அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கியது. இதில், தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், தெலுங்கில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன.
`எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த, தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விழா மேடையிலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை அந்த பாடல் வென்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு சந்திரபோஸ் வரிகள் கொடுத்துள்ளார். இந்திய மொழித் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான முதல் முழு நீளப் படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது.
இன்புளூயன்சா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ” கோவாவுக்கு சென்று திருச்சி திரும்பிய இளைஞர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பிற்கு காரணம், கொரோனாவா அல்லது இன்புளூயன்சா பாதிப்பு என ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவில் என்னவென்று தெரியவரும்.
இன்புளூயன்சா வரைஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. சமுதாய & சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம். ப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு தற்போது அவசியம் இல்லை. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிறப்பு காய்ச்சல் முகாம் மூலம் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட 2,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூன் மாதம் நடக்கிறது. இப்போட்டிக்கு ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. மற்றொரு இடத்தைப் பிடிக்க இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோற்றதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்தியா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பள்ளி தோழர்களின் ‘ரி யூனியன்‘ நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள் தலைமறைவு
கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும் மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டனர். இதில், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும், இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதல் வசப்பட்டு இருந்தனர். ஆனால், அந்த மாணவரும் மாணவியும் தங்கள் காதலை வெளிப்படுத்திய போது குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவருக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்பு அவர்களுக்கென குடும்பம், குழந்தைகளும் பிறந்து விட்டனர். ஆனாலும், முதல் காதலும் அது நிறைவேறாத ஏக்கமும் இருவருக்குள்ளும் இருந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் இவர்களின் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பள்ளியில் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர். 50 வயதை நெருங்கி விட்ட எர்ணாகுளம் மாணவரும் இடுக்கி மாணவியும் வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் உணர்வு எட்டி பார்த்தது. அப்போது ஏற்பட்ட ஆர்வத்தில் ரி யூனியன் நிகழ்ச்சியில் இருந்து இருவரும் நைசாக வெளியே வந்து தனியாக பேசத்தொடங்கினர். ரி யூனியன் நிகழ்ச்சி முடிந்த போது இருவரும் பள்ளியில் இருந்து மாயமாகி இருந்தனர். ரி யூனியன் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை தேடிய போதுதான் இருவரும் சேர்ந்தே மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி எர்ணாகுளம் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோடியை தேடி வருகிறார்கள். இது ரி யூனியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.