No menu items!

IPL 2023 – வீட்டுக்குப் போகும் வீரர்கள்

IPL 2023 – வீட்டுக்குப் போகும் வீரர்கள்

யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே காயங்களால் பல வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் காயங்களால் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. நட்சத்திர வீரர்கள் பலர் வெளியேறும் நிலையில் இந்த ஆண்டில் ஐபிஎல் போட்டிகள்  பழைய விறுவிறுப்புடன் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வீரர்களின் காயத்தால் இந்த முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அணி டெல்லி டேர்டெவில்ஸ்தான்.   கேப்டன் ரிஷப் பந்துக்கு ஏற்பட்டுள்ள காயம், அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்றுகொண்டு இருந்த ரிஷப் பந்த், சாலை விபத்தில் சிக்கிக்கொள்ள அடுத்த 2 ஆண்டுகளாவது போட்டிகளில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்த்துக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான வார்னர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது  டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் அவரும் காயமடைந்தது டெல்லி டேர்டெவில்ஸை பெரிதாக பாதித்துள்ளது. இந்த இரு வீரர்கள் மட்டுமின்றி சர்பிராஸ் கான், பந்துவீச்சாளர் நோர்ஜே ஆகியோரும் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்க, அவர்களுக்கு பதில் புதிய வீரர்களை தேடிக்கொண்டு இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்.

டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இப்போது நேரம் சரியில்லை. முதுகில் அறுவைச் சிகிச்சை செய்துள்ள வேகப்பந்து வீச்சாலர் பும்ராவை இன்னும் 4 மாதங்களாவது மைதானத்தில் பார்க்க முடியாது என்று சொல்கிறது கிரிக்கெட் வட்டாரம். அவருக்குத்தான் இப்படி என்றால் மிகப்பெரிய அளவில் சமீபத்தில் காசு கொடுத்து வாங்கிய ஜெய் ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகமே என்ற அதிர்ச்சி செய்தி மும்பை இந்தியன்ஸை தாக்கியுள்ளது.

சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியின் நிலையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. தோனிக்கு மாற்றாக இருப்பார் என்ற நம்பிக்கையில் மிக அதிக தொகை கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் ஒரு பக்கம் முட்டி வலி,  மறுபக்கம் ஆஷஸ் தொடர் என்று அவரது கழுத்தை நெரிக்க, ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸ் ஆடுவாரா என்பதே இபோது கேள்விக் குறியாக இருக்கிறது. அவரது நிலை இப்படி இருக்க, இந்த ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கிய மற்றொரு வீரரான நியூஸிலாந்தின் கைல் ஜெமிசன், காயத்தால் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகி இருக்கிறார். இப்போது ஜெமிசனுக்கு பதிலாக மாற்று வீரரை தேடிக்கொண்டு இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இவர்களைப் போலவே ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்), பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய வீரர்களும் காயத்தால் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளனர்.

இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் வீரர் ஸ்ரேயஸ் ஐயர். கேகேஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதனால் அவர் ஐபிஎல்லில் ஆடுவாரா என்று பதற்றத்துடன் நகத்தை கடித்துக்கொண்டு இருக்கிறார்கள் கொல்கத்தா அணியின் ரசிகர்கள்.

இப்படி ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே 11 வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட, இந்த தொடர் மேலும் எத்தனை வீரர்களை காயப்படுத்துமோ என்று பதற்றத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...