டிஜிட்டல் பண பரிவர்த்தனை இன்று நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை பலவற்றுக்கும் யுபிஐ வசதியை பயன்படுத்தியே பணம் செலுத்துகிறோம். இந்த முறை மிக எளிதாகவும் உள்ளது. இந்நிலையில், இதிலும் மோசடிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. ஜிபே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது என்ன மோசடி? இதில் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்வது எப்படி? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு சைபர் செக்யூரிட்டி நிபுணர் சதீஷ் அஸ்வின் அளித்த விளக்கம் இங்கே…
“ஜிபே-இல் ஒருவருக்கு பணம் அனுப்புவதுபோல் ஒருவரிடம் இருந்து பணத்தை கேட்டுப் பெறவும் முடியும். இந்த இரண்டாவது செயல் பற்றிய மக்களின் அறியாமையை பயன்படுத்தியே இப்பொது மோசடிகள் நசைபெற்று வருகின்றன.
சில சமயம் சிலர் ஜிபே-இல் பணம் போடும்போது, கவனக்குறைவால் தவறுதலாக வேறு ஒருவர் எண்ணை குறிப்பிட்டு மாற்றி பணத்தை போட்டுவிடுவார்கள். அப்படி நாம் ஒருவருக்கு மாற்றி பணத்தை போட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, நம் நிலைமையைச் சொல்லி பணத்தை திருப்பி கேட்டு வாங்கிக்கொள்வோம். இதுபோல் யாராவது நமக்கு தவறுதலாக பணத்தை போட்டிருந்தால், அதை அவர்கள் கேட்டதும் திருப்பி கொடுத்துவிடுவோம்.
இந்த நடைமுறையைத்தான் ஜிபே புது திருடர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதலில் நமக்கு ஒரு 500 ரூபாயை போடுவார்கள். பின்னர் நம்மை அழைத்து, தவறுதலாக உங்கள் கணக்கில் 500 ருபாயை போட்டுவிட்டோம். திருப்பி போட்டுவிட முடியுமா என்று கேட்பார்கள். நாமும் உடனே இறக்கப்பட்டு பணத்தைப் போடுவோம்.
அப்போது, அந்த பணத்தைப் பெறுவதற்காக, நான் முதலில் சொன்ன பணத்தை பெறும் ஆஃப்சனை பயன்படுத்தி நமக்கு ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பி அதில் போட சொல்லுவார்கள். அந்த ரிக்வெஸ்டில் 500க்கு பதிலாக 5000 அல்லது அதிகமான தொகை குறிப்பிட்டு இருப்பார்கள். அதேநேரம் அதை நாம் கவனிக்க முடியாதபடி நம்முடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே நம் கவனத்தை திசை திருப்புவார்கள். நாமும் அவசரத்தில் அதை க்ளிக் செய்துவிடுவோம். அவ்வளவுதான் நம் கணக்கில் இருந்து அவர்கள் கேட்ட பணம் சென்றுவிடும்.
அதிகமான பணத்தை போட்டுவிட்டோம் என்று தெரிந்து அதன்பின்னர் அவர்களை தொடர்புகொண்டால் போனை எடுக்கவே மாட்டார்கள்.