி தீர்வை நோக்கி நகர இங்கு எவருக்கும் நேரமில்லை.

முதலில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் – மாணவர்கள் உரையாடல் சாத்தியப்பட வேண்டும். பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்கள் என்ற முக்கோண உறவு இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை அரசு புகட்ட வேண்டும். மேல்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்காமல், அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, தீர்வு காண முயல வேண்டும்

ஆசிரியர்கள் அதிகாரத்தை விடுத்து, அன்பைக் காட்ட வேண்டும். மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். இதற்கு அரசு ஆசிரியர்களைக் கற்பித்தல் வேலையை மட்டும் செய்யவிட வேண்டும். பிற எழுத்து, நிர்வாகப் பணிகளுக்குத் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்” என்கிறார் சு. உமா மகேஸ்வரி.

அரசு இதை கவனிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...