பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். இந்த திறப்பு விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல்வருடன் பொம்மன் – பெள்ளி தம்பதி சந்திப்பு
ஆஸ்கர் வென்ற ஆவண படத்தில் காட்டப்பட்ட பொம்மன் – பெள்ளி தம்பதியினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில் பொம்மன் நிரந்தர பணியாளராகவும், பெள்ளி தற்காலிக பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார். இந்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த ஆவனப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான பொம்மனும், பெள்ளியும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்
திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் நேரு திறந்து வைத்த நிலையில் இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடியாக அமைச்சர் நேரு ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி முர்மு 21-ம் தேதி கன்னியாகுமரி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார்.
இதற்காக அவர் தனிப்படகில் அங்கு செல்கிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண தரிசன சித்திரகூடத்தை பார்வையிடுகிறார்.
அதன்பின்பு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.