ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற 3 மாதங்களிலேயே இந்தியாவின் எளிமையான முதல்வர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதல்வரான சுக்வீந்தர் சிங் சுகு. ஹிமாச்சல பிரதேச சட்டசபையில் நேற்று படெஜெட் தாக்கல் செய்வதற்காக வந்த அவர் பயன்படுத்தியது 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பழைய ஆல்டோ கார்.
இதுபற்றிக் கேட்டால், “என் அப்பா ஒரு அரசு பேருந்து ஓட்டுநர். மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எம்எல்ஏ ஆவதற்கு முன் சாதாரண பால் கடையை வைத்திருந்தேன். அப்போதும் எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். என்னால் அந்த பொருளாதார சூழ்ழலை விட்டு வெளியே வர முடியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்த ஆல்டோ காரை வாங்கினேன். பல கட்டங்களில் என்னோடு இந்தக் கார் பயணித்துள்ளது. அதனால் இந்த காரை மாற்ற எனக்கு மனம் வரவில்லை. என் பொருளாதார சூழலும் அதற்கு ஏற்றதாக இல்லை” என்கிறார்.
கார் மட்டுமல்ல, சுகுவின் உணவுப் பழக்கம்கூட ஹிமாச்சலப் பிரதேச மக்கள் மத்தியில் அவரது இமேஜை உயர்த்தி இருக்கிறது. சாதாரண தலைவர்கள்கூட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் வலம்வந்து நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடும்போது, சுகுவோ தன் உதவியாளர்களுடன் நெரிசல் மிகுந்த சாதாரண ஓட்டல்களில் ஒரு ஓரமாக அமர்ந்து அமைதியாக சாப்பிடுகிறார்.
“நட்சத்திர ஓட்டல்கள் எல்லாம் நம் நட்சத்திர அந்தஸ்து பறிபோனதும் விலகிப் போய்விடும். ஆனால் சாதாரண ஓட்டல்கள்தான் எப்போதும் நமக்கு கைகொடுக்கும். அதனால் கடந்த பல காலமாக நான் சாப்பிடும் ஓட்டல்களிலேயே இப்போதும் சாப்பிடுகிறேன்” என்று இதற்கு விளக்கம் கொடுக்கிறார் சுகு.
காலையில் உதவியாளரை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்கிங் செல்வது சுகுவின் வழக்கம். இந்த சமயத்தை மக்களுடன் பேசுவதற்கும், கடைகளில் விலைவாசியைத் தெரிந்துகொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.
இதுபோன்ற குணங்களால் மக்கள் மத்தியில் ஹீரோவாக பார்க்கப்படும் சுகு, அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக எம் எல் ஏக்களுக்கு வில்லனாக தெரிகிறார், ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஹிமாச்சல் பவனில் எம் எல் ஏக்ககளின் உணவுக்கு அரசு வழங்கிவந்த மானியத்ய்தைக் குறைத்தார். அத்துடன் அவர்களின் வீடுகளுக்கான வாடகையையும் உயர்த்தினார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இதுபற்றி கேள்வி எழுந்தபோது, “ஹிமாச்சலப் பிரதேசத்தின் கடன்கள் அதிகமாக உள்ளன. இதன்படி இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் 1 லட்ச ரூபாய் கடன் சுமை உள்ளது. மக்கள் கடனில் தத்தளிக்கும்போது எம்எல்ஏக்களுக்கு மட்டும் எப்படி சலுகைகளைக் கொடுப்பது? நாம் மாநில மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக பதவிக்கு வந்தவர்கள். அவர்களின் சுமையை அதிகரிப்பதற்காக பதவிக்கு வந்தவர்கள் அல்ல. மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேறி, மக்களின் நிலை மாறியதும் எம்எல்ஏக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் ” என்று கூறியிருக்கிறார் சுகு.