ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் மார்ச் 12-ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ஒரே காரணம்.
‘நாட்டு நாட்டு’ [‘Naatu Naatu’] பாடலுக்கு, ’பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ [best original song] பிரிவில் ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்புதான்.
’பாகுபலி’ படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பார்வையையும் தன் மீது விழ வைத்த எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் இந்தாண்டின் ஆஸ்கர் விருதிற்கான ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவுக்கு ஜனவரி 24-ம் தேதி 2023 அன்று பரிந்துரைக்கப்பட்டதிலிருந்து இந்த எதிர்பார்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. சந்திரபோஸின் அதிரவைக்கும் வரிகளில், மரகதமணி என்றும் அழைக்கப்படும் கீரவாணி இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
நான்கு நிமிடம் 30 நொடிகள் வரை பரபரக்கும் இந்தப்பாடல், உக்ரைனில் இன்று பற்றியெரியும் நாட்டின் அதிபர் விலாடிமிர் ஸெலன்ஸ்கியின் [Volodymyr Zelensky] அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு முன்பு 2021-ல் ஷூட் செய்யப்பட்டது.
’ஆர்.ஆர்.ஆர்.’ [“RRR” – “Rise, Roar, Revolt”] படம் ஆஸ்கர் விருதுகளில் ’சிறந்தப் படம்’, ’சிறந்த இயக்குநர்’ பிரிவுகள் உட்பட 14 பிரிவுகளுக்கு சமர்ப்பித்தது. ஆனால் 13 பிரிவுகளுக்கு தகுதிப் பெறாவிட்டாலும், ’சிறந்த அசல் பாடல்’ பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாராத கொண்டாட்டம்தான்.
ஏற்கனவே இப்பாடல் ‘கோல்டன் க்ளோப் விருதை’ தட்டிச்சென்றிருக்கிறது. அடுத்து ஆர்.ஆர்.ஆர். படமும், ‘நாட்டு நாட்டு’ பாடலும் 28-வது லாஸ் ஏஞ்சலஸ் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை தன்வசமாக்கி இருக்கின்றன. அதேபோல் பிபிசி கல்ச்சர் ஃப்லிம்ஸ் க்ரிட்டிக்ஸ் [BBC Culture film critics] நிக்கோலஸ் பார்பர் [Nicholas Barber], கேர்ன் ஜேம்ஸ் [Caryn James] இருவரும் தங்களது ’2022 டாப் 20 படங்கள்’ பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை குறிப்பிட்டுள்ளனர்.
ஹாலிவுட்டின் ஏ-லிஸ்ட் டைரக்டர்களான எட்கர் ரைட் [Edgar Wright], ஜேம்ஸ் கன் [James Gunn] இருவரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.
இப்படியொரு சூழலில், மேற்கத்திய இசையில் கோடிக்கணக்கான இதயங்களை தாளம் போடவைக்கும் லேடி காகா, ரைஹானா. டைலர் ஸ்விஃப்ட் என முப்பெரும் இசைப்புயல்களின் பாடல்களுக்கு கிடைத்த அதே வரவேற்பை பெற போட்டி களத்தில் இருக்கிறது.
நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் அது இந்திய இசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம். காரணம் Applause (Tell It Like a Woman), Hold My Hand (Top Gun: Maverick), Lift Me Up (Black Panther: Wakanda Forever), This Is a Life (Everything Everywhere All At Once) என டாக் க்ரூஸ் முதல் மார்வல் ஸ்டூடியோஸின் ப்ளாக் பேந்தர் வரை போட்டியில் பெருந்தலைகள் இருக்கிறார்கள்.
பிரபல ஹாலிவுட் நிருபர் ஒருவர் எஸ்.எஸ். ராஜமெளலியிடம் ‘’ஆர்.’ஆர்.ஆர்.’ சிறந்தப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்படமால் போனது பற்றிய் கேட்ட போது, ‘’ஆமாம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் அதை நினைத்துகொண்டு சும்மா உட்கார்ந்துகொண்டு யோசிக்கிற ஆட்கள் நாங்கள் இல்லை. ஏன் நடக்கவில்லை என்று யோசிப்பதை விட, நடந்தது நடந்ததுதான் என்று ஏற்றுகொண்டு, அடுத்து என்ன என்று எங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
ஆனாலும் எனக்கு சந்தோஷம்தான், ’செலோ ஷோ’ (Chhello Show/ The Last Film Show) படமும் இந்தியப் படம்தான். அதுவும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யபப்பட்டிருக்கிறது. அதனால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் விருதை வெல்ல ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு இன்னும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏன் கமிட்டி ஏன் தேர்ந்தெடுக்கவில்லை. என்ன கைட் லைன்கள் இருக்கின்றன என்பதும் தெரியவில்லை.’ என்றார்.
ராஜமெளலி சொன்னதைப் போல சும்மா இருக்கவில்லை. கடந்த ஏழெட்டு மாதங்களாக ஆஸ்கர் விருதை குறிவைத்து அமெரிக்காவுக்கும், ஹைதராபாத்திற்கும் இடைவிடாமல் பறந்து கொண்டே இருந்தார். கூடவே ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும். தங்களது வேலைகளை, ஷூட்டிங்கை விட்டுவிட்டு தங்களது இயக்குநருக்கு தோள் கொடுத்தார்கள்.
’’போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு பாராட்டுகளும், அன்பும் மக்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதற்கு மேல் கிடைக்கும் எதுவும் எங்களுக்கு எக்ஸ்ட்ராவா கிடைக்கும் உற்சாகம்தான். நடிகர்களாக எனக்கும், ஜூனியர் என்.டி.ஆருக்கும் இதுவே ரொம்ப திருப்தி. நல்ல சினிமாவிற்கு மொழி என்பது இல்லை என நான் நினைக்கிறேன். அதற்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ ஒரு நல்ல உதாரணம். இந்தமாதிரியான ஒரு படத்தில் என்னையும் ஒரு அங்கமாக எனது இயக்குநரி உருவாக்கியிருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என்று பஞ்ச் வைத்திருக்கிறார் ராம் சரண்.
இதன் பலன் இன்னும் சில மணி நேரங்களில் தெரிய இருக்கிறது.
மார்ச் 13- ம் தேதி காலை 5.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது ஆஸ்கர் விருது விழா. அதில் ஆஸ்கர் மேடையில் ’நாட்டு நாட்டு’ பாடலை இரண்டரை நிமிடம் லைவ் ஆக நிகழ்த்தி காட்ட இருக்கிறார்கள். இதற்கான ஒத்திகை முழுவீச்சில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் என்ன நம்முடைய பெருமை கீரவாணிக்குப் பதிலாக ரிக்கி மைனர் என்ற இசையமைப்பாளர் இதை லைவ்வாக இசைக்க இருக்கிறார். அதேபோல் ராம் சரண், ஜூனியர் என்.டி,ஆர் இவர்கள் இருவருக்குப் பதிலாக அமெரிக்க நடனக்கலைஞர்கள் ஆட இருக்கிறார்கள்.